முஸ்அப் பின் ஹூமைர் (ரலி)..! – 2

–  நூருத்தீன்

நபியவர்களிடம் துவங்கிய பாலபாடம்,

நபியவர்களிடம் துவங்கிய பாலபாடம்,

திக்குத் தெரியாத காட்டில் திசைமாறித் திரியும் இளைய சமூகத்தின் இனிய மாதிரியாய் இருந்தார் அந்த இளைஞர்..! செல்வக் குவியலில் புரண்டாலும்… இறைநியதிக்கு முன்பாக அதனை துச்சமென மதித்து தூக்கி எறிந்தர்..! ஏகத்துவத்தின் நிழலில் இன்பம் கண்டார்..!

நபியவர்களிடம் துவங்கிய பாலபாடம், அவரைச் செழுமைப்படுத்த ஆரம்பித்தது. முற்றிலும் புதிய முஸ்அபை அவரது நெஞ்சினுள் செதுக்கிக் கொண்டிருந்தன குர்ஆன் வசனங்களும் நபி மொழிகளும். சொல்லிக் கொள்ளும்படி எவ்வித இலட்சியமும் இன்றி உல்லாசமாய்த் திரிந்து, சொகுசை அனுபவித்துக் கொண்டிருந்த முஸ்அப், இஸ்லாத்திற்கு அளித்த உழைப்பு அபரிமிதமானது. அதற்காக அவர் உதறித் தள்ளியவை சாமான்யமானதல்ல!

முஸ்அபின் தாயார் குணாஸ் தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்காத குறையாக மகனைக் கவனித்துக் கொண்டார் என்று பார்த்தோமல்லவா? அதே அளவு அவர் மூர்க்கமானவருங்கூட. முஸ்அப் தம் தாயின் மனோபாவத்தையும் கோபத்தையும் நன்கு உணர்ந்திருந்தவர். எனவே தாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதைத் தொடக்கத்தில் அப்படியே மறைத்துக் கொண்டார். எப்பவும்போல் வீட்டிலும் மக்காவிலும் உலாத்திக் கொண்டிருப்பவர், யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து தாருல் அர்கம் சென்றுவர ஆரம்பித்தார்.

ஆனால் எத்தனை நாள் மறைக்க முடியும்? ஒருநாள் குரைஷிகளில் ஒருவன் முஸ்அப், தாருல் அர்கத்துக்குச் செல்வதையும் ‘புதியவர்கள்’ வழிபடுவதைப்போல் வழிபடுவதையும் கண்டு விட்டான். “முஸ்லிம்களுடன் சேர்ந்துவிட்டானா இவனும்! என்ன அநியாயம்? வைக்கிறேன் உனக்கு ஆப்பு” என்று உடனே அவன் சென்று சேர்ந்தது முஸ்அபின் தாயாரிடம். தன் மகன்மேல் எத்தகு அன்பும் பாசமும் கொண்டிருந்த தாய் அவர்? அதெல்லாம் ஒரே நொடியில், வந்தவன் தெரிவித்த ஒரே வார்த்தையில் தலைகீழாகிப் போனது. “என்ன? என் மகன் முஸ்லிமாகி விட்டானா?”

எப்பவும்போல் சாதாரணயமாய் முஸ்அப் வீட்டினுள் நுழைய, துவங்கியது களேபரம். மூர்க்கமான தாய், இளமைத் துடிப்புள்ள மகன், வட்டமேசை மாநாடு போலவா பேச்சுவார்த்தை நடந்திருக்கும்? ஏகப்பட்ட களேபரம். மகனை அடித்துத் துவைக்க கையை ஓங்கிய குணாஸ் நிறுத்திக் கொண்டு, “நீ சாதாரணமாய்ச் சொன்னால் கேட்க மாட்டாய். இரு வருகிறேன்” என்று சங்கிலியொன்றை எடுத்து வந்து வேலையாட்களின் உதவியுடன் அவரை வீட்டின் மூலையொன்றில் தள்ளி விலங்கிட்டார்.

“இஸ்லாத்தைக கைவிடு. இல்லையெனில் கை, கால்களில் விலங்குதான்”

இளவரசனைப்போல் வலம் வந்து கொண்டிருந்தவர் தம் வீட்டிலேயே பெற்றத் தாயால் சிறை வைக்கப்பட்டார். உண்மையின் விலை என்றுமே மிக அதிகம். பரிசுக்கேற்பத்தானே போட்டியின் கடுமை? மறுமையின் பேரின்பம் என்பது பண்டிகைக்காலத் தள்ளுபடியுமல்ல; இலவச இணைப்புமல்ல. அந்த உண்மை முஸ்அபின் மனதினுள் திடம் வளர்த்தது.

