– நூருத்தீன்
முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இருந்து, அவர்தம் செயல்முறைகளைக் கண்டு, அழகிய முறையில் தம் வாழ்வில் பின்பற்றி இஸ்லாத்தின் வடிவை செயல்படுத்திக் காட்டிய தோழர்கள் பலர்..!
எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ மேலும், அல்லாஹ்வின் வழியை விட்டுத் தடுத்தார்களோ அவர்களின் செயல்களை அல்லாஹ் வீணாக்கி விட்டான். எவர்கள், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தார்களோ மேலும், முஹம்மதின் மீது இறக்கியருளப்பட்டதை அது முழுக்க முழுக்க அவர்களின் அதிபதியிடமிருந்து வந்த சத்தியமாகும் ஏற்றுக்கொண்டார்களோ அவர்களின் தீமைகளை அல்லாஹ் அவர்களை விட்டுக் களைந்து, அவர்களின் நிலைமையைச் சீர்திருத்திவிட்டான். இதற்குக் காரணம், நிராகரிப்பாளர்கள் அசத்தியத்தைப் பின்பற்றினார்கள்; ஆனால், இறைநம்பிக்கையாளர்களோ தங்களின் இறைவனிடமிருந்து வந்த சத்தியத்தைப் பின்பற்றினார்கள். இவ்வாறு அல்லாஹ் மக்களுக்கு அவர்களின் சரியான அந்தஸ்தைக் காண்பித்துக் கொடுக்கின்றான்.
அது ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம். 10,000 போர் வீரர்களுடன் மக்கத்துப் படையினர் மதீனாவை முற்றுகை இடுவதற்காக வந்திருந்தனர். நடுவில் புதிதாய் வெட்டப்பட்ட அகழியொன்று அவர்களை மேற்கொண்டு முன்னேற விடாமல் தடுத்துக் கிடந்தது. முஸ்லிம்களுக்குக் கடுமையான சோதனை நேரம் அது. போர்மேகம் சூழ்ந்து 27 நாட்கள் ஆகியிருந்தன.
அன்று இரவு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள்: “யா அல்லாஹ்!, நீ வாக்குறுதி அளித்தாயே வெற்றி, அதை வழங்கும்படி மன்றாடிக் கேட்கிறேன்”.
அந்த நள்ளிரவில் முற்றுகை இட்டிருந்த மக்கத்துப் படைப்பிரிவிலிருந்து ஒருவர் அவசரமாய் நழுவி முஸ்லிம்களின் கூடாரத்தின் பக்கம்வர, அவரை நபியவர்கள் பார்த்து விட்டார்கள். அடையாளம் தெரிந்துவிட ஆச்சரியத்துடன், “நுஐம் பின் மஸ்ஊத்!”
“ஆமாம், நான்தான் அல்லாஹ்வின் தூதரே!” என்றார் நுஐம்.
“இந்த இரவு நேரத்தில் இங்கு உன்னை அழைத்து வந்தது எது?” என்று கேட்டார்கள்.
“நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் அல்லாஹ்வின் தூதரே! ஆனால் என் மக்களுக்கு அது இன்னும் தெரியாது. சொல்லுங்கள் நான் என்ன செய்ய வேண்டும்?”
எதிரித் தரப்பிலிருந்து நழுவி வந்தவரிடமிருந்து வந்த ஆச்சரியமான பதில் அது – இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக. முஹம்மதை அல்லாஹ்வின் தூதர் என ஒப்புக் கொண்டதாக!
இறைவனின் இரண்டு அற்புதங்கள் வெளிப்பட்ட போர் அது. அதிலொன்று நுஐம் பின் மஸ்ஊத். அவரது புத்தி சாதுரியமான போர் உத்தி!
கத்தஃபான் (بنو غطفان) எனும் கோத்திரத்தினர் நஜ்துப் பகுதியில் வாழ்ந்து வந்தனர். நஜ்துப் பிரதேசம் மதீனா நகருக்கு வடக்கே அமைந்துள்ளது. நுஐம், அந்த கத்தஃபான் கோத்திரத்தைச் சேர்ந்தவர். துடிப்பான இளைஞர், மிகுந்த புத்திசாலி. எந்தப் பிரச்சினையையும் தீர்க்கவல்ல புத்திசாதுர்யம் இயற்கையாய் அவரிடம் அமைந்திருந்தது. வரம், இறைவனளித்த வரம். ஆனால் அவரிடம் ஒரு பலவீனம் இருந்தது.
