– நூருத்தீன்
கப்பாப் பின் அல்-அரத் (ரலி)-4
மனிதன் மீது, அவன் குறிப்பிடத்தக்கதொரு பொருளாகவே இல்லாதிருந்த ஒரு நீண்ட காலகட்டம் செல்லவில்லையா? நாம் மனிதனை கலக்கப்பட்ட ஓர் இந்திரியத் துளியிலிருந்து படைத்தோம்; நாம் அவனைச் சோதிக்க வேண்டும் என்பதற்காக! மேலும், இந் நோக்கத்திற்காக நாம் அவனைச் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். நாம் அவனுக்கு வழிகாட்டினோம். இனி, அவன் நன்றியுள்ளவனாகவும் இருக்கலாம் அல்லது நன்றி கொன்றவனாகவும் இருக்கலாம்.
மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து அன்சார்களின் அன்பு அரவணைப்பில் தஞ்சம் புகுந்தவுடன்தான், என்னவென்று கூட அறியப்பட்டிராத நிம்மதி அவருக்குக் கிடைக்க ஆரம்பித்தது. நெருங்கிக் கொண்டார். நபிகள் நாயகம் (ஸல்) நிழலில் ஒடுங்கிக் கொண்டார். சொகுசு உணர முடிந்தது. ஆனால் அந்த சொகுசு நிம்மதி என்பதெல்லாம் ரிடையர்மென்ட் பென்ஷன் வாங்கிக் கொண்டு, கயிற்றுக் கட்டில் போட்டு, நிலா ஒளியில் நிம்மதியாக உறங்கும் நம் ரகமில்லை. அவர்களின் அகராதி வேறு.
முஸ்லிம்களுக்கு அடுத்த சோதனையாக பத்ரு யுத்தம். அப்பொழுது போரிடத் தயாரானதே முந்நூற்று சொச்சம் பேர்தான். அதில் ஒருவர் கப்பாப் பின் அரத் ரலியல்லாஹு அன்ஹு. அதற்கு அடுத்த சில வருடங்களில் உஹது யுத்தம். அதிலும் கப்பாப் ஆஜர். மருத்துவ விடுப்பு, யதேச்சையான விடுப்பெல்லாம் அறியாத ஊழியர்கள் அவர்கள். இஸ்லாத்தின் உண்மை ஊழியர்கள்.
உஹது யுத்தத்தில்தான் தனது துஆவின் இரண்டாவது பகுதியை இறைவன் நிறைவேற்றுவதைக் கண்டு களித்தார் கப்பாப். ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹு, முஹம்மத் நபியின் சிற்றப்பா. மாவீரர். அல்லாஹ்வின் சிங்கம் எனும் பட்டப் பெயருள்ளவர். அவர் அந்தப் போரில் சிபா இப்னு அப்துல் உஸ்ஸாவை கொன்றொழித்தார்.
அதன் பிறகு நடந்த அனைத்துப் போரிலும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடன் பங்கெடுத்துக் கொண்டவர் கப்பாப். பின்னர் கலீஃபாக்களின் ஆட்சியில நிகழ்வுற்ற யுத்தங்களிலும் போர் வீரர் தான். ஓய்வு ஒழிச்சலெல்லாம் இல்லை.
முதல் நான்கு கலீஃபாக்களின் ஆட்சியையும் கண்டு வாழ்ந்து விட்டு மறையும் அளவு அவருக்கு ஆயுளை நீட்டித்திருந்தான் இறைவன். உமர், உதுமான் ரலியல்லாஹுஅன்ஹும் காலங்களில் இஸ்லாமிய அரசின் வருமானம் பல்கிப் பெருகியது. கப்பாபிற்கு அரசாங்கக் கருவூலத்திலிருந்து நிறையப் பணம் பங்காய்க் கிடைத்தது.
வாழ்நாளெல்லாம் வறுமையே போர்வையாக வாழ்ந்தவருக்கு அவரது இறுதிக் காலத்தில் நிறைய செல்வம் சேர்ந்தது. தங்கம், வெள்ளி என்று அளவிட முடியாத செல்வம். அவர் கனவும் கண்டிராதவை. கப்பாப் அவற்றைத் தன்னிஷ்டத்திற்குச் செலவு செய்தார்.
ஈராக்கிலுள்ள கூஃபாவில் ஒரு வீடு கட்டினார். அந்த வீட்டில் அனைவரும் பார்க்கக் கூடிய ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தார். நாணயங்கள், பணம் எல்லாவற்றையும் எடுத்து அந்த இடத்தில் வைத்தார். லாக்கர், பூட்டு, செக்யூரிட்டிமேன் எல்லாம் இல்லை. சும்மா அப்படியே வைத்தார். “இதனால் சகலமானவர்களுக்கும்” என்று அறிவிப்பெல்லாம் செய்யவில்லை. ஏழைகள், எளியவர்கள், வறியவர்கள் என்று அவரவர்கள் வருவார்கள். தங்களுக்குத் தேவையான பணம் எடுத்துக் கொள்வார்கள், செல்வார்கள். யாருக்கும் அனுமதி, டோக்கன் என்றெல்லாம் எதுவும் கிடையாது. “என்னதெல்லாம் உன்னது” அவ்வளவுதான்.
