-மு.அ.அப்துல் முஸவ்விர்
இப்பூவுலகில் வாழப் பிறந்தவன் மனிதன்! ஆனாலும், அவனது வாழ்வு எப்படியும் அமையலாம் என்பதல்ல இந்த வாழ்தலின் பொருள்! மாறாக, மறுமைக்குத் தயார்படுத்துவதாக அவனது இந்த உலக வாழ்வு அமைய வேண்டுமே அன்றி, இலக்கற்ற உலகாயதத்துக்காக அல்ல!
மனிதன் ஆற்றும் நற்செயல்கள் அனைத்தும் இறைதிருப்தியைப் பெறுவதற்கான தூய எண்ணத்துடனேயே ஆற்றப்பட வேணடும். எந்த எ;ணணத்துடன் மனிதன் செயல்படுகின்றானோ, அதனைப் பொருத்தே அவனுக்குப் பிரதிபலனும் கிட்டும்! இந்த எண்ணங்களிடையே வேற்றுமைகள் நிறைய உண்டு!
சிலரின் எண்ணங்கள் அவர்களின் ஆளுமை போன்றே, உயர்ந்ததாக இருக்கும். இன்னும் சிலரின் எண்ணங்களோ, அவர்களைப் போன்றே கீழ்த்தரமானதாக இருக்கும்.உலகாயத நோக்கமே அதில் பிரதானமாக இருக்கும்.
இரு மனிதர்கள்! அவர்கள் இருவரும் ஒரே செயலைத்தான் ஆற்றுவார்கள்!ஆரம்பம் முதல் முடிவு வரை அவ்விரு செயல்களின் ஒவ்வொரு அம்சங்களிலும் உங்களுக்கு எந்தவொரு வேற்றுமையும் தென்படாது.ஆனாலும், அவ்விருவருக்கும் இறைவன் ஒரே மாதிரியான கூலியைக் கொடுப்பான் என்று அறுதியிட்டக் கூறிட முடியாது. ஏனெனில், அவர்களில் ஒருவரின் எண்ணம் தூய்மையானதாகவும் இறைதிருப்தி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டும், மற்றொருவருடைய எண்ணம் உலகாயத நோக்கத்துக்காகவும் பிறருக்குக் காண்பிக்க வேண்டும் என்பதற்காகவும் இருந்தது.
எனவே, முஹம்மத் (ஸல்) அவர்கள் அருளினார்கள்:
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன.ஒவ்வொரு மனிதனும் தான் எண்ணியதன் பயனையே அடைகின்றான். ஆறிவிப்பாளர்: உமர் இப்னு கத்தாப் (ரலி) ஆதாரம்:புகாரி
தொழுகை, தர்மம் போன்ற வழிபாடுகள் இறைவனின் திருப்பொருத்தத்தையும் மறுமை வெற்றியும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட நிறைவேற்றப்பட்டால், திண்ணமாக அவை நற்கூலியை பெற்றுத்தரும்; என்பதில் கிஞ்சுற்றும் ஐயமில்லை! ஆனால், இந்த கடமைகளின் பின்புலம், உலகாயத நோக்கமாக இருப்பின், இறைவனிடமிருந்து பெறக்கூடிய நற்கூலியை இழக்க நேரிடும்.
ஆனால் அந்த அமல்களின் மூலம் உலக நலன்களை எதிர்பார்த்தால் இறைவனிடமிருந்து கிடைக்கக்கூடிய நற்கூலியை இழக்க நேரிடும்.
இறைநம்பிக்கை கொண்டவர்களே!அல்லாஹ்வின் மீதும்,மறுமை நாளின் மீதும் ஈமான்-நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே தனது பொருளைச் செலவு செய்பவனைப்போல், நீங்களும் கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், (மனம்) புண்படச் செய்தும் உங்களுடைய தான தர்;மங்களைப் பாழாக்கி விடாதீர்கள்!அவன் (செய்யும் செலவுக்கு) உவமை, மண் மூடிய ஒரு வழுக்குப் பாறையைப் போன்றதாகும்;..அதன் மீது பெருமழை பெய்து, (அதை மூடியிருந்த மண்ணை அடித்துக் கொண்டுபோய்) அதை வெறும் பாறையாக்கிவிட்டது.இத்தகையவர்கள் செய்யும் தானதர்மங்களால் எதையும் (எந்த நன்மையையும்) ஈட்ட முடியாது. மேலும் நன்றி கொல்லும் மக்களுக்கு நேர்வழி காண்பிப்பது அல்லாஹ்வின் நியதி அல்ல! திருக் குர்ஆன் 2:264
மேலும் கேடுதான், தம் தொழுகையில் அலட்சியமாய் இருக்கின்றார்களே, அப்படிப்பட்ட தொழுகையாளிகளுக்கு! அவர்கள் பிறரக்குக் காட்டவதற்காகவே செயல்படுகின்றார்கள்.மேலும், சாதாரணத் தேவைகளுக்கான பொருள்களைக் கூட (மக்களுக்குக்) கொடுத்துதவுவதைத் தடுக்கின்றார்கள்! – திருக் குர்ஆன் 107-4-7
மனிதர்களில் இப்படியும் சிலர் இருக்கின்றார்கள்:-
ஒருவரிடம் இறைநம்பிக்கை பலவீனமடைந்து, இறையச்சப் பண்புகள் இளகிப்போய்விடுகின்றன. இத்தகைய வேளைகளில்தான், மக்களின் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள தலைப்படுகின்றார் அந்த மனிதர்!அதனை நிறைவேற்றிக்கொள்ள நற்செயல்கள் புரிய ஆரம்பிக்கின்றார்.
தான் பாவத்தின் கும்மிருட்டில் சிக்கிக்கொண்டதை ஒரு மனிதர் உணரும்போது, அதனை அகற்ற வேண்டி இறையுதவியை நாட வேண்டும். இறைதிருப்தி மட்டுமே எதிர்பார்த்து, இறைநம்பி;க்கையை அதிகரித்துக்கொள்ளும் வகையிலான நற்செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அதன் மூலம், தன்னைச் சுற்றியுள்ள பாவஇருளை அகற்றி,தனது இறைநம்பிக்கையைப் புதுப்பித்துக்கொள்ளச் செய்ய இயலும். ஆதன் மூலம் இதயம் புதுப்பொலிவு பெற்று, தீயகுணங்கள் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும். பின்னர், மறுமை வெற்றியை நமக்காக சுலபமாக்கிக் கொள்ள இயலும்!
நம் இதயத்தைச் சுற்றி வரும் உலகமும் அதன் அலங்காரங்களும் எம்மை மயக்கத்தில் ஆழ்த்திடாதவாறு நம்மை இறைதேட்டத்தின் நிழலில் வார்த்தெடுக்கச் செய்து நம்மை மறுமை வெற்றிக்குரியவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும்!