தொகுப்பு:அப்மு
இஸ்லாத்தில் சமூகநீதி
அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருக்கின்றது வானங்களில் உள்ள, பூமியில் உள்ள ஒவ்வொன்றும்! ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது; புகழும் அவனுக்கே உரியதாகும். மேலும், அவன் ஒவ்வொன்றின் மீதும் ஆற்றலுடையவன். அவனே உங்களைப் படைத்தான். பிறகு, உங்களில் சிலர் நிராகரிப் பாளர்களாய் இருக்கிறார்கள். சிலர் இறைநம்பிக்கையாளர்களாக விளங்குகின்றார்கள். மேலும், நீங்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
‘நீதி என்பது இறை விசுவாசத்துடன் பின்னிப் பிணைந்துள்ள ஒன்றாகவும், ஒருவன் நீதியின் அடிப்படையில்செயல்படுவது உண்மையான பக்தியின் வெளிப்பாடாகவும் இஸ்லாம் கருதுகின்றது’
சமூக நீதி பற்றிய இஸ்லாத்தின்கருத்துக்கள் இறைவன், பிரபஞ்சம், மனித வாழ்வு பற்றியஅதன் கோட்பாட்டின் பின்னணியிலேயே அணுகி ஆராயப்படல் வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய போதனைகள், கருத்துக்கள், கோட்பாடுகள் அனைத்தினதும்அடிப்படையாக விளங்குவது, மேற்குறிப்பிட்ட விடயங்களைத்தழுவி நிற்கும் அதன் உலக நோக்காகும். இந்த உலக நோக்கின் அடிப்படையிலேயே இஸ்லாத்தின்சட்டங்கள், வணக்கங்கள், சமூக, அரசியல், பொருளாதாரக் கோட்பாடுகள், பண்பாடு, நாகரிகம் அனைத்தும்கட்டி எழுப்பப்பட்டுள்ளன.
ஒரு மதம் என்றவகையில் இஸ்லாம்இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர்த்தாவாகிய இறைவனுக்கும் அவனது படைப்பினங்களுக்குமிடையிலுள்ளதொடர்புகள் பற்றியும் மனிதனுக்கும், இப்பிரபஞ்சத்திற்கும் இடையில் உள்ள தொடர்புகள் பற்றியும் பேசுகின்றது.இப்பிரபஞ்சத்தில் மனிதனின் நிலை, அவனது வாழ்வின் குறிக்கோள், அதனை அடைவதற்கான நெறிமுறைகள் பற்றி மிகத் தெளிவானஒரு கருத்தை இஸ்லாம் கொண்டுள்ளது.
இக்கருத்து மனிதவாழ்வின் அனைத்துத் துறைகளையும் பொதிந்துள்ளது.இந்தவகையிலேயே இஸ்லாம் தனிமனிதனுக்கும், சமூகத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றியும், பல்வேறு சமூகங்களுக்கிடையிலான தொடர்புகள் எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது பற்றியும், சமூகப் பண்பின் முக்கியஅங்கங்களான அரசியல், பொருளாதார நிறுவனங்கள்எவ்வகையில் அமைதல் வேண்டும் என்பது பற்றியும் மிகத்தெளிவாக விளக்கியுள்ளது.
இப்பிரபஞ்சத்தையும் அதில்உள்ள அனைத்தையும், சிருஷ்டித்த இறைவன், அவற்றை ஒரு ஒழுங்கானகட்டுக்கோப்பிலும், சீரமைப்பிலும் படைத்துள்ளான்.இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பரஸ்பரம் இணைந்து, ஓர் ஒழுங்கிற்கும் கட்டுப்பாட்டிற்கும், வரையறைக்கும் உட்பட்டேஇங்குகின்றன.
‘அவனே யாவற்றையும் படைத்து, ஒவ்வொன்றிற்கும் ஓர் ஒழுங்கை வழங்கினான்’ (குர்ஆன் 25:2)
‘நாம் ஒவ்வொரு பொருளையும் (குறிப்பான) அளவின் படியே சிருஷ்டித்திருக்கின்றோம்’ (குர்ஆன் 55:49)
‘தன்னுடைய வரையறைக்குள் (தவறாமல்) செல்லும் சூரியனும் ஓர் அத்தாட்சியாகும்.இது யாவையும் நன்கறிந்தவனும், மிகைத்தோனுமாகிய இறைவனால் விதிக்கப்பட்டதாகும். (உலர்ந்து வளைந்த)பழைய பேரீச்சங்கம்மைப் போல (பிறையாக) ஆகும் வரையில் சந்திரனுக்கும் நாம் பல பட்சங்களைஏற்படுத்தியி ருக்கின்றோம். சூரியன் சந்திரனை அணுகமுடியாது, இரவு பகலை முந்த முடியாதுஇவ்வாறே கிரகங்களும், நட்சத்திரங்களும், ஒவ்வொன்றும் தன்னுடையவட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றது’ (குர்ஆன் 36: 38, 40)
இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொருபடைப்பும் அதற்கென வரையறுக்கப்பட்ட பங்கையும் பணியையும் ஓர் ஒழுங்கு முறைக்கேற்ப நிறைவேற்றும்வகையில் சிருஷ்டிக்கப்பட்டிருப்பதால், இயற்கைச் சிருஷ்டியில் ஓர் ஒழுங்கும், கட்டுப்பாடும், சீரமைப்பும் காணப்படுகின்றது. இது போன்றே மனித சமூகத்தின் ஒவ்வொருஅங்கமும், பரஸ்பரம் ஒத்துழைத்துதொழிற்படும் போது அமைதியும்,ஒழுங்கும் உருவாகிசமூக, பொருளாதார நீதி நிலைபெறுகின்றதுஎன்பது இஸ்லாத்தின் கருத்தாகும்.