வீடு கட்டி விழா நிகழ்த்துவதை வழக்கப் படுத்தி இருக்கும் நம் சமுதாயத்திற்கு அவரது விசனம்தான் ஆச்சர்யம். “ஒரு முஸ்லிம், தாம் செய்கிற எல்லாச் செலவினங்களுக்காகவும் பிரதிபலன் அளிக்கப்படுவார்; தேவைக்கு அதிகமாக வீடுகட்ட இந்த மண்ணில் அவர் செய்கிற செலவைத் தவிர”
அதனால்தான் தனது வீட்டையே பொதுவுடைமை போல் ஆக்கிவிட்டார் போலிருக்கிறது.
இவ்வளவையும் செய்துவிட்டு பயந்து கிடந்தார் அந்த ஏழை. அவ்வப்போது விம்மி அழுது சொல்வார், “நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலனளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. அதன் (உலகப்) பலன்களில் எதையுமே அனுபவிக்காமல் சென்றுவிட்டவர்களும் எங்களிடையே உண்டு. முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அத்தகையவர்களில் ஒருவர். அவர் உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டார். அவரைக் கஃபனிடுவதற்கு (அவரின்) கோடிட்ட வண்ணத் துணி ஒன்றைத் தவிர வேறெதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தத் துணியினால் நாங்கள் அவரின் தலையை மூடியபோது அவரின் கால்கள் இரண்டும் வெளியே தெரியலாயின் அவரின் கால்கள் இரண்டையும் நாங்கள் மூடியபோது அவரின் தலை வெளியே தெரியலாயிற்று. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் துணியால் அவரின் தலையை மூடி விடும்படியும் அவரின் கால்கள் இரண்டின் மீதும் ‘இத்கிர்’ புல்லைச் சிறிது போட்டு (மறைத்து) விடும்படியும் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்ததற்கான இவ்வுலகப்) பலன் கனிந்து அதைப் பறித்து (சுவைத்து)க் கொண்டிருப்பவர்களும் எங்களில் உள்ளனர்.” (சஹீஹ் புகாரி)
பொத்துக் கொண்டு கொட்டிய செல்வமும் செழுமையும் மறுமையில் எங்கே தனது நற்கூலியைக் குறைத்து விடுமோ, ஏதும் தண்டனைக்கு வழி வகுத்து விடுமோ என்று பயந்து கிடந்தார் நிசமாலுமே நெருப்பில் புடம்போடப்பட்ட அந்தத் தங்கம். ரலியல்லாஹு அன்ஹு.
இறுதிக் காலத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது கப்பாபிற்கு. அதன் நோவு மிகவும் கடினமானதாயிருந்தது. எந்த அளவென்றால், “நபி(ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்திருக்காவிட்டால் அதை வேண்டி நான் பிரார்த்தனை புரிந்திருப்பேன். அந்த அளவுக்கு இப்போது நான் நோயினால் சிரமப்படுகிறேன்” அந்த அளவு நோவு. அந்த அளவு அவரின் ஈமானின் பக்குவம். எந்த ஒரு நபிக்கட்டளையும் அவர்களுக்கெல்லாம் “சும்மா” கிடையாது. நபி சொன்னார், கேட்டோம், செய்தோம். அவ்வளவுதான்.
அவர் மரணப் படுக்கையில் கிடக்கும்போது அவரது அறைக்குள் நண்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் கப்பாப் தெரிவித்தார்:
“எண்பதாயிரம் திர்ஹம் அந்த இடத்தில் இருக்கிறது. அவை மறைத்து வைக்கப்படவில்லை. என்னைத் தேடி வந்தவர்கள் யாரையும் நான் இல்லையென்று திருப்பி அனுப்பியதில்லை” என்று சொல்லிவிட்டு விம்ம ஆரம்பித்தார்.
“ஏன் அழுகை?” என்று விசாரித்தார்கள் நண்பர்கள்.
“ஏன் அழுகிறேனா? எனக்குமுன் பலத் தோழர்கள் சென்று விட்டார்கள். அவர்களுக்கு உரிய எந்த வெகுமதியையும் இவ்வுலகில் வெகுமதியாக அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் நான் நீண்ட நாள் வாழ்ந்து செல்வம் பார்த்துவிட்டேன். எனது அத்தனை செயல்களுக்கும் இதுதான் வெகுமதியென்று இங்கேயே கிடைத்து, மறுமையில் ஒன்றுமில்லாமல் போய்விடுமோ என்று நினைத்து அழுகிறேன்.”
