தேவை நம்பிக்கை..!

தொகுப்பு: அப்மு

கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன்

கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன்

கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன், அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே!அவன் யாருடைய சந்ததியும் இல்லை. அவனுக்கு யாரும் சந்ததி இல்லை. மேலும் அவனுக்கு நிகரானவர் எவருமே இலர்.

மனித இனம் தோன்றியது முதல் பெரும்பாலான மனிதர்களிடம் அனேகமாக எழுந்திருக்கும் சந்தேகம் ‘கடவுள் உண்டா?” என்பதேயாகும்! வாழ்க்கை சுமூகமாகச் சென்று கொண்டிருக்கும்வரை கடவுளைப் பற்றியக் கேள்வி எழுந்திருக்காது! அனேகமாக மனித சக்திக்கு மீறிய நிகழ்வுகளின் போதுதான், தனக்கு மிஞ்சிய சக்தி பற்றிய ஐயம் எழுந்திருக்கவேண்டும்.

பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இதனை ‘இயற்கையின் நிகழ்தகவு’ என்றும் அறிவியலாளர்கள் ‘வினை அல்லது எதிர்வினை’ என்றும் இறை நம்பிக்கையாளார்கள் ‘எல்லாம் அவன் செயல்’ என்றும் சொல்லி தற்காலிகமாகச் சமாதானம் அடைகின்றார்கள். இதில் யார் சொல்வது சரியான சமாதானமாக இருக்கும்?

பகுத்தறிவாளர்களும், அறிவியலாளர்களும் பெரும்பாலான சமயங்களில் ஒத்துப் போய்விடுகின்றனர்; ஆனால் இறைஃமதநம்பிக்கையாளர்களில் மட்டுமே முரண்படுகின்றனர். முற்பிறவியின் பலனே இவ்வுலக வாழ்வின் இன்பமும் துன்பமும் என்பது இந்துமத நம்பிக்கை; இவ்வுலகில் செய்யும் கருமங்களுக்கு இறப்பிற்குப்பின் மறு உலகில் பலன் கொடுக்கப்படும் என்பது கிறிஸ்தவ, இஸ்லாம் மத நம்பிக்கைகளாகும். இதில் எந்த நம்பிக்கை சரியாக இருக்கும்?

இவ்வுலகில் துன்பப்படும் ஒருவனிடம், முற்பிறவியில் செய்த வினைகளுக்கான பலனே உன் துன்பம் என்று சொன்னால், சாதாரண மனிதமனம் சமாதானம் அடையுமா? முந்தைய பிறவியில் என்ன செய்தோம் என்றே அறிந்திராமல் அல்லது அறிய வாய்ப்புக் கொடுக்கப்படாமல் தண்டிக்கப்படுவது என்ன நியாயம்? அவ்வாறு தன்னை தண்டிக்கும் கடவுளை, பகுத்தறிவுள்ள மனித மனம் ஏற்க மறுப்பது நியாயமே! ஆக, முற்பிறவிக் கருமவினைகள் ஏற்க முடியாதவை மட்டுமின்றி எவ்வித ஆதாரமுமற்ற நம்பிக்கை என்ற முடிவுக்கு வருவது எளிது.

இப்பிறவியில் செய்யும் கருமங்களுகான பலன்கள், மறுபிறவியில் கொடுக்கப்படும் என்ற நம்பிக்கை அறிவுப்பூர்வமானதா என்ற ஆய்வுக்குச் செல்லும் முன், எல்லா நிகழ்வுகளுமே இயற்கையின் நிகழ்தகவு என்று நம்பும் கடவுள் மறுப்புக் கொள்கை பற்றியும், ஒவ்வொரு நிகழ்வும் வினை அல்லது அல்லது எதிர்வினை என்று வாதிடும் அறிவியல் நம்பிக்கையை ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாகும்.