இதனிடையே மக்காவில் இதர முஸ்லிம்கள் குரைஷிகளிடம் அடைந்துவந்த துன்பமும் உச்சநிலையை அடைந்து விட்டிருந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நபியவர்கள் ஒருகட்டத்தில் முஸ்லிம்கள் அபிஸீனியாவிற்கு (இன்றைய எத்தியோப்பியாவிற்கு)ப் புலம்பெயர அனுமதியளித்திருக்கும் செய்தி, வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த முஸ்அபின் காதில் வந்துவிழுந்தது. விலங்கு உடைத்துத் தப்பித்தார் முஸ்அப். துவங்கியது அவரது முதற் பயணம். இஸ்லாத்திற்காகப் புலம்பெயர்ந்த முதல் முஸ்லிம்களில் முஸ்அப் ஒருவரானார். கரிய இருளில் மக்காவிலிருந்து தப்பித்து, செங்கடலின் துறைமுகத்திற்கு வந்து படகுகளில் எத்தியோப்பியாவிற்குத் தப்பித்தார்கள் – அவர்கள் – பதினொரு ஆண்கள், நான்கு பெண்கள்.

அபிஸீனியா வந்து சேர்ந்து ‘அப்பாடா’ என்று மூச்சு வாங்கி நிதானமாய் சுவாசிக்கத் துவங்கினார்கள் முஸ்லிம்கள். சில மாதங்களிலேயே மக்காவில் நிலைமை சீரடைந்துவிட்டது என்று தவறான தகவல் வந்து சேர்ந்தது. பெருமகிழ்வுடன் அபிஸீனியாவிலிருந்து முஸ்லிம்கள் மக்கா திரும்ப, அவர்களுடன் சேர்ந்து திரும்பினார் முஸ்அப். வந்து சேர்ந்தால் ‘மாட்டினீர்களா?’ என்று முன்பைவிடக் காட்டமாகக் கொடூரம் துவங்கியது!

துவண்டு போனார்கள் முஸ்லிம்கள். ‘இது சரிவராது’ என்று இரண்டாம் முறையாக பயணம் துவங்க நாள் குறிக்கப்பட்டது. இம்முறை அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் புலம் பெயர்ந்தனர். 79 ஆண்கள், 9 பெண்கள் என்று சில குறிப்புகளும் 83 ஆண்கள், 18 பெண்கள் என்று வேறு சில குறிப்புகளும் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த ஆண்களில் மீண்டும் முஸ்அப் இருந்தார் என்பதில் சந்தேகமில்லை.

“ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள்” என்று இரண்டு சொற்களை எழுதுவதும் படிப்பதும் மிக எளிது. படைத்துக் காக்கும் ஒரே இறைவனை வழிபடுவதற்காக சொந்த மண்ணிலிருந்து அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு நாடோடியாய் வெளியேறுவது இருக்கிறதே, அது மகா வலி!

சில காலம் கழித்து மீண்டும் மக்கா திரும்பினார் முஸ்அப். முதலில் பெற்றோருடன் அனைத்து சௌகரியங்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தவர் அவர். அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டுப் போனவர் இப்பொழுது திரும்பி வந்ததும் எவ்வித வசதியுமில்லை, குரைஷிகளின் இஸ்லாமிய எதிர்ப்பால் பிழைப்புக்கு வழியுமில்லை. வறுமை அவரை நன்றாகத் தழுவி அணைத்துக் கொண்டது.

அபிஸீனியாவிலிருந்து முஸ்அப் திரும்பிவந்ததை அறிந்ததும் மீண்டும் அவரைப் பிடித்து சிறைவைக்க முயன்றார் அவரின் தாய் குணாஸ். தன் சேவகர்களை அனுப்ப, இம்முறை சிலிர்த்து நின்று தன் எதிர்ப்பைத் தெரிவித்தார் முஸ்அப்.

“இறைவன் மீது ஆணையாகச் சொல்கிறேன். யாராவது என்மேல் கையை வைத்துப் பார்க்கட்டுமே, கொலை விழும். ஒருவரையும் விடமாட்டேன்”

அந்த வார்த்தைகளின் உண்மை அவர் முகத்தில் தெரிந்த வீரம் பார்த்துத் திகைத்து நின்றுவிட்டார் குணாஸ். நிச்சயம் முஸ்அப் அதைச் செய்வார் என்று தெரிந்தது.