இதெல்லாம் ஒரு பலவீனமா? என்று ஆச்சரியத்துடன் யாரும் முறைக்கலாம். என்ன செய்ய? அந்தளவு முற்றிப்போன நாகரீகம் நம்முடைய நிகழ்காலம். நுஐம் உல்லாசப் பேர்வழி. அதுதான் அவரது பலவீனம். புறம்பான உல்லாசம் தேடிப்போவது அவர் வாடிக்கை. அவருக்குப் பிடித்த மாதிரி யத்ரிப் நகரில் கிடைத்தது அத்தகைய உல்லாசம். மதீனாவின் தொட்டில் பெயர் யத்ரிப் (يثرب).
யத்ரிப் நகரில் மூன்று யூதக் கோத்திரத்தினர் வாழ்ந்து வந்தனர். பனூ கைனுக்கா (بنو قينقاع), பனூ நதீர் (بنو النظير), பனூ குரைளா (بنو قريظة). இதில் பனூ குரைளா கோத்திரத்தினரின் சகவாசம் நுஐமுக்கு அமைந்தது. அவர் குஷியடையும் விதமான உல்லாசம், பாடல்கள், மதுபானங்கள் அவர்களிடம் அவருக்கு ஏகமாய்க் கிடைத்தன. யூதர்களுக்கு நுஐமால் கொழுத்த வருமானம். மனம் நாடும் போதெல்லாம் நஜ்திலிருந்து குதிரையோ, ஒட்டகமோ ஏறி யத்ரிபுக்கு வந்து விடுவார் நுஐம். மதுபானக் கடைகளில் பணம் தண்ணீராய்க் கரையும். பனூ குரைளாவினருக்கு நுஐம் தடையின்றிப் பொன் முட்டையிடும் வாத்து. எனவே, நுஐமின் நெருக்கமான சகவாசம் குரைளாவினருக்கு அமைந்து விட்டது. அதுவே அவர்களுக்கு ஒரு பாதகமாய் அமைந்துவிடப் போவதை அப்பொழுது அவர்களும் அறியவில்லை; நுஐமும் நினைத்திருக்கவில்லை.
குடி, விபச்சாரம், அனாச்சாரம் என்பதெல்லாம் இஸ்லாம் தோன்றுவதற்கு முன் அரேபியாவில் இருந்தவர்களிடையே மேட்டிமையை வெளிப்படுத்தும் செயல்கள். இந்நிலையில் புத்தெழுச்சியுடன் இஸ்லாம் மக்காவில் புறப்பட்டதும் அந்தச் செய்தி அப்படி-இப்படியென்று நுஐம் காதிலும் வந்து விழுத்தான் செய்தது. ஆனால் அவர் வாழ்ந்து கொண்டிருந்தது கேளிக்கை உலகம்; உல்லாச உலகம். அதனால் அந்தச் செய்தி அவருக்குப் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்திவிடவில்லை. ஓரளவு புரிந்த வகையில் இஸ்லாமும் தனது கேளிக்கையும் பல காத தூரம் இடைவெளி கொண்டவை என்று தெரிந்ததாலும், தனது உல்லாசத்திற்கு இஸ்லாம் மாபாதக இடைஞ்சலாய் அமைந்து விடும் என்று அவர் யூகித்து விட்டதாலும், “அதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது” என்று நிராகரித்து விட்டார். தன் போக்கில் வாழ்ந்து கொண்டிருந்தார்.
யத்ரிப் நகரில் மூன்று யூதக் கோத்திரத்தினர் வாழ்ந்து வந்தார்களல்லவா? அவர்கள் ஒரு காலத்தில் எங்கெங்கிருந்தோவெல்லாம் அரேபியாவிற்குள் – குறிப்பாக யத்ரிபுக்குள் – வந்து சேர்ந்து குடியேறி, அரபு மொழி பேசி, அரபியர்களுடன் வாழ்ந்து வந்ததற்கு ஒரு காரணம் இருந்தது. அவர்களது வேதம் அறுதியிட்டுச் சொல்லியிருந்தது. வருவார் ஓர் இறுதித் தூதர், அவர் இன்னன்ன மாதிரியுள்ள ஒரு பிரதேசத்தில் தோன்றுவார்; உங்களையெல்லாம் உய்விப்பார் என்று. அதன்படி அவர்கள் கண்டறிந்து கொண்டது மதீனா பிரதேசத்தை. அதனால் காத்திருந்தார்கள் – தலைமுறை தலைமுறைகளாக!
அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை, வேத வாக்கும் பொய்யாகவில்லை. வந்து சேர்ந்தார் முஹம்மது நபி (ஸல்). யத்ரிப் மதீனாவானது. யூதர்கள் மாபெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். நகரின் பெயர் மாற்றத்தினாலெல்லாம் அல்ல; அவரது தோற்றுவாய் வேறு என்பதால். நபிமார்கள் மாறி மாறி அவதரித்த தங்களது பனீ இஸ்ராயீல் கிளையிலிருந்து இறுதி நபி வருவார் என்று காத்திருந்தால், சம்பந்தமேயில்லாமல், பனீ இஸ்மாயீல் கோத்திரத்தில் தோன்றிய ஒருவர் தன்னை நபி என்கிறார், இறைவனின் தூதர் என்கிறார், வேதச்செய்தி வருகிறது என்கிறார் என்று திகைத்து விட்டார்கள். தங்களது பிள்ளையேபோல் அவரை அவர்களுக்கு அடையாளம் தெரிந்தது. இருந்தாலும் அகங்காரம் வென்றது; நிராகரித்தனர். மனதில் உண்மை இன்னதென்று உணர்ந்தே நிராகரித்தனர். அத்துடன் இருந்து விட்டாலும் பரவாயில்லை. வினை செய்யத் தொடங்கினர். தீவினை!
ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை; இணக்கமாய் வாழலாம் வாருங்கள் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அனைவருடனும் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார்கள். யூதர்களும் கையெழுத்திட்டார்கள். ஆனால் அவர்களுக்குத் தொன்றுதொட்ட குலவழக்கம் ஒன்று இருந்தது. எக்காலத்திலும் உடன்படிக்கையைப் பேணிப் பாதுகாப்பது இழிவானது எனும் வழக்கம். அதை மீறலாகுமோ? எனவே மெதுமெதுவாக உடன்படிக்கையை மீற ஆரம்பித்தார்கள். விஷயம் தீவிரமாகி முதற்கட்டமாக பனூ கைனுகாவுடன் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. அதை விரிவாக வேறொரு நிகழ்ச்சியில் பின்னர் பார்ப்போம். பிரச்சனை ஏற்பட்டது. வெட்டுக் குத்து நிகழ்ந்து, இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது என்பதுவரை இப்போது தெரிந்தால் போதும். “உங்கள் அட்டகாசம் போதும்” என்று அந்தக் கோத்திரத்தினர் அனைவரும் மதீனாவிலிருந்து வெளியேற்றப் பட்டனர்.
இதைப் பார்த்து மற்ற இரு கோத்திரத்தினரும் பாடம் படித்திருக்க வேண்டும். அல்லாமல் அடுத்துத் தொல்லை கொடுக்க ஆயத்தமானார்கள். இம்முறை பனூ நதீர். முஸ்லிம்களையும் முஸ்லிம் பெண்களையும் பற்றி முகம் சுளிக்க வைக்கும் ஆபாசக் கவிதை, புறம், அவதூறு, மக்காவிற்குச் சென்று குரைஷிகளுக்குத் தூபம் என்பதெல்லாம் போக, ஒரு கட்டத்தில் முஹம்மது நபியின் தலைமேல் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொல்லவே துணிந்து விட்டனர். பொறுமையின் எல்லை அத்துடன் முடிவடைந்தது. முஸ்லிம்கள் போர் தொடுக்கத் தயாரானதும் தங்களது கோட்டை-கொத்தளங்களுக்குள் சென்று பூட்டிக் கொண்டனர். முற்றுகையிடப்பட்டது. ஏறக்குறைய இருவார முற்றுகைக்குப் பிறகு அவர்கள் சரணடைய, “இத்துடன் சரி, இனி இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கக் கூடாது, கிளம்பிச் செல்லுங்கள்” என்று அனுமதியளிக்கப்பட்டது.