‘எல்லா நிகழ்வுகளுமே இயற்கையின் நிகழ்தகவு’ என்றால் ஏன் சிலர் ஏழையாகவே பிறந்து ஏழையாகவே மரணிக்க வேண்டும்? மற்றவர்களைப்போல் ஓரளவு துன்பமின்றி வாழ்ந்து மரணிக்க, இயற்கை ஏன் வாய்ப்பு வழங்கவில்லை? எயிட்ஸ் நோய் பாதிப்புக்குள்ளான பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தையும் எயிட்ஸ் நோய்க்கு இரையாக வேண்டும் என்ற இயற்கையின் கொடிய தண்டனை ஏன்? எல்லாமே இயற்கையின் நிகழ்தகவு என்றால் இயற்கைக்கு முரணான தலை ஒட்டிப் பிறக்கும் குழந்தைகள், ஊனம், ஹார்மோன் குறைபாடுகளுடன் கூடிய மனிதப் படைப்புகள் ஏன்? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் கடமை இயற்கையின் மீது பழி போடும் நம்பிக்கையாளர்களுக்கு உண்டு.

இதே கேள்விகள் அறிவியலாளர்களுக்கும் பொருந்தும். ஒருவன் துன்பப் படுவது வினையா? எதிர்வினையா? பிறருக்குத் தீமைகள் செய்யும் ஒருவன் இன்பமாகவும், நன்மைகள் செய்யும் ஒருவன் துன்பப்பட்டுக் கொண்டும் இருப்பது ஏன்? ‘வினை விதைத்தவன் வினையறுப்பான்; திணை விதைத்தவன் திணை அறுப்பான்’ எனும்போது முரண்பட்ட எதிர்வினைகள் சாத்தியமானது எப்படி?

இயற்கையின் நிகழ்தகவு, வினை அல்லது எதிர்வினை என்ற அறிவியல் அல்லது பகுத்தறிவுக் காரணங்களைச் சொல்லி இறைமறுப்பை நியாயப்படுத்த முடியாது! இறுதியாக, இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு இறையின் இருப்பை நிரூபிக்கும் கடமை எழுகிறது!

இறைவன் இருக்கிறான் என்று ஒப்புக் கொள்ளும் எல்லா மதங்களுமே இறைவனை மாட்சிமை பொருந்திய சக்தியாகச் சித்தரிக்கின்றன. வல்லமை மிக்க இறைவன் தவறு செய்பவர்களைத் தண்டிப்பான் என்ற நம்பிக்கையே, மதநம்பிக்கையாளர்களை ஓரளவு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.

மேலும், இறைவனின் கட்டளைகளை எடுத்துச் சொல்லும் இறைத்தூதர்களும் உண்டு. மிகப்பெரிய மற்றும் பண்டைய மதங்களான இந்து, யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களில் இறுதியாக இஸ்லாத்தில் மட்டுமே இறைத்தூதர் வாழ்ந்திருக்கிறார். முஹம்மது நபிக்குப் பிறகு இறைத்தூதர் என்று எவரும் அறியப்படவில்லை. இனி புதிய வேதமோ அல்லது இறைத்தூதரோ அனுப்பப்படமாட்டார்கள் என்று இஸ்லாம் தெளிவு படுத்தப்பட்டு விட்டதால், முஸ்லிம்களுக்கு மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது!

அவ்வாறு சொல்லப்படாத பிறமதங்களிலிருந்து நமக்குத் தெரிந்த காலத்தில் தூதர்களோ அல்லது வேதமோ வரவில்லை? பாவங்களும் கொடுமைகளும் மிகைக்கும்போது அவதாரமெடுத்து மனித குலத்தைக் காத்த கடவுளர்களுக்கு என்னவாயிற்று? நமக்குத் தெரிந்து கண்முன் நடந்த எத்தனையோ அக்கிரமங்களில் அப்பாவிகள் இறந்துள்ளனர். அநியாயம் நடக்கும்போது அவதாரமெடுத்து நம்மைக் காப்பார் என்று நம்பி பூஜிக்கப்பட்ட எந்தக்கடவுளும் ஏன் அவதாரமெடுத்து அவர்களைக் காக்கவில்லை? எனில், அத்தகைய கடவுளர்கள் மிகைப்படுத்தப்பட்ட அவதாரங்கள் தானே?

ஆக, கடவுள் என்ற சக்தி மனிதர்களின் எல்லா சந்தேகங்களுக்கும் விடையாக, தெளிவான வழிகாட்டியாக இருக்க வேண்டும். அத்தகையக் கடவுளை எந்தமதம் போதிக்கிறதோ, அவனே சிறந்த கடவுள்! அதுவே சிறந்த மதம்!

 

Related Post