கோபத்தின் உச்சியில் அவர் கத்தினார், “போ… இத்துடன் நம் உறவு முறிந்தது. இனி நான் உனக்கு அம்மாவே இல்லை”

நிதானமாய்த் தாயை நோக்கித் திரும்பிய மகன், “ஆனால் மனதார நான் உங்கள்மீது அளவில்லாத பாசம் கொண்டுள்ளேன். நான் சொல்வதைக் கேளுங்கள். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை. முஹம்மது அவனுடைய இறுதித் தூதர். இதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். அதுபோதும்”

“அந்த நட்சத்திரங்களின் மீது ஆணையாகக் கூறுகிறேன். உன் மதத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கெல்லாம் என் புத்தி கெட்டுப்போகவில்லை, என் தராதரமும் குறைந்துவிடவில்லை. எக்கேடோ கெட்டு்ப் போ. நான் உனக்கு அம்மாவும் இல்லை, நீ எனக்கு மகனும் இல்லை”

அதற்குமேல் என்ன பேசுவது? வெளியேறினார் முஸ்அப் இப்னு உமைர், ரலியல்லாஹு அன்ஹு.

ஏழ்மை நிலையிலிருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்குக் குரைஷிகள் இழைத்த கொடுமைகள் ஒருபுறம் என்றால், முஸ்அபுக்குக் கடின வாழ்க்கை வேறு பரிமாணத்தில் தண்டனை அளித்தது. எப்பொழுதாவது கிடைக்கும் சொற்ப உணவை உண்டுவிட்டு, கந்தலாய் இருந்த துணியைக் கொண்டு மானத்தை மறைத்துக் கொண்டு மனம் நிறைய திருப்தியுடன், அசைக்க இயலாத இறைநம்பிக்கையுடன் முற்றிலும் வேறுபட்ட முஸ்அபாக உருவாக ஆரம்பித்தார் அவர்.

ஒருநாள் தோழர்கள் சூழ அமர்ந்திருந்தார்கள் நபியவர்கள். அங்கு வந்தார் முஸ்அப். அவரைக் கண்டதுமே தோழர்களின் தலை கவிழ்ந்தது. பலர் கண்களில் கண்ணீர். வேறொன்றுமிலலை, கோலம்! முஸ்அபின் அலங்கோலம்!

நவநாகரீக ஆடைகள் பூண்டு, திரியும் தெருவெல்லாம் நறுமண

நவநாகரீக ஆடைகள் பூண்டு, திரியும் தெருவெல்லாம்

நவநாகரீக ஆடைகள் பூண்டு, திரியும் தெருவெல்லாம்

ம் பரப்பிச் சென்ற முஸ்அப், வறுமையின் இலக்கணமாய்க் கிழிந்து தொங்கிய மோசமான ஆடையுடன் நின்றிருந்தார். அவரை அன்புடன் ஆதுரவாய் நோக்கிய நபியவர்கள், “மக்காவில் முஸ்அபைப் போன்று பெற்றோரால் சீராட்டி வளர்க்கப்பெற்ற இளைஞனை யாரும் கண்டிருக்க மாட்டார்கள். இப்பொழுது அவர் அனைத்தையும் அல்லாஹ்விற்காகவும் அவனது நபிக்காகவும் உதறித்தள்ளி விட்டு நிற்கிறார்”

இவ்விதமாய்க் காலம் நகர்ந்து கொண்டிருக்க வரலாற்றின் முக்கிய நிகழ்வொன்று நடைபெற்றது.

முதல் அகபா உடன்படிக்கை!

oOo

தோழர் ஹபீப் பின் ஸைத் வரலாற்றினிடையே அதைப் படித்ததுநினைவிருக்கலாம். ஒரு புனித யாத்திரை மாதத்தில் யத்ரிபிலிருந்து மக்கா வந்திருந்த பன்னிரெண்டு ஆண்கள் கொண்ட குழுவொன்று நபியவர்களை அகபா பள்ளத்தாக்கில் சந்தித்தது. சிலர்  மூலமாய் முஹம்மது பற்றியும் அவரது நபித்துவம் பற்றியும் அவர்கள் ஏற்கெனவே இஸ்லாம் பற்றி அறிந்திருந்தனர். அவர்கள் நபியவர்களுடன் அகபாப் பள்ளத்தாக்கில் சந்திப்பு நிகழ்த்தி, பேசினார்கள். உண்மை, வந்தவர்களின் உள்ளங்களைத் தைக்க, பெருமகிழ்வுடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஹம்மது நபியுடன் உடன்படிக்கையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். அது, முதல் அகபா உடன்படிக்கை.

இப்படி அங்கிருந்து கிளம்பி வந்து நம்பிக்கை தெரிவித்து உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்ட அன்ஸார்களுக்குக் குர்ஆனும் இஸ்லாமிய போதனைகளும் அளிக்கவும் மதீனாவில் மற்றவர்களுக்கு ஏகத்துவப் பிரச்சாரம் புரியவும் ஒருவரை அனுப்பி வைக்கவேண்டும் என்ற சூழ்நிலை உருவானது. வயதில் மூத்தத் தோழர்கள், நபியவர்களுக்குத் தோழமையினாலோ உறவினாலோ நெருக்கமான தோழர்கள் என்று பலர் இருந்தபோதும் அப்பணிக்கு முஸ்அப் இப்னு உமைர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘இவன் இது செய்வான்’ என்பதை நன்கு அறிந்திருந்த நபியவர்களின் சரியான தேர்வு முஸ்அப்.

