படைப்பாளன் நீங்களா? இறைவனா? உங்களைப் படைப்பவன் அல்லாஹ்வே!
அகிலங்களின் இறைவனான அல்லாஹ் கூறுகிறான்: –
நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல). முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் – எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா? (அல்-குர்ஆன் 56:57-62)
உங்களின் உணவுகளான பயிர்களை முளைப்பிக்கச் செய்பவன் அல்லாஹ்வே!
(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா? அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா? நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் – அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். ‘நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம். ‘மேலும், (பயிர்களிலிருந்து
எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்’ (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்). (அல்-குர்ஆன் 56:63-67)
உங்களின் குடிநீரை உருவாக்குபவனும் அல்லாஹ்வே!
அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? (அல்-குர்ஆன் 56:68-70)
நெருப்பை உண்டு பண்ணுபவனும் அல்லாஹ்வே!
நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா? அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா? நாம் அதனை நினைவூட்டுதாகவும், பயணிகளுக்கு பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம். ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக. (அல்-குர்ஆன் 56:71-74)
அல்குர்ஆன் அகிலங்களின் படைப்பாளனாகிய அல்லாஹ்வின் இறுதிவேதமாகும்: –
நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன். நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான பிரமாணமாகும். நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது. தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள். அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது. அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா? நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா? (அல்-குர்ஆன் 56:75-82)