M. அப்துல் காதிர், மண்டபம்
நிச்சயமாக நாம் ஒவ்வொன்றையும் ஒரு குறிப்பிட்ட விதிமுறையின்படி படைத்திருக்கின்றோம். அல்குர்ஆன் 54-49
வானங்களையும் பூமிகளையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எல்லா விதிகளையும் அல்லாஹ் தீர்மானித்து விட்டான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி
மனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான். நூல் திர்மிதி
விதி என்பது கிடையாது மதியைக் கொண்டு விதியை வென்று விடலாம் என்று கூறுபவர்களுக்கு மேற்காணும் திருமறையும் நபிமொழியும் ஓர் எடுத்துக் காட்டாகும்.
மனிதன் நிலையினை அல்லாஹ் தெளிவுபட விளக்குகின்றான் என்று நபி அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் மனிதனோ தன்னைத்தானே உயர்த்திக்கொண்டு எல்லாம் என் அறிவாற்றலால் வந்தது என்று பெருமையடித்துக் கொண்டு அலைவதை காண முடிகிறது.
அல்லாஹ் தன் திருமறையில்
நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை. அல்குர்ஆன் 64-11
பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும். அல்குர்ஆன் 57-22. இவ்வாறு திருமறை தெளிவாக கூறுகிறது.
மனிதன் எத்தகைய காரியங்கள் செய்தாலும் அல்லாஹ்வே அவனை செயல்படுத்துகிறான் என்பதை நபிஅவர்களின் பொன்மொழிகள் சான்று பகர்கின்றன.
அல்லாஹ் ஒவ்வொரு உயிரையும் படைத்து அதன் ஆயுளையும் அதன் உணவையும் அதற்கேற்படும் சோதனைகளையும் பதிவு செய்கிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூது(ரலி) நூல்: திர்மிதி
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் செய்கின்ற செயல்கள் சுயமாக செய்கிறோமா? அல்லது விதிப்படி நடக்கிறதா? என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள்.
கத்தாபின் மகனே! எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்ட விதிப்படியே நடக்கின்றன. ஒருவர் பாக்கிய சாலியாக இருந்தால் பாக்கியம் பெறுவதற்கே செயல்படுகிறார், துர்பாக்கியசாலியாக இருந்தால் துர்பாக்கியமடையும் வகையில் செயல்படுகிறார் என்று நபி அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: திர்மிதி
அப்படியெனில் நாங்கள் எல்லாம் விதிப்படியே நடக்கிறது என்று எண்ணி செயல்படாமல் இருக்கலாம் அல்லவா? என்று சஹாபாக்கள் நபி அவர்களிடத்தில் கேட்டார்கள்.
அதற்கு நபி அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள். “நீங்கள் செயல்படுங்கள்! ஒவ்வொரு வரும் எதற்காக படைக்கப்பட்டுள்ளனரோ அவற்றை செய்ய வேண்டும். நூல்: புகாரி, திர்மிதி
விதிதான் நிர்ணயம்
செய்யப்பட்டு விட்டதே என்று கண்ணைக் கட்டிக் கொண்டு கிணற்றில் விழுவோம்! விதிப்படி நடக்கட்டும் என்று கூறிக்கொண்டு செயல்படலாகாது. அதற்குத்தான் நபி அவர்கள் கூறினார்கள், எதற்காக படைக்கப்பட்டுள்ளோமோ அவற்றையே செய்ய வேண்டும். நாம் படைக்கப்பட்டதின் நோக்கம் இறைவணை வணங்க வேண்டும். மற்றும் உள்ள அன்றாட வேலைகள் மனிதனுக்கு ஏவப்பட்டுள்ளதை நல்லவைகளை மட்டுமே செய்யவேண்டும்.
இதைவிட்டு விதிதான் நிர்ணயம் செய்யப்பட்டு விட்டதே என்று தன் விருப்பத்திற்கு செயல்படுவதுதான் ஷைத்தானின் சூழ்ச்சியில் பின்னப்படுவதாகும். இறைவன் விதித்த விதி மரணத்தை தவிர மற்றவைகளை மாற்றுவதற்குறிய வழிமுறைகளை குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. அல்குர்ஆன் 2-186
(அவனை) நாடுபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான். அல்குர்ஆன் 42-13
இவ்வாறு அல்லாஹ் தன் அடியார்களை பிரார்த்தனை மூலம் கேட்கச் சொல்கிறான்.
