‘பித்அத்துகள் அனைத்துமே நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடுகள்’ என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்க நாம் எவ்வாறு பித்அத்துகளை நல்ல பித்அத் என்றும் தீயவை என்றும் தரம் பிரிப்பது?. நமது சமுதாயத்திற்கு மார்க்கத்தை போதிக்கும் அறிஞர்களும் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்கு மாற்றமாக மார்க்கத்தில் உருவாக்கப்பட்ட புதிய அமல்களுக்கு ஆதரவு தந்து அவைகள் நடைபெறும் இடங்களுக்கும் சென்று அவற்றில் கலந்து கொள்கின்றனர். உண்மை பேசினால் எதிப்பு வரும், ஆதாயம, வருமானம் தேயும் என அறிந்து சிலர் அசட்டுத் தையத்துடன் மார்க்கத்தில் புதிது புதிதாக உருவானவைகளை பித்அத்துல் ஹஸனா (அழகான பித்அத்) என்று பெயரிட்டு அனுமதி வழங்கி ஆதரிக்கின்றனர். நபி (ஸல்) அவர்களோ நல்ல பித்அத், கெட்ட பித்அத் என பித்அத்களை வேறுபடுத்திக் காட்ட வில்லை. பித்அத்கள் அனைத்தும் வழிகேடுகள் என்று தான் சொன்னார்கள்.
முதலில் நாம் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் தன் திருமறையில் மார்க்கத்தை பரிபூரணப்படுத்திவிட்டதாக கூறுகிறானே தவிர இந்த உலக வாழ்க்கை வசதிகளை இல்லை. அல்லாஹ் கூறுகிறான்: –
‘இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்’ (அல் குர்ஆன் 16:8)
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த குதிரைகள், கோவேறு கழுதைககள் மற்றும் கழுதைகளை வாகனங்களாக படைத்திருப்பதாக் கூறியதோடு இன்னும் நீங்கள் அறியாத வாகனங்களைப்படைத்திருப்பதாக கூறுகிறான். இதிலிருந்து நாம் விளங்குவது என்னவென்றால் இன்று நாம் பயன் படுத்திக் கொண்டிருக்கும் கார், விமானம் போன்ற வாகனங்களை மட்டுமல்லாமல் இன்னும் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படக் கூடிய பிற வாகனங்களைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்துள்ளான் என்பதாகும்.
எனவே அவர்கள் எடுத்துவைக்கும் நாம் பயன்படுத்தும் கார், விமானம் போன்றவையும் பித்அத் ஆகாதா? என்ற கேள்வியும் அர்த்தமற்றதாகும். பித்அத் என்பது அமல்களில் புதிதாக உருவாக்குவது தானே தவிர உலக காரியங்களின் நடைமுறைகளில் அல்ல.
எனவே சகோதர சகோதரிகளே! சற்று சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் பித்அத்களைப் பற்றி கடுமையாக எச்சரித்திருக்க நாம் மேலே கூறிய மவ்லிது, ஹத்தம், பாத்திஹா போன்ற நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தராத செயல்களை பித்அத்துல் ஹஸனா என்ற பெயரிலும், நம்முடைய முன்னோர்கள் செய்து வந்தார்கள் என்றும் செய்தோமேயானால் அது நிச்சயமாக வழிகேடேயாகும்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் ‘நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும்செய்தால் அது நிராகரிக்கப்படும்’
‘(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்’ ஆதாரம்: அஹ்மத்
எனவே சகோதர சகோதரிகளே நபி (ஸல்) அவர்களால் கடுமையாக எச்சரிக்கபட்ட இந்த பித்அத்களை நாம் தவிர்த்துக் கொள்வதோடு, மற்றவர்களுக்கும் இத்தீமைகளைப் பற்றி எடுத்துக் கூற வல்ல இறைவன் நமக்கு அருள்பாலிக்க இறைவனிம் பிரார்த்திப்போம்.