குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-11

http://youtu.be/CaiCYhWzA1A

 

மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் தூய்மையான அனுமதிக்கப்பட்ட பொருள்களைப் புசியுங்கள். மேலும், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான பகைவன் ஆவான்! அவன் பாவத்தையும், மானக்கேடான செயல்களையும் செய்யுமாறுதான் உங்களை ஏவுகிறான்; இன்னும் நீங்கள் அறியாத விஷயங்களையெல்லாம் அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்லுமாறு உங்களை அவன் ஏவுகின்றான்.  “அல்லாஹ் இறக்கியருளிய (வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “இல்லை! எங்கள் தந்தையார், பாட்டனார் எந்த வழியைப் பின்பற்றியதாகக் கண்டோமோ அதனையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று மறுமொழி கூறுகின்றார்கள். அப்படியானால் அவர்களின் தந்தையார், பாட்டனார் எதையும் சிந்தித்து உணராதவர்களாயும் நேர்வழி பெறாதவர்களாயும் இருந்தாலுமா இவர்கள் அவர்களைப் பின்பற்றுவார்கள்? இறைநெறியைப் பின்பற்ற மறுப்பவர்களின் உவமையானது கால்நடைகளைப் போன்றதாகும். சப்தமிடும் இடையனின் கூப்பாட்டையும், அழைப்பொலியையும் தவிர அவை வேறு எதையும் கேட்பதில்லை. அவர்கள் செவிடர்களாய், ஊமையராய், குருடர்களாய் இருக்கின்றனர்; எனவே எதனையும் அவர்கள் அறியமாட்டார்கள்.  இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வுக்கு மட்டுமே பணிந்து வாழ்பவர்களாய் இருப்பின் நாம் உங்களுக்கு அளித்திருக்கும் தூய்மையானவற்றைத் தாராளமாகப் புசியுங்கள்; மேலும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள். செத்த பிராணியும், இரத்தமும், பன்றி இறைச்சியும், அல்லாஹ்வைத் தவிர மற்றவரின் பெயர் கூறி அறுக்கப்பட்டவையுமே உங்களுக்குத் தடுக்கப்பட்டவையாகும். எனினும், எவரேனும் ஒருவர் (இப்பொருள்களில் ஏதாவதொன்றைப் புசிக்க வேண்டிய) கட்டாயத்திற்குள்ளானால், இறைச்சட்டத்தைத் தகர்க்கும் நோக்கமில்லாமலும், வரம்பு மீறாமலும் (தேவைக்கு மிகாமலும்) அதனைப் புசிப்பதில் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும், கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் இறக்கியருளிய சட்டங்களை எவர்கள் மறைக்கின்றார்களோ மேலும் (இம்மையின்) அற்ப இலாபத்திற்காக அவற்றை விற்கின்றார்களோ அவர்கள், உண்மையில் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் நிரப்பிக் கொள்வதில்லை. இன்னும் இறுதித் தீர்ப்புநாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான்! மேலும் அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனையும் உண்டு. இவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாக தண்டனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள்! நரக வேதனையைச் சகித்துக் கொள்வதற்கு(த் தயாராய் உள்ள) இவர்களின் துணிவு எத்துணை வியப்புக்குரியது! இதற்குக் காரணம், நிச்சயமாக அல்லாஹ் முழுக்க முழுக்க சத்தியத்துடனேயே வேதத்தை இறக்கியிருந்தும், வேதத்தில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் தம் பிணக்குகளில் மூழ்கி (சத்தியத்தை விட்டு) வெகு தூரம் சென்று விட்டதுதான்!

Related Post