முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட இஸ்லாம் வருடத்தில் இரண்டு பெருநாட்களை வழங்கியுள்ளது. இந்த
நாட்களைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.
”நபி(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வருகை தந்த போது மதீனாவாழ் மக்களுக்கு இரண்டு (திரு)நாட்கள் இருந்தன. அவ்விரண்டு நாட்களிலே மக்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள்”இவ்விரண்டு நாளை விடச்சிறந்த (இரண்டு) நாள்களை உங்களுக்கு இறைவன் ஏற்படுத்தியுள்ளான். அவை குர்பானி பெருநாள், மற்றும் ஃபிதர் பெருநாளாகும்” என்றார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: அபூதாவுத்,நஸயீ
மகிழ்ச்சிகரமான இவ்விருநாள்களில் ஆனந்தத்துடன் கொண்டாடுவதற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுகையைக் கொண்டு துவக்குமாறு நபி(ஸல்) அவர்கள் செயல்முறை மூலம் உணர்த்தியுள்ளார்கள்.பெருநாள் தொழுகைகளை திடலில் தொழுவது நபிகளாரின் வழக்கமாக இருந்துள்ளது.
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி(ரலி) நூல்கள்: புகாரி , முஸ்லிம், நஸயீ.
இதனடிப்படையில் பெருநாள் தொழுகையை பள்ளியில் தொழாமல் ஊரைச் சுற்றியுள்ள மைதானங்களில் வயல் வெளிகளில் அல்லது கடற்கரை மற்றும் மலையோரங்களில் உள்ள இடங்களில் நன்கு தூய்மையான இடத்தைத்தேர்ந்தெடுத்துத் தொழலாம். ஆனால் இன்று தமிழகத்தின் பல ஊர்களில் பள்ளிகளிலேயே பெருநாள் தொழுகைகளைத்தொழுவதை நாம் காண்கிறோம். வருடத்தின் இரு பெருநாள் தொழுகையையும் மேற்கண்டவாறு திடல்களில் தொழமுயற்சி மேற்கொள்ள வேண்டும். இடமின்மை அல்லது நிர்பந்தித்தினால் பள்ளியில் தொழுவது தவறில்லை.
பெருநாள் தொழுகைக்குக் கிளம்பும் முன் ஒற்றைப்படை எண்ணிக்கையில் பேரீத்தம் பழம் சாப்பிட்டுவிட்டுக் கிளம்புதல் நபிவழியாகும்.
நபி(ஸல்) அவர்கள் நோன்புப்பெருநாள் தொழுகைக்கு முன் பேரீத்தம் பழங்களைச் சாப்பிடும் வரை புறப்படமாட்டார்கள்; மேலும் அவற்றை ஒற்றையாகவும் சாப்பிடுவார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்கள்:புகாரீ,அஹ்மத்)இதேபோல் தொழுகைக்குச் செல்லும்போது ஒரு பாதையையும், திரும்பி வரும்போது வேறு பாதையையும் உபயோகிப்பது நபிவழியாகும்.
பெருநாள் தொழுகையில் பாங்கும், இகாமத்தும், உபரி வணக்கமும் இல்லை
பெருநாள் தொழுகைக்கு வழக்கமான ஐவேளைத் தொழுகைகளைப் போல பள்ளிவரச் சொல்லி அழைக்கும் பாங்கும், தொழுகைக்கு நிற்பதற்காக அழைக்கும் இகாமத்தும் இல்லை.
பாங்கு மற்றும் இகாமத் இல்லாமல் ஒன்றல்ல பல தடவை இரு பெருநாள்கள் தொழுகையை நான் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுள்ளேன். (அறிவிப்பவர்: ஜாபிர்பின்ஸமுதா(ரலி) நூல்: முஸ்லிம் மற்றும்அபூதாவூது)
இதேபோல் பெருநாள் தொழுகைக்கு முன்போ,பின்போ உபரி வணக்கங்கள் எதுவும் தொழ வேண்டியதில்லை.
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலாலும் சென்றனர். (அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரலி),நூல்:புஹாரி-989)
தொழும் முறை
பெருநாள் தொழுகை முஸ்லிம்களிடம் வழக்கத்தில் பல்வேறு முறைகளாக இருப்பதைக் காணமுடிகிறது.இவற்றைத்தவிர்த்து நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்தபடி நம் தொழும் முறையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் நோன்பும் ஹஜ் பெருநாள்களில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: அபூதாவூத்)
ஒவ்வொரு தக்பீர்களுக்கு இடையிலும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழவேண்டும். இத்தொழுகைகளில் ஸூரா காஃப் மற்றும் ஸூரா இக்தரபத் ஆகிய அத்தியாயங்கள் அல்லது ஸூரத்துல அஃலா மற்றும் ஸூரத்துல்காஷியாஅத்தியாயங்கள் ஓதலாம்.
பெருநாள் தொழுகைத் திடலுக்கு முதியவர்கள், சிறுவர்கள், கன்னிப்பெண்கள், மாதவிலக்குடைய பெண்கள் உட்பட அனைவரும் வருமாறு நபி (ஸல்) அறிவுறுத்தியுள்ளார்கள். மாதவிலக்குடைய பெண்கள் தொழும் நேரத்தில் மட்டும் தொழும் திடலிலிருந்து விலகியிருக்க வேண்டும். பெண்கள் பெருநாள் தொழுகைக்குச் செல்வதைத் தடுக்காமல் அனுமதிப்பதே சிறந்ததாகும். பெருநாள் தொழுகைக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில் திடலில் இருக்கும் போது அதிகமதிகம் பாவமன்னிப்புக்கோரி இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். பெருநாள்தொழுகையைப் பொறுத்தவரை தொழுகைக்குப் பின்பு தான் குத்பா (பிரசங்கம்) இருக்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் (மற்றும்) ஹஜ்ஜுப் பெருநாள் அன்று பெருநாள் தொழுமிடத்திற்குப் புறப்பட்டுச் சென்று முதன் முதலாக தொழுகையைத் துவங்குவார்கள். பிறகு மக்கள் வரிசையில் அமர்ந்திருக்கும் நிலையில் மக்களை நோக்கி நின்றவர்களாக, அவர்களுக்குப் பல கட்டளைகளை இடுவதோடு, (தக்வாவை – இறையச்சத்தைக் கொண்டு) வஸிய்யத்துச் செய்தவர்களாக நல்லுபதேசமும் செய்வார்கள். பிறகு (சன்மார்க்கப் பணிக்காக) யாதேனும் ஜமாஅத்தை அனுப்பவோ, அல்லது யாதேனும் முக்கியக் கட்டளையிடவோ கருதினால் அவற்றைச் செய்துவிட்டு (வீடு) திரும்பி விடுவார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீது (ரலி) நூல்: புகாரி,முஸ்லிம்)
மேலும் இவ்வாறான பொதுப் பிரசங்கத்திற்கு பிறகு பெண்களுக்கு தனியாக நல்லுபதேசம் செய்ததோடு அவர்களை தர்மம் செய்யும் படியும் நபி(ஸல்) கட்டளையிட்டார்கள்.
நபிவழியில் நம் பெருநாள் வணக்கங்களை அமைப்பதுடன் பெருநாள் தொழுகைக்குக் கிளம்பும் முன் மறக்காது பெருநாள் தர்மத்தையும் கொடுத்துவிட வேண்டும்.
இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்தி அவனது திருப் பொருத்தம் பெறும் அடியார்களில் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக.
தொகுப்பு: அபூஇப்ராஹீம்