ஒளிப்பட உரை: முஹம்மத் மன்சூர்
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் மனித வாழ்வின் பெறுமானம்!
அல்லாஹ் காலத்தை முன்வைத்து சத்தியமிடுவதற்கு அறிவார்ந்த நியாயமுண்டு. அதுவெனின் காலம்தான் மனித வாழ்வு. உலகம், மனிதன் வாழ்வு ஆகிய மூன்றும் நெருங்கிய தொடர்பைக் கொண்டன.
உலகில் மனித வாழ்வு காலத்தைக் கொண்டு கணிக்கப்படுவதைப் பொதுவாக அவதானிக்கலாம். மனிதன் உலகில் எப்போது பிறந்தான்? எப்போது இறந்தான்? என்பதை வைத்து ஆயுளைக் கணிப்பது வாழ்வின் ஆன்மீகப் பெறுமானமல்ல. தாவரம், கட்டடம் போன்ற சடங்களையும் இப்படித்தான் கணிப்பிடுகிறோம். இது அவற்றின் பெளதீகக் கணிப்பீடு.
மனித ஆயுளின் உண்மைப் பெறுமானம் ஒருவன் எத்தனை வருடங்கள் உலகில் வாழ்ந்தான் என்ற கணிப்பீடு அல்ல. வாழ்க்கை பற்றிய உணர்வே ஆயுளின் உண்மைப் பெறுமானமாகும்.
இவ்வாறு அறிஞர் ஷஹீத் ஸெய்யித் குதுப் (ரஹ்) வாழ்வின் யதார்த்தத்தை குறிப்பிடுகிறார். “ஒருவன் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விசுவாசம் கொண்டு பின் மார்க்கத்தின் போதனைகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் இசைய என்ன நற்கருமங்களைப் புரிகிறானோ அதைக் கொண்டு ஆயுளை அளவிடுவதே வாழ்க்கைக்குரிய உண்மை மதிப்பீடாகும்.”
காலத்தின் மீது சத்தியமிட்டு மனிதனுக்கு அல்லாஹ் உணர்த்த விரும்புகின்ற மிகத் தெளிவான உண்மை இதுவேயாகும். “காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்திலிருக்கிறான். ஆனால், எவர் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொள்கிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் நஷ்டத்தில் இல்லை)” (103:1-3)
ஈமானிய இறை விசுவாசக் கோட்பாடும் அதையொட்டிய நற்கிரியைகளுமே வாழ்வின் அடிப்படைப் பெறுமானம் என்பதை அல்குர்ஆன் மிக அழுத்தமாகக் குறிப்பிடுவதை மேற்குறித்த ஸ¥ரா அஸ்ரில் காணலாம். இவற்றோடு மேலதிகமாக இன்னும் இரு பண்புகளை அல்குர்ஆன் விதந்துரைக்கிறது.
மேற்குறித்த நிலையைப் பெற்ற ஒருவன் அடுத்தவர் வாழ்வின் பெறுமானத்தை மேம்படுத்துவதற்கான கடமைப்பாட்டைக் கொண்டவன் என்பதையும், தான் விசுவாசித்த கொள்கையின் நித்தியத்தைப் பேண அவை அவசியம் என்பதையும் அடுத்து வரும் இரு பண்புகளும் உணர்த்தி நிற்கின்றன.
“காலம் பொன்னானது” (Life is Gold) இது நேரத்தின் பெறுமானத்தை உணர்த்தப் பொதுவாகக் கூறப்படும் கூற்று. ஆனால், இது காலத்துக்கு வழங்கப்படும் சட ரீதியான மதிப்பீடாகும். இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் காலம் என்பது நேரம், நேரம் என்பது காலம் (Life is Time. Time is Life) வாழ்வின் ஆன்மீகப் பெறுமானத்தை இது குறிக்கின்றது. அதன் முதல் மூல காரணி ஈமானாகும். அதுவின்றி நற்கிரியைகளுக்கு இறைவனிடம் அங்கீகாரமில்லை.