ஒரு கட்டத்தை அதில் உள்ள ஒவ்வொரு செங்கல்லும் பரஸ்பரம்ஒன்றுடன் மற்றொன்று இணைந்து உறுதியும், பலமும் அடையச் செய்வது போன்று சமூகத்தின் ஒவ்வொரு தனிமனிதனும், ஏனையவர்களுடன் இணைந்து, சமத்துவம், சகோதரத்துவம், சமூக உறுதிப்பாடுஆகிய பெறுமானங்களின் அடிப்படையில், பரஸ்பர கடமைகள், உரிமைகளைப் பேணிப் பாதுகாத்து, சமூக, பொருளாதார நீதியின்செயல்பாட்டை உறுதி செய்யும் வகையில் இஸ்லாம் இவை தொடர்பான சட்டங்களையும், விதிகளையும் ஏற்படுத்தியுள்ளது.
‘அத்ல்’ எனக் குர்ஆன் குறிப்பிடும் நீதியானது முஸ்லிம் சமூகத்தின் அத்திவாரமாகும்.நீதி வழங்குவதை இறைவனின் பண்புகளில் ஒன்றாக அது குறிப்பிடுகின்றது. எனவே, விசுவாசிகளை நீதிசெலுத்துமபடியும், நீதியை நிலைநாட்டும்படியும் அது பணிக்கின்றது.
‘விசுவாசிகளே! நீங்கள் நீதி செலுத்தும்படியும், நன்மை செய்யும் படியும், உறவினர்களுக்கு உதவி செய்யும் படியும் நிச்சயமாக அல்லாஹ் உங்களைஏவுகின்றான். மானக்கேடான காரிங்கள், அக்கரமம், பாபம் ஆகியவைகளிலிந்து உங்களைத் தடை செய்கின்றான்’ குர்ஆன் 16:90
நீதி என்பது இறை விசுவாசத்துடன்பின்னிப் பிணைந்துள்ள ஒன்றாகவும்,ஒருவன் நீதியின் அடிப்படையில் செயல்படுவது உண்மையான பக்தியின் வெளிப்பாடாகவும்இஸ்லாம் கருதுகின்றது.
‘நற்செயல் என்பது உங்களது முகங்களைக் கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல.மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் ஒருவன்முழுமையாக நம்புவதும், தமக்கு விருப்பமானபொருளை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும் வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை மீட்பதற்கும்வழங்குவதும், தொழுகையை நிலைநாட்டிஸகாத்தைக் கொடுத்து வருவதுமே நற்செயலாகும்’ குர்ஆன் 2:177
இஸ்லாத்தில் இறை நம்பிக்கைக்கும், இறை பக்திக்கும்.சமூக, பொருளாதார நீதிக்குமிடையிலானஇறுக்கமான தொடர்பை குர்ஆனின் இத்திருவசனம் மிகத்தெளிவாக விளக்குகின்றது. சமூகத்தில்வசதியும், வாய்ப்பும், பலமும், சக்தியும் படைத்தோர், பலவீனர்கள், வசதியற்றோர், வறுமையில் வாடுவோர், வயோதிபர், அங்கவீனர் ஆகிய அனைவருக்கும்ஒரு குறிப்பிட்ட தரமான வாழ்விற்கு உறுதி செய்தல் கடமையாகும் என இஸ்லாம் கூறுகின்றது.
மனிதன் உழைத்துப் பொருளீட்டி வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் வேண்டும்என்ற கருத்தை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இத்தகைய உழைப்பாளிகள், அவர்களது உழைப்பில்எத்தகைய தடையுமின்றி ஈடுபடக்கூடிய வாய்ப்பை இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்தல் ஆட்சியின் பொறுப்பாகும். போதிய வசதியற்ற குடும்பங்களுக்கு அவர்களது அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்பட வழிவகை செய்யப்படல் வேண்டும்.
மற்றவரிடம் கருணை காட்ட
மற்றவரிடம் கருணை காட்டாதவர்கள் மீது இறைவனும் தன் கருணையைப் பொழிவதில்லை!
தான் விரும்புவதையே தன்னுடைய சகோதரருக்கும் விரும்பாதவரை ஒருவர் உண்மையான இறைநம்பிக்கையாளராக ஆக முடியாது!
அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்க, தான் மட்டும் வயிறார உண்பவன் இறைநம்பிக்கையாளன் அல்ல!
பிறரை(த் தாக்கி) கீழே வீழ்த்தி விடுபவன் வலிமையாளன் அல்லன். (மாறாக) கோபம் வரும்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே (உண்மையான) வலிமையாளன்!
இறைவன் உங்களுடைய உடலமைப்பையும், தோற்றத்தையும் கொண்டு உங்களைக் கணிப்பதில்லை. மாறாக, அவன் உங்களுடைய உள்ளத்தையும், செயல்களையும் மட்டுமே பார்க்கின்றான்!
ஒரு மனிதன் தாகத்தால் தவித்த நாய் ஒன்றுக்கு பருக தண்ணீர் வழங்கினான். (அவனுடைய இந்த செயலுக்குப் பகரமாக) இறைவன் அவனது பாவங்களை மன்னித்தான். (அப்போது) முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: இறைத்தூதரே! விலங்குகளிடத்தில் கருணைக் காட்டினாலுமா எங்களுக்கு வெகுமதி கிடைக்கும்? முஹம்மத் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: ஒவ்வொரு உயிர்களிடத்திலும் காட்டப்படும் கருணைக்கு வெகுமதி உண்டு! (அந்த உயிரினம் ஒரு மனிதனாயினும் சரி அல்லது ஒரு விலங்காயினும் சரியே)!