மு.அ.அப்துல் முஸவ்விர்
தனிப்பட்ட சுயஇலாப மனிதர்,குடும்பம்,குழு அல்லது அமைப்ப,சமூகம் ஆகியோரின் உள்வட்டார குழப்பங்களும் அவர்களும் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட உடலுறுப்பு போன்றவர்கள்.பாதிக்கப்பட்ட உறுப்பை மட்டும் அறுத்தெறிவதன் மூலம் அதனை தீர்த்துவிடலாம்.ஆனால்,இவர்களால் வெளிவட்டத்தில் உருவாக்கப்படும் குழப்பங்கள் எய்ட்ஸ் போன்றவை!கருவினில் வளரும் மழலையையும் இந்நோய் விட்டு வைக்காதது போன்று இந்த குழப்பவாதிகள் எவரையும் விட்டு வைக்காத பயங்கரவாதிகள்! அடுப்படி முதல் ஐ.நா.சபை வரை இன்று உலகம் முழுவதும் இவர்கள் குழப்பங்களை கனக்கச்;சிதமாக உருவாக்கி ஒன்றுமறியா அப்பாவி போன்று வலம் வந்து கொண்டிருப்பார்கள்.இத்தகையோரின் களையெடுத்தல்கள் காலத்தின் கட்டாயங்கள்!
ஓவ்வொரு மனிதனும்,குடும்பமும்,அமைப்பும்,சமூகமும்,வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் தமது ஆளுமையின் பற்பல முகங்களை வௌ;வேறு கட்டங்களிலும் வெளிப்படுத்துகின்றனர்.தனிப்பட்ட ரீதியிலான ஒருவனது பொய் முகமூடிகள் அவன்புறத்து அம்சங்களில் தாக்கம் செலுத்தி, சாதக பாதகங்களை ஏற்படுத்தும்போது, அது அவனது வாழ்வை மட்டுமே போலியாக உயர்த்துகின்றது அல்லது உண்மயாகப் பாதிக்கின்றது.அவனது இந்த செயல்பாட்டு அம்சம் அவனுக்கும் இறைவனுக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயமாக நிற்கின்றது.
ஆனால், இத்தகைய அவனது சூழ்ச்சி முகமூடிகள் பிறர் வாழ்வில் தாக்கம் செலுத்தும்போது,அவனால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் தனிப்பட்ட வாழ்வும் அவர் சூழ்ந்த குடும்பமும் எத்தகைய பாதிப்புக்குள்ளாகின்றன என்பதை அவன் உணர்வதில்லை, ஒருவேளை அவன் தெரியாத்தனமாக,அறியாதபட்சத்தில் இத்தகைய குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பானாகில் திருந்திட வாய்ப்பு உண்டு.
ஆனால், அனைத்தும் அறிந்தும் தெரிந்தும் தனிப்பட்ட நபருக்கு அல்லது ஒரு குடும்பத்துக்கு அல்லது ஒரு குழவினருக்கு அல்லது ஒரு சமூகத்தாருக்கு இறைவன் அருளிய நற்கொடைகளின்பால் பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும் கொள்கின்ற பொம்மைப் புலிகளும் இருக்கின்றார்கள்.தாம் யார் மீது பொறாமையும் வஞ்சகமும் கொண்டிருக்கின்றார்களோ,அவர்களுடன் நேரடியாக ஆகுமான முறையில் போட்டியிடவோ,மோதவோ திறமையற்றவர்களாக இவர்கள் இருப்பதனால்,இயன்ற அளவு அந்த திறமையாளர்களுக்கு எதிராக ஜோடனைக் குழப்பங்களைக் கடைபரப்பி குளிர்காய்கின்றார்கள்.தங்கள் பொய்முகங்கள் வெளியே தெரிந்திடாத வண்ணம் காய்களை நகர்த்துவார்கள்.
தனிப்பட்ட நபராக இச்செயலைச் செய்வோராக இருப்பின், தங்கள் பதவி,அந்தஸ்து,அதிகாரம்,ஆள்பலம் ஆகியவற்றையும்,ஒரு குடும்பமாக இச்செயலைச் செய்வோராக இருப்பின், தமது பாரம்பர்ய மரியாதையையும், ஒரு குழுவினராக –அமைப்பினராக இச்செயலைச் செய்வோராக இருப்பின் அந்த அமைப்புக்குரிய சிறப்பு வசதி-வாய்ப்புக்களையும், ஒரு சமூகமாக இச்செயலைச் செய்வோராக இருப்பின், தம் சமூகத்தவரின் இயலாமை,அப்பாவித்தனம் ஆகியவற்றையும் இத்தகைய தமது ஆண்மையற்ற பேடித்தனத்துக்கு மிகத் திறமையாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
நேரடியான ஆகுமான போட்டிக்கு திராணி இல்லாமல், குறுக்கு வழியில் குழப்பங்களை ஏற்படுத்தி ஒருவித சிற்றின்பத்துக்கு தங்களைத் தேற்றிக் கொள்கின்றார்கள்.விஞ்ஞான ரீதியாக இது அவர்களின் ஒருவித மனவியாதி என்று கூறலாம். ஆனால் மார்க்க ரீதியாக இத்தகைய குழப்பங்கள் ஒரு நிலையற்ற சூழலை உருவாக்குபவை.
