– முஸ்லிம்
ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு! (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக! மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்; மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
உண்மை முஸ்லிம் நோயாளிகளை நலம் விசாரிக்கச் செல்ல வேண்டுமென இந்நேரிய மார்க்கம் மிகவும் வலியுறுத்துகிறது. எனவே நோய் விசாரிக்கச் செல்வது கடமையாகும். நோயாளியிடம் சென்று ஆறுதல் கூறும்போது நபி (ஸல்) அவர்களின் கட்டளையை நிறை வேற்றுகிறோம் என்று மனம் நிறைவடைய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி)
பராஃ இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நோயாளிகளை நலம் விசாரிக்குமாறும், ஜனாஸாவை பின் தொடரவும், தும்மியவருக்கு பதிலளிக்கவும், சத்தியம் செய்தவருக்கு உபகாரம் செய்யவும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்யவும், அழைப்பை ஏற்று பதிலளிக்கவும், ஸலாமைப் பரப்புமாறும் நபி (ஸல்) அவர்கள் எங்களை ஏவினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களின் போதனைகள் இஸ்லாமிய சமூகத்தில் வெகு ஆழமாக ஊன்றப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் வாழ்வில் ‘தான் நோய்வாய்ப்பட்டால் தனது சகோதரன் தன்னை நலம் விசாரிக்க வர வேண்டும், அது அவனது கடமை’ என்று எண்ணுமளவு இப்பண்பு வலுப்பெற்றுள்ளது. அதை மறந்துவிட்டால் அல்லது அதில் குறை ஏதும் செய்துவிட்டால் அவன் தனது சகோதரனின் கடமையை மறந்தவன். அல்லது சகோதரனின் கடமைகளில் குறை செய்தவனாகிறான். அவன் இஸ்லாமின் மேலான பார்வையில் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்ட பாவியாகிறான்.
நபி (ஸல்) அவர்கள், ”முஸ்லிமின் மீது ஒரு முஸ்லிமுக்குரிய கடமைகள் ஐந்து” என கூறியபோது நபி (ஸல்) அவர்களிடம் அது என்ன? என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ”அவரை நீ சந்தித்தால் ஸலாம் கூறு, அவர் உன்னை அழைத்தால் ஏற்றுக்கொள், உன்னிடம் அவர் நல்லுபதேசத்தை எதிர்பார்த்தால் அவருக்கு உபதேசம் செய், அவர் தும்மி அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் (யர்ஹமுக்கல்லாஹ் என்று) பதில் கூறு, நோய்வாய்ப்பட்டால் நலம் விசாரி, அவர் மரணித்தால் (ஜனாஸா) உடன் செல்.” (ஸஹீஹுல் புகாரி)
ஒரு முஸ்லிம் தனது சகோதரனை நோய் விசாரித்தால் அவர் ஏதோவொரு கடமையைச் செய்து முடித்தோம் என்று எண்ணிவிடக் கூடாது. மாறாக, தனது செயலுக்காக அவர் ஆனந்தமடைய வேண்டும். பின்வரும் நபிமொழியின் கருத்தைக் கவனிக்கும்போது நலம் விசாரிப்பதன் மேன்மையை அறிந்துக் கொள்ளலாம்.
நபி (ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில் ”ஆதமின் மகனே! நான் நோய்வாய்ப்பட்டேன். நீ நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். மனிதன், எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். நான் எப்படி உன்னை நலம் விசாரிக்க முடியும் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”உனக்குத் தெரியுமா? எனது இன்ன அடியான் நோயுற்றான். நீ நலம் விசாரிக்கச் செல்லவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவரை நலம் விசாரிக்கச் சென்றிருந்தால் அந்த இடத்தில் என்னை பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.
”ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். நீ எனக்கு உணவளிக்கவில்லை” என்று அல்லாஹ் கூறுவான். மனிதன் எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கெப்படி நான் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”நீ அறிவாயா? எனது இன்ன அடியான் உன்னிடம் உணவளிக்கக் கேட்டான். நீ உணவளிக்கவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அதன் நன்மையை என்னிடத்தில் பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.
”ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை” என்று கூறுவான். அம்மனிதன் ”எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கு நான் எப்படி நீர் புகட்ட முடியும்? என்று கேட்பான். அல்லாஹ் ”எனது இன்ன அடியான் உன்னிடம் தண்ணீர் புகட்டுமாறு கேட்டான். உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அதன் நன்மையை என்னிடம் பெற்றிருப்பாய்” என்று கூறுவான். (ஸஹீஹ் முஸ்லிம்)
நோயாளியை நலம் விசாரிப்பது எவ்வளவு பரக்கத் பொருந்திய நற்செயல்! பலவீனப்பட்ட நோயாளியான தமது சகோதரனின் விருப்பத்தை நிறைவு செய்வது எவ்வளவு உயர்ந்தது! நலம் விசாரிப்பவன் அந்த சந்தர்ப்பத்தில் மகத்துவமிக்க தனது இரட்சகனிடம் நிற்கிறான். அல்லாஹ் அவனது நற்செயலுக்கு சாட்சியாகி மாபெரும் கொடையை வாரி வழங்குகிறான். இதன்மூலம் நலம் விசாரிப்பதை பரக்கத்தானதாகவும் மிக உயர்ந்த செயலாகவும் அல்லாஹ் நிர்ணயித்து அதனை செய்யத் தூண்டுகிறான். இவ்வாறு நலம் விசாரிக்காதவன் எவ்வளவு பெரிய நஷ்டவாளி, மாபெரும் இழிவும் வேதனையும் அவனை மறுமையில் சூழ்ந்து கொள்கிறது. உலகப் படைப்புகள் அனைத்தின் முன்னிலையில் அவனிடம் ”ஆதமின் மகனே! நான் நோயுற்றபோது நலம் விசாரிக்க ஏன் வரவில்லை? எனது இன்ன அடியான் நோயுற்றபோது நீ நலம் விசாரிக்கவில்லை. அவனை நலம் விசாரித்திருந்தால் அங்கு என்னை நீ பெற்றிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?” என்று அல்லாஹ் கூறுவது அவனுக்கு மாபெரும் கேவலமாகும். தனது சகோதரனை நலம் விசாரிக்காமல் தவறிழைத்த மனிதன் அடையப்போகும் சஞ்சலம், கைசேதம் பற்றி இப்போதே சிந்திப்போம். ஏனெனில் மறுமை நாள் வந்தபின் உலகிற்கு மீண்டு வரமுடியுமா?
இஸ்லாமிய சமூகத்தில் நோயாளி என்பவன் தனது துன்பத்திலும் சிரமத்திலும் உழன்று கொண்டிருக்கும் நிலையிலும் ‘தான் ஆதரவற்ற அனாதையல்ல, தன்னை இந்தச் சிரமத்திலிருந்து மீட்பதற்கு அல்லாஹ்வின் துணையுடன் உதவியாளர்களும் நண்பர்களும் இருக்கிறார்கள்’ என்ற உணர்வு அவனது உள்ளத்தில் தோன்ற வேண்டும். இது மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இஸ்லாமின் உன்னதப் பண்பாகும். இது முஸ்லிம்களிடையே தவிர வேறெங்கும் காணமுடியாத அற்புதப் பண்பாகும். மேற்கத்திய நாடுகளில் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளும், திறமையான மருத்துவர்களும், உயர்ந்த மருந்துகளும் உள்ளன. எனினும் உறவினர்கள், நண்பர்களின் கனிவான அணுகுமுறை, ஆறுதலான வார்த்தைகள், மலர்ந்த புன்னகை, தூய்மையான பிரார்த்தனைகள் என்பது அந்த நேயாளிகளுக்கு மிகக் குறைவாகவே கிட்டுகின்றன. பொருளியலை அடிப்படையாகக் கொண்ட சிந்தனை மேற்கத்தியரை ஏமாற்றிவிட்டதுதான் இதற்குக் காரணமாகும். அது மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் அழித்து உலகில் பலன் கிடைக்காத நற்செயல்கள் செய்வதிலிருந்து அவர்களைத் தடுத்துவிட்டது. மனிதன் நோயாளியை சந்தித்து ஆறுதல் சொல்வதால் விளையும் நன்மைகளை உணரமாட்டான். ஒருவரை தான் சந்தித்து, அவருக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமெனில் அவரிடமிருந்து தனக்கு உடனடியாகவோ, பிற்காலத்திலோ ஏதேனும் பலன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான் அவனது அணுகுமுறை அமைந்திருக்கும். ஆனால் ஒரு முஸ்லிமுக்கு நோயாளியை சந்தித்து, ஆறுதல் கூற தூண்டுகோலாக அமைவதெல்லாம் இந்த நேரிய பாதையில் செல்பவர்களுக்கென அல்லாஹ் தயார் செய்துள்ள நன்மைகள்தான். இதற்கான சான்றுகள் ஏராளமானவை. இவை சகோதரத்துவ உணர்வை வளர்த்து நோயாளியை சந்திக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நிச்சயமாக ஒரு முஸ்லிம், தனது முஸ்லிம் சகோதரரை நோய் விசாரிக்கச் சென்று திரும்பும்வரை சுவனத்தின் கனிகளை பறித்துக் கொண்டிருக்கிறார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒரு முஸ்லிம், சகோதர முஸ்லிமை நலம் விசாரிக்க காலையில் செல்வாரேயானால் எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக மாலைவரை துஆச் செய்வார்கள். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் காலைவரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள். அவருக்கென சுவனத்தின் கனிகள் தயாராக வைக்கப்படும்.” (ஸுனனுத் திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள், நோய் விசாரிப்பதால் நோயாளியின் மனதிலும் அவரது குடும்பத்தினரிடையேயும் மனிதநேயச் சிந்தனைகள் வளர்வதை அறிந்திருந்தார்கள். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் நோயாளிகளின் நலம் விசாரிப்பதில் ஒருபோதும் சடைந்ததில்லை. அவர்கள் நோயாளிகளுக்கு ஆறுதல் கூறி பிரார்த்தனையும் செய்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தனக்கு பணிவிடை செய்து வந்த யூதச் சிறுவனைக் கூட நலம் விசாரிக்கச் சென்றதிலிருந்து நபி (ஸல்) அவர்களின் மேலான வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த யூதச்சிறுவன் உடல்நலம் குன்றியபோது நபி (ஸல்) அவர்கள் அவனிடம் நலம் விசாரிக்கச் சென்று அவனது தலைமாட்டில் அமர்ந்தார்கள். பின்பு அச்சிறுவனிடம் ‘நீ இஸ்லாமை ஏற்றுக்கொள்’ என்று கூறினார்கள். அச்சிறுவன் அருகிலிருந்த தனது தந்தையைப் பார்த்தான். அவர் ”நீ அபுல் காஸிமுக்கு கட்டுப்படு!” என்று கூறினார். அச்சிறுவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபி (ஸல்) அவர்கள், ”இச்சிறுவரை நரக நெருப்பிலிருந்து காத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்” என்று கூறியவர்களாக வீட்டை விட்டு வெளியேறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரை நோய் விசாரிக்கச் சென்ற சந்தர்ப்பத்திலும் அவரை இஸ்லாமின்பால் அழைக்கத் தவறவில்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரை நோய் விசாரிக்கச் சென்றது, அச்சிறுவர் மனதிலும் அவரது தந்தையின் மனதிலும் நபி (ஸல்) அவர்களின் கருணையையும், மேன்மையையும் ஆழப்பதியச் செய்தது. எனவே அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு அடிபணிந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வருகை அவர்களுக்கு நேர்வழியை அருளியது. நபி (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறும்போது அவர்கள் அச்சிறுவரை நரகிலிருந்து விடுவித்த அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் தான் எத்தகு மகத்தான மனிதர்! அவர்களது இறையழைப்புதான் எவ்வளவு விவேகமானது! நபி (ஸல்) அவர்கள் நோயாளிகளை நலம் விசாரிப்பதற்கு மிகுந்த முக்கியத்துவமளித்ததுடன் அது விஷயத்தில் தங்களது தோழர்களுக்கு சில அடிப்படைகளையும் கற்றுக் கொடுத்தார்கள். அதில் ஒன்றுதான் நோயாளியின் தலைமாட்டில் அமர்ந்து நலம் விசாரிப்பதும்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எவரையேனும் நோய் விசாரிக்கச் சென்றால் அவரது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு ஏழுமுறை பின்வரும் துஆவைக் கூறுவார்கள்: ”உமக்கு ஷிஃபா அளிக்க வேண்டுமென மகத்தான அர்ஷின் இரட்சகனான, மகத்தான அல்லாஹ்விடம் நான் கேட்கிறேன்.” (அல் அதபுல் முஃப்ரத்)
நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ஒழுக்கங்களில் ஒன்றுதான் தங்களது வலது கரத்தால் நோயாளியை தடவிக் கொடுத்து, அவருக்காக துஆச் செய்வதும்.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நலம் விசாரிக்கச் சென்றால் தமது வலது கரத்தால் அவரை தடவிக் கொடுத்து அல்லாஹ்¤ம்ம ரப்பன்னாஸ், அத்ஹ¢பில் பஃஸ, இஷ்ஃபி, அன்த்தஷ்ஷாஃபீ, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக, ஷிஃபாஅன் லாயுஃகாதிரு ஸகமா” என்று பிரார்த்திப்பார்கள். அதன் பொருள், ”யா அல்லாஹ்! மனிதர்களின் இரட்சகனே! நோயைப் நீக்குவாயாக! அறவே நோயில்லாமல் குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் நலம் விசாரிக்கச் சென்றால் ”கவலைப்பட வேண்டாம்! இறைவன் நாடினால் இது (உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும்” என்று கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி)
நோயாளிகளை நலம் விசாரிப்பதில் முஸ்லிம்கள், தலைமுறை தலைமுறையாக இப்புகழுக்குரிய நபிவழியைப் பின்பற்றி வருகிறார்கள். ஒருவருக்கொருவர் கருணையிலும் அன்பிலும் உதவி செய்து கொள்வதிலும் எடுத்துக்காட்டாகத் திகழும் இப்பண்பு முஸ்லிம்களின் தனித் தன்மையான அடையாளமாகவே நிலைபெற்றுத் திகழ்கிறது. இப்பண்பு வாழ்க்கை சுமையால் அழுந்திப்போன முதுகை நிமிர்த்துகிறது; கவலையில் வீழ்ந்தவனின் கண்ணீரைத் துடைக்கிறது; துன்பங்களால் சூழப்பட்டவனை விடுவிக்கிறது; நிராசையடைந்தவனுக்கு நம்பிக்கையை துளிர்க்கச் செய்கிறது; சகோதரத்துவ அன்பை உறுதிப்படுத்துகிறது; வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வலிமையைத் தருகிறது.
முன்மாதிரி முஸ்லிம்