அலிஃப். லாம். மீம். இது அல்லாஹ்வின் வேதமாகும்; இதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இறையச்சமுடையோர்க்கு (இது) சீரிய வழிகாட்டியாகும். அவர்கள் எத்தகையோர் என்றால் ‘கைப் மறைவானவற்றை நம்புகிறார்கள். மேலும் தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள். மேலும், உமக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின் (குர்ஆன்) மீதும், உமக்கு முன்னர் இறக்கியருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கின்றார்கள். இறுதித் தீர்ப்புநாளின் (மறுமையின்) மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கின்றார்கள். இத்தகையோரே தம் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருப்பவர்கள். மேலும், இவர்களே வெற்றி பெறுபவர்கள். (இவ்விஷயங்களை) யார் நிராகரித்தார்களோ, அவர்களை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காதிருப்பதும் அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுதான். எவ்வகையிலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்லர். அல்லாஹ் அவர்களின் இதயங்கள் மீதும், அவர்களின் செவிப்புலன்கள் மீதும் முத்திரை வைத்து விட்டிருக்கிறான். மேலும் அவர்களுடைய பார்வைகள் மீது திரை விழுந்திருக்கிறது. தவிர அவர்கள் கடும் தண்டனைக்கு உரியவர்களாவர்.– திருக் குர்ஆன்