மலிவாகக் கட்டப்பட்டிருந்த தனது வீட்டையும் மக்களுக்காகத் தான் பணம் விட்டுவைத்திருந்த இடத்தையும் நண்பர்களுக்குக் காட்டினார். “அல்லாஹ்வின் மேல் ஆணையாக! நான் கயிற்றால் ஏதும் கட்டி வைக்கவுமில்லை. கேட்டு வருபவர் எட்டாத தொலைவிலும் வைக்கவில்லை” என்று சொல்லிவிட்டுத் தனக்கெனத் தயாராய் வைக்கப்பட்டிருந்த கஃபனைக் காட்டினார். அதுவே அவருக்கு ஆடம்பரமாய்த் தோன்றியது. நண்பர்களிடம் விசனப்பட்டார்.
”இதோ எனக்காக முழு அளவாவது கஃபன் துணி தயாராய் இருக்கிறது. ஆனால் ஹம்ஸா! அவர் உஹதுப் போரில் வீர மரணம் தழுவியபோது அவர் உடம்பை முழுதும் மறைக்குமளவு துணியில்லை. கடைசியில் புல்லைப் போட்டு மூடினோம்.”
அவர் பேச்சில் ஏதாவது ஓர் ஒற்றை எழுத்து நமக்குப் புரிந்து விட்டாலே உத்தமம். நமது புலனும் உணர்வும் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது மாசுபட்டதொரு சூழல். நமது சிந்தனைத் தளமே வேறு. யோக்கியம் எனும் வார்த்தைக்கு நமது அர்த்தம் வேறு. அவர்கள்? ரலியல்லாஹு அன்ஹும்.
ஒருமுறை மக்காவில் குரைஷிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சிறப்பு அமர்வுக்கு நேரம் கேட்டார்கள். அதாவது ஏழை எளியவர்களாகிய பிலால், சுஹைப், கப்பாப் ரலியல்லாஹு அன்ஹும் இவர்களுடனெல்லாம் அமராமல் மேட்டுக்குடியினருக்கான தங்களுக்குத் தனி அமர்வு. அல்லாஹ் வசனங்களை இறக்கினான். வறியவர்கள் என்று சொல்லப்பட்ட அவர்களை இழுத்து அரவணைத்து, புகழ்ந்து, கௌரவித்து வசனங்கள் வந்தன:
(நபயே!) தங்கள் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடி, எவர் காலையிலும் மாலையிலும், அவனை(ப் பிரார்த்தித்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீர் விரட்டி விடாதீர்; அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை, உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை – எனவே நீர் அவர்களை விரட்டி விட்டால், நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர். நமக்கிடையில் (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள்புரிந்து விட்டான்? என்று (செல்வந்தர்கள்) கூற வேண்டுமென்பதற்காக அவர்களில் சிலரை சிலரைக்கொண்டு நாம் இவ்வாறு சோதித்தோம். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனில்லையா? நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)” என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப்பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்-அன்ஆம் 6:52-54)
அந்த வசனங்கள் இறங்கிய நிமிடத்திலிருந்து அவர்களைக் கண்டுவிட்டால் முஹம்மத் நபி (ஸல்) மேலும் அன்பாய் நடாத்த ஆரம்பித்தார்கள். தனது விரிப்பை அவர்களுக்கு விரித்து, அவர்களது தோள்களைத் தட்டி, “என் இறைவன் சிறப்பிக்கும்படி பரிந்துரைத்தவர்களுக்கு நல்வரவு உரித்தாகுக”. இஸ்லாமிய அகராதியில் மேட்டுக்குடிக்கு புது அர்த்தம் புனையப்பட்டது.
ஹிஜ்ரீ 37ஆம் வருடம் கப்பாப் இப்னு அரத் (ரலி) உயிர் நீத்தார்கள். அவரது வஸிய்யத்படி ஊரின் புறப்பகுதியில் அவரை அடக்கம் செய்தனர். நகரின் உள்ளே இருக்கும் மையவாடி வேண்டாம் என்று சொல்லி விட்டார். ஸிஃப்பீன் யுத்தத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த அலீ (ரலி) அந்தப் பகுதியில் புதிதாய் இருந்த ஏழு கப்ருகளைக் கண்ணுற்று விசாரிக்க, மக்கள் தெரிவித்தார்கள்:
“அமீருல் மூமினீன்! முதல் கப்ரு கப்பாபுடையது. அவரது விருப்பப்படி அவரை இங்கு அடக்கம் செய்தோம். மற்றவர்கள் அவரைத் தொடர்ந்தவர்கள்”
ஆழ்ந்த துக்கத்திற்குப் பிறகு இறைஞ்சினார் அலீ: “அல்லாஹ்வின் கருணை கப்பாப் மேல் உண்டாகட்டும்! அவர் இஸ்லாத்தைப் பரிபூரண உள்ளத்துடன் ஏற்றார்! முழு மனதுடன் ஹிஜ்ரத் மேற்கொண்டார்! தனது வாழ்நாள் முழுதும் போராளியாக வாழ்ந்தார்! நேர்மையான செயல் புரிந்த எவரின் வெகுமதியையும் அல்லாஹ் குறைத்துவிட மாட்டான்”
ரலியல்லாஹுஅன்ஹு!