ஜகாத் என்றால் என்ன?
httpv://youtu.be/bp6Gxmx7f2c
ஜகாத் என்ற அரபி வார்த்தைக்கு வளர்ச்சியடைதல், அதிகமாகுதல், தூய்மைப்படுத்துதல் போன்ற பல அர்த்தங்கள் உள்ளன. ஒருவன் கடமையாக்கப்பட்ட இந்த ஸகாத்தை வழங்குவதின் மூலம் அவனுடைய செல்வமும் உள்ளமும் பரிசுத்தமாகிறது. அல்லாஹ் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் பாக்கியங்களை அதிகப்படுத்துகிறான். இதன் காரணமாகத் தான் முஸ்லிம்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து கணக்கிட்டு குறிப்பிட்ட விகித்தாச்சார அடிப்படையில் வழங்க வேண்டிய கட்டாய தர்மத்திற்கு ஜகாத் என்று இறைவன் பெயர் சூட்டியுள்ளான். ஜகாத் என்பது செல்வ வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமையாகும். நபி (ஸல்) அவர்களின் ஏராளமான நபிமொழிகளும் திருமறை வசனங்களும் ஜகாத் கட்டாயக் கடமை என்பதைப் பல்வேறு கோணங்களில் நமக்கு எடுத்துரைக்கின்றன.இதற்கான ஆதாரங்களைக் காண்போம்.
இஸ்லாத்தின் ஒரு தூண்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது.
1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது. 2. தொழுகையை நிலை நிறுத்துவது. 3. (கடமைப்பட்டவர்கள்) ஜகாத் வழங்குவது. 4. (இயன்றோர் இறைஇல்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது. 5. ரமளானில் நோன்பு நோற்பது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: புகாரி 8
இறை நம்பிக்கையின் அடையாளம்
ஒருவன் அல்லாஹ்வின் மீது ஈமான்-நம்பிக்கை கொண்டிருக்கின்றான் என்பதற்குரிய அடையாளங்களில் ஒன்று
ஜகாத்தை நிறைவேற்றுவதாகும். ஒருவனிடம் செல்வ வசதி இருந்தும் அவன் ஜகாத்தை நிறைவேற்றவில்லை என்றால் நிச்சயமாக அவனிடம் இறை நம்பிக்கை இல்லை என்பதற்கு அதுவே தெளிவான சான்றாகும். இதோ நபி (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வை நம்பிக்கை (ஈமான்) கொள்வது என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சான்று பகர்வதும், தொழுகையை நிலை நாட்டுவதும், ஜகாத் கொடுப்பதும், போர்ச் செல்வங்களில் ஐந்தில் ஒரு பங்கை (அரசு பொது நிதிக்கு) வழங்குவதும் ஆகும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: புகாரி 7556
கட்டாயக் கடமை
இந்த தானதர்மங்களெல்லாம் ஏழைகள், வறியவர்கள், இந்த தானதர்மங்களை வசூலிக்கவும் பங்கிடவும் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டியவர்கள் ஆகியோருக்கும், பிடரிகளை விடுவிப்பதற்கும், கடனாளிகளுக்கும் மற்றும் இறைவழியில் செலவு செய்வதற்கும், பயணிகளுக்கும் உரியனவாகும். இது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட கடமையாகும்! மேலும் அல்லாஹ் யாவற்றையும் அறிந்தோனும் நுண்ணறிவாளனுமாயிருக்கின்றான். (திருக் குர்ஆன் 9:60)
இவ்வவசனத்தில் கூறப்படும் தர்மங்கள் என்பது கட்டாயக் கடமையான ஸகாத்தைக் குறிப்பிடுவதாகும். ஏனெனில் இவ்வசனத்தின் இறுதியில் ‘இது அல்லாஹ்வின் கட்டாயக் கடமை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜகாத் மார்க்கத்தின் மிக முக்கியமான ஒரு அம்சம் என்பதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது. வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஜகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம். (திருக் குர்ஆன் 99:5)