அனைத்து விஷயங்களிலும் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவனாகவே படைக்கப்பட்டுள்ளவன் மனிதன்..! அதனால், எது சரி, எது தவறு என்பதை பிரித்து அறிய இயலாத நிலைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்பவன்..! சூழ்நிலைக்கேற்ப செயல்களின் வீரியங்களுக்கு ஏற்றவாறு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு உணர்வுகளை அடக்கி ஆள்வதே அவனுக்குரிய வெற்றிக்கலன்..!அதற்கு உதவுவதே திருக்குர்ஆனிய அரண்..!
அருள்மறைக் குர்ஆனின் நற்செய்திகளை வாங்கி நமக்கு வழங்கிய அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அதில் சொல்லப்பட்ட செய்திகளின் அடிப்படையில் தங்களுடை வாழ்வை அமைத்துக் கொண்டு நமக்கும் ஏவினார்கள்.
குரல் வளையிலிருந்து அதிகமான சப்தம் வெளிப்படுவதையே இஸ்லாம் தடுத்திருக்கிறது அதை அஞ்ஞானப் பழக்கம் என்று இடித்துரைக்கிறதென்றால் கோபத்தின் வாயிலாக கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் செய்வதையும் ஒருவருக்கொருவர் காறி உமிழ்ந்து கொள்வதையும் சட்டையைப் பிடித்துக் கொண்டு மல்லுக்கு நிற்பதையும் இஸ்லாம் அனுமதிக்குமா ? சிந்தித்துப் பார்க்கக் கடமைப் பட்டுள்ளோம். இதனால் தான் கோபத்தை மென்று விழுங்கி விடுங்கள் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறினான்.
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள்! என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதே! என்று உபதேசம் செய்ய அவர் பல முறை வேண்டிய போதும் நபி (ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதே! என்றே கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ{ஹரைரா ரலி, ஆதாரம் : புகாரி 5651
ஒருவருக்கு அதிகமாக கோபம் வந்தால் அந்த கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து உடல் நலத்தையும், மறுமை வாழ்வையும் காக்கக் கூடிய அழகிய ஆலோசனையையும் அல்லாஹ்விடமிருந்து சத்தியத்தை ஏந்தி வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்கு சொல்லித் தந்துள்ளார்கள்.
நின்று கொன்டிருக்கும் போது கோபம் வந்தால் உட்கார்ந்து கொள்ளட்டும், உட்கார்ந்த பின்பும் கோபம் தணிய வில்லை என்றால்,சிறிது நேரம் படுத்துக் கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.ஆதாரம் : அஹ்மத், திர்மிதி
கோபம் வந்து விட்டால் அது விடைபெறும் பொழுது பெரும் விளைவுகளை உண்டாக்கிவிடும் என்பதால்தான் , தொடர்ந்து அண்ணல் அவர்கள் பல அறிவுரைகளை கூறி அவற்றை வரிசையாக பின் பற்றும்படி வலியுறுத்திக் கூறினார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறப்பெய்திய செய்தி அறிந்து அங்குக் குழுமி இருந்த மக்களிடம் அண்ணல் அவர்கள் இறக்கவில்லை என்றும் இறந்து விட்டதாகக் கூறியவர்களிடம் கடும் கோபம் கொண்டும் பேசிக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்களைப் பார்த்து அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறிய முதல் வார்த்தை நீங்கள் முதலில் உட்காருங்கள் என்பது தான்!அதற்கு அவர்கள் மறுக்கவே மீண்டும், மீண்டும் உட்காருங்கள் என்றுக் கூறிவிட்டே அண்ணல் அவர்கள் இறந்து விட்டார்களா ? இல்லையா ? என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருந்த மக்களை தெளிவுப் படுத்தினார்கள் இதில் கடும் கோபத்தில் இருந்த உமர் (ரலி) அவர்களும் தெளிவு பெற்றார்கள்.
கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறிய உபதேசத்தை உள்ளத்தில் ஏற்றி வைத்திருந்த அபூபக்ர்(ரலி) அவர்கள்,உமர்(ரலி) அவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபடாமல் அண்ணல் அவர்களின் உபதேசத்தைக் கூறி அமரச் சொல்லி விட்டு அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கூறி உமர்(ரலி) அவர்களின் கோபத்தை கட்டுப்படுத்தி விட்டு சிந்திக்கத் தூண்டினார்கள்.
கோபம் எற்பட்டதும் இரத்த ஓட்டம் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறது என்பதால் இரத்த ஓட்டம் கட்டுக்குள் வரும் வரை அமர்ந்து விடுவது அல்லது படுத்து விடுவது சிறந்தது என்பதை 1400 வருடங்களுக்கு முன் அழகிய உபதேசமாக நம்மிடம் கூறினார்கள் அண்ணல் அவர்கள்.
இன்று நாம் பார்க்கின்றோம்..!இரத்த அழுத்தத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவரை அணுகினால் இரத்தத்தை சீராக இயங்கச் செய்வதற்கான சிகிச்சை (இஞ்செக்ஷன் அல்லது மாத்திரைகள்) கொடுக்கப்பட்டால் இரத்தம் சீராக இயங்கும் வரை சிறிது நேரம் படுக்கச்செய்து விடுகின்றனர் மருத்துவர்கள்.
அல்லாஹ்வின் கட்டளைகளையும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஆலோசனைகளையும் வரிசையாக செயல் படுத்தி,கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்து பெரும் விளைவுகளைத் தடுத்து பாவங்களிலிருந்து விலகிக் கொள்ளும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக !(தொடர்புடைய ஆக்கங்கள்:பொய்..!-ஒரு மறைமுகத் தீமை..!!)