“அங்கு மற்றவர்களுக்கும் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லுங்கள்” என்றார்கள் முஹம்மது நபி.

“அப்படியே ஆகட்டும் அல்லாஹ்வின் தூதரே” என்று உடனே கிளம்பினார் முஸ்அப். கட்டிக் கொள்ள, பெட்டிப் படுக்கை, மூட்டை, முடிச்சு என்று எதுவும்தான் இல்லையே. இருந்த ஊரிலேயே அனைத்தையும் இழந்திருந்தவர் அவர்.

யத்ரிபில் கஸ்ரஜ் கோத்திரத்தின் உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர் அஸ்அத் இப்னு ஸுராரா. அவர், “வாருங்கள் தூதரின் தூதரே” என்று முஸ்அபைக் கட்டியணைத்து வரவேற்றுத் தம் வீட்டில் இருத்திக் கொண்டார். அமைதியாய்த் துவங்கியது புரட்சிப் பணியொன்று. முஸ்அப் இஸ்லாமியப் பிரச்சாரம் புரிய அவ்வீடு மிகவும் வசதியாக அமைந்து போனது. மக்கள் தனியாய், குழுவாய் என்று வந்துவந்து செய்தி அறிந்து சென்றனர். அமைதியான அப்பிரச்சாரங்களுக்கு நல்ல பலன் இருந்தது. யத்ரிப் நகரில் இஸ்லாம் பரவலாய் அறியப்பட்டு மேலும் பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். அங்கு மக்காவிலோ, தாயிஃப் நகரிலோ இருந்ததைப் போலான எதிர்ப்பெல்லாம் இல்லாமல் இங்கு யத்ரிப் நகரம் இஸ்லாமிய விதை, விருட்சமாய் தழைத்தோங்க வளமான விளைநிலமாய்ப் பண்பட்டிருந்தது.

முஸ்அப் பிரமாதமாகக் குர்ஆன் ஓதக் கூடியவர். அவரது வாயிலிருந்து வெளிவந்த குர்ஆன் வசனங்களை முதன்முறையாகக் கேட்கும் மாத்திரத்திலேயே மக்களின் இதயங்கள் அடிமையாகின. அந்த இனிய குரலில் வெளிவந்த குர்ஆன் வாசகங்கள், மனதை அடித்துப் புரட்டிப் போடும் அதன் கருத்து, எல்லாமாய்ச் சேர்ந்து அல்லாஹ்வின் மீதும் அவனது வார்த்தைகளின் மீதும் அளவிலாத பக்தியிலும் பற்றிலும் மதீனத்து மக்கள் ஆழ்ந்து போனார்கள். அவரது நற்குணம், எளிமை, நேர்மை, ஆழ்ந்த இறைபக்தி, தெளிவான ஞானம் இதெல்லாம் மதீனத்து அம்மக்களை வெகுவாய்க் கவர்ந்தது; ஏகத்துவ உண்மை தங்குதடையின்றி அவர்களது உள்ளங்களில் புகுந்தது.

வெறும் பன்னிரெண்டு பேர் வந்து அகபாவில் உறுதிமொழி எடுத்துச் சென்ற சில மாதங்கள் கழித்து, அதற்கடுத்த யாத்திரை காலத்தில் ஆண்-பெண் என்று எழுபது முஸ்லிம்கள் மக்காவிற்குக் கிளம்பினர். அவர்களுடன் முஸ்அபும் மக்கா திரும்பினார். இம்முறையும் அகபாவில் உடன்படிக்கை நிகழ்வுற்றது.

இரண்டாம் அகபா உடன்படிக்கை.

அதைத் தொடர்ந்து வரலாற்றுப் பக்கங்கள் வேகவேகமாய் புரள ஆரம்பித்தன. ஏகப்பட்ட இன்னலுக்கு ஆளாகி, எங்காவது வாசல் திறக்காதா, வழியொன்று பிறக்காதா என்று தவித்துக் கிடந்த முஸ்லிம்கள் மக்காவிலிருந்து யத்ரிபிற்குப் புலம்பெயர ஆரம்பித்தனர். முத்தாய்ப்பாய் அமைந்தது முஹம்மது நபியின் பயணம். யத்ரிப் மதீனாவாகியது.

நபியவர்கள் மதீனா வந்தடைந்தபோது முஸ்அப் இப்னு உமைர் இஸ்லாமியச் செய்தியைச் சென்று சேர்ப்பிக்காத வீடு என்று அங்கு எதுவுமே இல்லை.

Related Post