பிரார்த்தனையை தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது. என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான்(ரலி) நூல்: திர்மிதி
பிரார்த்தனை எனும் பெயரில் வரம்பு மீறி கேட்டுவிட்டு எனது பிரார்த்தனைக்கு பயனில்லையே என்று மன வெறுப்பு அடைந்திடக்கூடாது. அல்லாஹ் “நான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துவேன் என்ற வசனத்தை மறந்துவிடக்கூடாது.
மேலும் ஒருவர் தமக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரே ஒரு முழம் மட்டுமே இருக்கும் அளவிற்கு நல்ல செயல்களை செய்து வருவார். விதி அவரை வென்று கெட்ட செயல்களை செய்து முடிவில் நரகில் நுழைவர்.
இதேபோல் ஒருவர் நரகத்திற்கும், தனக்கும் இடையே ஒரு முழம் மட்டுமே உள்ள அளவிற்கு நரகவாசிகளின் செயல்களை செய்து வருவார். விதி அவரை வென்று சொர்க்கவாசிகளின் செயல்களை செய்து சொர்க்கம் நுழைவார் என்று நபி அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) நூல்: புகாரி, திர்மிதி
மேற்காணும் ஹதீஸின்படி இறைவன் சொர்க்கத்திற்குரியவர்களையும், நரகத்திற்குரியவர்களையும் நிர்ணயம் செய்து விட்ட போதிலும் நல்வழியின் மூலமாகவும், பிரார்த்தனையின் மூலமாகவும் நரகவாசி என்ற நிலையில் உள்ளவர் விதியை வென்று சொர்க்கவாசியாக மாறிவிடலாம். என்பதனை இந்த ஹதீஸ் மூலம் அறிய முடிகிறது. ஆயினும் இதுவும் அல்லாஹ்வின் அறிவுக்கு உட்பட்டதே என்பதை மறுக்க வேண்டாம்.
எவர் நேர்வழியில் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மேலும் மேலும் நேர்வழியில் செலுத்துகிறான். அல்குர்ஆன் 19-76
என்று அல்லாஹ் திறுமறையில் கூறுவதுடன்
(எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் – அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கிறது. அல்குர்ஆன் 13-39 என்று விளக்குகிறான்.
“எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன். அல்குர்ஆன் 20-82
என்று திருமறையில் இறைவன் கூறுவதிலிருந்தே நாம் உணர்லாம். ஒருவன் தவறான வழியில் சென்று, பிறகு மனம் திருந்தி இறைவனிடம் பாவமன்னிப்பு தேடினால் அவனை அல்லாஹ் மன்னிப்பதாக கூறுகிறான். இருள் சூழ்ந்த உலகினில் வாழ்கின்றவர்களுக்கு ஒளியாக திகழ்வது திருமறையும், நபிவழி எனப்படும் ஹதீஸும்தான். இவற்றை பின்பற்றி நடந்தாலே நேர்வழி பெற்றவராக திகழ முடியும்.
ஒவ்வொரு குழந்தையும் இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றது. எனினும் அவர்களது பெற்றோர்களின் நிலையினால் அதைல் பின்னி பினைந்து விடுகின்றனர். அதனால்தான் எல்லா மக்களிடமும் குர்ஆன், ஹதீது போதனைகளை எடுத்துரைக்க வேண்டும். சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நல்வழியில் செல்வதற்கு விதி அமைந்துவிடும். இவற்றைத்தான் நபி அவர்கள் கூறினார்கள்:
நரகவாசிகளின் செயல்களை செய்பவர்கள் விதி அவரை வென்று சொர்க்கவாசிகளின் செயலை செய்து சொர்க்கத்தில் நுழைந்து விடுவர் என்றார்கள்.
மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) நூல்: திர்மிதி
ஒவ்வொரு செயலையும் செய்யும் பொழுது இறைவனுக்கு பயந்து “இறைவா நான் செய்யக்கூடிய செயல்கள் நேர்வழியாக இருக்க வேண்டும் என்ற எண்ணங்களிலேயே செய்தால் அல்லாஹ் விதியை மாற்றி நேர்வழியாக தருவான் என்று தன் திருமறையிலேயே அல்குர்ஆன் 42:13ல் கூறுகிறான்.
ஏனெனில் இதுகூட பிரார்த்தனையே ஆகும். மதியைக் கொண்டு விதியை வென்று விடலாம் என்று கூறுபவர்களும் தனது அறிவால் உயர்ந்தேன் என்று பெருமை பேசுபவர்களும் திருமறையின் வசனங்களையும், நபி அவர்களின் பொன்மொழிகளையும் ஆராய்ந்து பார்க்கவும். அவர்களுக்கு தெளிவான விடை இதில் கிடைக்கும். விதி இறைவனின் முத்திரைதான் என்ற முடிவு கிடைக்கும்.