மற்றொரு பார்வையில் அடியானின் இறை விசுவாசம் ஆத்மாக்களின் உலகில் அவன் அல்லாஹ்வோடு செய்து கொண்ட உடன்படிக்கையை உண்மைப்படுத்துவதாகும். “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என ஒவ்வொரு ஆத்மாவையும் சாட்சியாக வைத்து இறைவன் கேட்ட போது, “ஆம் உண்மைதான். நாங்கள் சாட்சி கூறுகிறோம். (நீயே எங்கள் இரட்சகன்”) என மனிதன் தன் இரட்சகனிடம் ஒப்புதல் வழங்கிவிட்டான்.
வானங்கள், பூமி, மலைகள் தவிர யாவும் சுமக்க மறுத்த அமானிதம் எனும் பொறுப்பை மனிதன் சுமந்து கொண்டான். அமானிதம் வாழ்க்கையைப் பொறுப்புள்ளதாக ஆக்கியிருக்கின்றது. தப்kர் ஆசிரியர் அல்குர் துபி “அமானிதம் என்பது இஸ்லாத்தின் அனைத்துக் கடமைகளையும் விதிகளையும் குறிப்பிடுகின்றது” என்கிறார்.
பொதுவாக அனைத்து முபஸ்ஸிர்களும் அமானிதம் இறை வழிபாட்டை உணர்த்துகின்றது என்பர். மனித வாழ்வு முழுமையான இறை வழிபாடாகும். இதற்காகவே அல்லாஹ் மனிதனைப் படைத்துள்ளான் என்ற வாழ்வு பற்றிய இஸ்லாத்தின் அடிப்படைக் கண்ணோட்டத்திற்கு இசைந்ததாக அமானிதம் என்ற சொல்லின் கருத்தைக் குறிப்பிடலாம்.
“நிச்சயமாக வானங்களையும் பூமியையும் மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம். ஆனால் அதைச் சுமந்து கொள்ள அவை மறுத்தன. அதைப் பற்றி அவை அஞ்சின. ஆனால் மனிதன் அதைச் சுமந்து கொண்டான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கிறான்”. (33:72) அல்குர் ஆனின் இவ்வசனம் வாழ்வு அமானிதம் என்பதற்கு சான்றாகும்.
ஈமானுக்குப் பின் நிலைநாட்டப்பட வேண்டிய அனைத்து நற்கிரியைகளையும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். மனித மனம் (நல்லவை) எனத் தீர்மானிக்கும் அனைத்தும் மார்க்கமல்ல. அல்குர்ஆன், அஸ்- ஸ¥ன்னாவுக்கு மாற்றமாக முன்வைக்கப்படும் நற்கிரியைகள் மார்க்கத்தின் தெய்வீகத்தன்மைக்கு முரண்பட்டவையாகும்.
பாவமான தீய கருமத்தை நாடும் மனிதன் தன் மனோ இச்சைக்கு வழிபடுவது போல் மார்க்கத்தில் வரம்பு மீறுவதும் மனோ இச்சை வழிபாடாகும். இதன் மூலம் “அஃமாலுஸ் ஸாலிஹாத்” என ஸ¥ரா அல்-அஸ்ர் உணர்த்துவது தெய்வீகக் கட்டளைகள் என்பது தெளிவாகின்றது.
சட்டவாக்க உரிமை மனிதனுக்குக் கிடையாது. மனிதன் மனிதனுக்கு வழிகாட்டும் தகுதி அற்றவன். அவன் அல்லாஹ்வின் வழிகாட்டலை எத்தி வைப்பவன். இறைதூதர்கள் இப்பணியையே பூமியில் நிலைநாட்டினார்கள். இறை போதனைகள் வரையறுக்கப்பட்டவை. மனிதன் தன் சுய நாட்டப்படி அதில் எதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாது. இந்த வட்டத்துக்குள் நின்று நிலைநாட்டப்படும் நற்கிரியைகளே முஃமினின் வாழ்வைப் பெறுமதியுள்ளதாக்கும்.
ஒரு விசுவாசியின் ஆயுளுக்குரிய பெறுமானத்தை மேற்குறித்த வகையிலமைந்த நற்கிரியைகளாலேயே மதிப்பிட முடியும் என்பதையே ஸ¥ரா அல்- அஸ்ர் உணர்த்துகின்றது. (தொடரும்)
எச்.ஐ. கைருல் பஷர் -சிரேஷ்ட விரிவுரையாளர், ஜாமியா நZமிய்யா