இத்தகைய நேரத்துக்காகவே காத்திருக்கும் நபர்களைப் பற்றியோ சொல்லவே வேண்டாம். அதனை ஒன்றுக்கு இரண்டாக்கி.. நான்காக்கி.. கற்பனைக்கு எட்டாதவற்றையெல்லாம் கதைகட்டி குதூகலிப்பார்கள்.அதுவும் அந்த குழப்பநிலை போட்டி,பொறாமை,பழி தீர்ப்பு,அவதூறு,தப்பபிப்ராயம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துவிட்டால் சொல்லவே தேவையில்லை!
குழப்பம் விளைவிக்கும் இத்தகைய மனிதர்களும் சரி, குடும்பத்தினரும் சரி,சமூகத்தவரும் சரி, அதே குழப்பம் தங்களையோ அல்லது தங்கள் குடும்பத்தினரையோ அல்லது தாங்கள் சார்ந்த சமூகத்தையோ பீடிக்கும்போது மனஉளைச்சல் பெறுகின்றார்கள். அந்தக் குழப்பத்தை தங்களுக்குள்ளேயே மறைத்து ஒன்றும் நிகழாத வண்ணம் தங்களைக் காத்துக்கொள்கின்றார்கள்.எந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்த குழப்பம் விளைவிக்கப்பட்டதோ அந்த குற்றச்சாட்டு உண்மையாகவே இருக்கும்போது, அதிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள,தங்களைச் சார்ந்தோரையும்,தம் குடும்பத்தவரையும் தம் அமைப்பு சார்ந்தோரையும்,தமது சமூகத்தாரையும் அவ்வளவு ஏன்.., தம்மைச் சாராத தாம் விலைகொடுத்து வாங்கிய.. மற்றவரையும்கூட மயக்கி தமது இந்த போலிப்பூச்சுக்கு அரிதாரம் பூசி மெருகேற்றிக் கொள்வார்கள்.
அதனால்தான், குழப்பம் விளைவிக்கும் மாபாதகச் செயலை இறைவன் கொலையைவிடக் கொடியது என்று வருணிக்கின்றான் தனது இறுதித் திருமறையில்!
ஆனால்,ஒரு விஷயத்தின் அடிப்படையில் இத்தகைய குழப்பவாதிகள் சிந்திக்கட்டும்!
முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வில் ஒரு சம்பவம்!தான் பிறந்த மண், தன் அழைப்பை ஏற்றுக்கொள்ள ஆரம்பத்தில் நிராகரித்துவிட்டபொழுது, அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அருகில் அமைந்த தாயிஃப் நகர மக்களுக்கு ஏகத்துவ அழைப்பு விடுக்க சென்றார்கள். ஆனால், அந்த மக்களோ உடல்ரீதியாகவம், மனரீதியாகவும் அவரை சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாக்கினார்கள்.தன் அடியார் மீதான கயவர்களின் இத்தகைய தாக்குதலைக் கண்டு சினமுற்ற இறைவன் மலைகளுக்குப் பொறுப்பான வானவர்களை அனுப்பி அந்நகர மக்களை மலையால் நெருக்கி அழித்திட நாடியபோது, அதற்கான அனுமதி கோரி தன்னிடம் வந்த வானவர்களிடம் அந்த இணையில்லா மனிதப் புனிதர் என்ன சொன்னார் தெரியுமா? ‘அவ்வாறு செய்திட வேண்டாம். இன்று இம்மக்கள் எனது அழைப்பை நிராகரித்தாலும்,நாளை இவர்களின் சந்ததி என் அழைப்புக்கு செவி சாய்க்கக்கூடும்.ஆதலால், இந்த தண்டனை வேண்டாம்’ என்றார்.இன்று அந்நகரம் ஏகத்துவ நாதம் முழங்கும் சந்ததியினரின் கூடாரமாய் நிற்கின்றது.
சந்ததியினரின் ஏகத்துவ சாய்வுக்கு அவர்தம் மூலாதாரப் பெற்றோரை அழித்திட அண்ணலார் (ஸல்) அனுமதி மறுத்த விஷயத்தில் இந்த குழப்பம் விளைவிக்கும் குதர்க்க கயவர்களுக்கும், குழவினருக்கும், சமூகதத்தவருக்கும் ஒரு செய்தி இருக்கின்றது.எவ்வாறு ஆகுமான அம்சங்களுக்கு சந்ததிகள் காரணிகளாக நிற்கின்றனரோ, அதேபோன்று, உங்கள் கைங்கர்யத்தால் ஏற்பட்ட இதே குழப்பங்கள் உங்களின் வருங்கால சந்ததியினரைப் அல்லது குடும்பத்தை அல்லது சமூகத்தை பீடிக்காது என்பதற்கு என்ன நிச்சயம்?
எனவே,அற்ப இலாபங்களுக்காகக் குழப்பங்களை உண்டுபண்ணி, தனிப்பட்ட மனிதர்களின் அல்லது குடும்பத்தின் அல்லது சமூகத்தின் மீது அநியாயத் தாக்குதல் தொடுக்கும் இத்தகைய கொடுந்தேள் சிந்தனையாளர்கள், தங்களின் முகம் காட்டாமல் பிறர் முகங்களில் கரி பூசியதாக எண்ணிக்கொள்ளும் இந்த தேர்ந்த மேடை நடிகர்கள் இறைவனுக்கும் மனசாட்சிக்கும் அச்சப்படுவது என்பது எதிர்பார்க்க முடியாதது.ஆனால், குறைந்தபட்சம் தங்களிலிருந்து பிறந்த இரத்தங்களைக் குறித்தாவது இவர்கள் மனம் அச்சம் கொள்ளட்டும்!