நேர்மையின் நாயகன்!

– நூருத்தீன்

 நல்ல முடிவு இறையச்சமுள்ளவர்களுக்கே இருக்கிறது

நல்ல முடிவு இறையச்சமுள்ளவர்களுக்கே இருக்கிறது

நேர்மையின் நாயகன்!அந்த மறுமை வீட்டையோ எவர்கள் உலகில் பெருமையடிக்கவும் அராஜகம் விளைவிக்கவும் விரும்பமாட்டார்களோ அவர்களுக்கே உரித்தானதாக்கி வைத்துள்ளோம். மேலும், இறுதியில் நல்ல முடிவு இறையச்சமுள்ளவர்களுக்கே இருக்கிறது.  ஒருவர் நன்மையைக் கொண்டு வருவாராயின், அவருக்கு அதைவிடச் சிறந்த நன்மை இருக்கின்றது. எவரேனும் தீமையைக் கொண்டுவருவாராயின், தீமைகள் செய்வோருக்கு அவர்கள் செய்துகொண்டிருந்த தீமைகளின் கூலியே கொடுக்கப்படும்.

உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த காலகட்டம். சிரியாவின் ஹிம்ஸ் பகுதியிலிருந்து பிரதிநிதிக்குழு ஒன்று மதீனாவிற்கு வந்திருந்தது. அனைவரும் உமர் (ரலி) அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்கள். தனது கருவூலத்திலிருந்து உதவி வழங்க, ஹிம்ஸுப் பகுதியில் ஏழையாய் உள்ளவர்களின் பட்டியல் ஒன்றை அளிக்கும்படி அவர்களிடம் கேட்டார் உமர் (ரலி).

அடுத்த தேர்தலில் ஓட்டுக்காகவெல்லாம் இல்லாமல் உண்மையான இலவசம்! ஜகாத்தாகவும் வரியாகவும் பைத்துல்மாலில் சேகரம் ஆகும் பணம் கொண்டு ஏழைகளை நிசமாகவே மேம்படுத்தும் இலவசம்!

பட்டியலைப் பார்த்தவரின் பார்வையில் ஒரு பெயர் விளங்கவில்லை. ‘யார் இந்த ஸயீத்?’ என்று கேட்டார்.

‘எங்கள் அமீர்’ என்றனர். அமீர் என்றால் அந்தப் பகுதியின் கவர்னர் எனலாம்.

‘என்ன, உங்கள் அமீர் ஏழையா?’ என்ற உமரின் கேள்வியில் அதிர்ச்சி இருந்தது!.

‘ஆமாம். அல்லாஹ்வின் மேல் ஆணையாக, பல நாட்கள் அவரது வீட்டு அடுக்களை நெருப்பின்றி இருப்பது எங்களுக்குத் தெரியும்’ என்று அவர்கள் நிச்சயப்படுத்தினர்.

உமர் அழுதார்! மாநிலம் ஆளும் கவர்னர் ஏழையா? தடுக்க இயலாமல் உமர் அழுதார்!.

ஆயிரம் தீனார்கள் ஒரு பையில் கட்டி அவர்களிடம் கொடுத்து, ‘என்னுடைய ஸலாம் அவருக்குத் தெரிவியுங்கள். அமீருல் மூமினின் இந்தப் பணம் கொடுத்தார் என்று ஒப்படையுங்கள். அவரது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சொல்லுங்கள்’.

குழு ஹிம்ஸ் வந்து சேர்ந்தது. பை கொடுத்தார்கள். பிரித்துப் பார்த்து தீனார்கள் கண்டு உரத்த குரலில், ‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’ என்றார் ஸயீத்.  மரணம் போன்ற பேரிடரின் நிகழ்வில் முஸ்லிம்கள் வெளிப் படுத்தும் மனவுறுதிப் பிரகடனம். அதைத் தான் கூறினார் ஸயீத் இப்னு ஆமிர் ரலியல்லா{ஹ அன்{ஹ.

மக்கா நகருக்குச் சற்று வெளியே உள்ளது தன்ஈம் எனும் பகுதி.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு அன்னை ஆயிஷா (ரலி) ஹஜ் செய்ய வந்தபோது ஹஜ்ஜுக் கடமைச் செயல்பாடுகளின் இடையில் அன்னைக்கு மாதவிடாய் ஏற்பட்டு, கஅபாவைத் தவாஃப் செய்ய இயலாமல் ஆகிவிட்டது. அவர்கள் தூய்மை அடைந்த பின்னர் தன்ஈமுக்கு வந்து இஹ்ராம் மேற்கொண்டு, கஅபாவுக்குச் சென்று தவாஃப் செய்து ஹஜ்ஜை முழுமைப் படுத்தினார். அந்த இடத்தில் இப்பொழுது ஆயிஷா (ரலி) பள்ளி என்ற பெயரில் ஓர் அழகிய பள்ளி உள்ளது.

தன்ஈமில் அன்று ஒரு சம்பவம். குபைப் இப்னு அதீ (ரலி) எனும் நபித்தோழர் ஒருவர் மக்கத்துக் குரைஷிகளால் கைப்பற்றப்பட்டு அன்று கொலைத் தண்டனைக்கு உட்பட்டிருந்தார். (இன்ஷாஅல்லாஹ் இவரைப் பற்றிய வரலாறு விரிவாய் பின்னர்). கொளுத்தும் சுடுமணலில் வெற்றுடம்பாய்ப் படுக்க வைத்து, மார்பில் பாறாங்கல்லை ஏற்றி வைக்கப் பட்ட பிலால் (ரலி) அவர்களை குதூகலத்துடன் வேடிக்க பார்த்த கூட்டமல்லவா? எனவே மக்கா நகரவாசிகள்  வேடிக்கை பார்க்கக் குழுமி விட்டிருந்தனர். ஸயீத் இப்னு ஆமிர் அப்பொழுது இளைஞர். முண்டியடித்துக் கொண்டு அவரும் கூட்டத்தில் புகுந்திருந்தார்.

சங்கிலிகளால் கட்டியிழுத்துக் கொண்டுவரப்பட்ட குபைபிடம் கடைசி ஆசை கேட்கப்பட்டது.

‘இரண்டு ரக்அத் தொழ வேண்டும்’.

அனுமதியளிக்கப்பட்டது. மரணப் பயம் எதுவுமேயற்ற அமைதியான தொழுகை. குபைப் அழகாய் நிறைவேற்றினார். பின்னர் அநியாயத்திற்குத் துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்படுகிறார்.

‘சரியில்லை, இது எதுவுமே சரியில்லை’ என்று ஸயீத் மனம் நிச்சயமாய் சொன்னது. தொடர்ந்து வந்த நாட்களில் மனதை மரணம் வென்றது. ஒருநாள், ‘போங்கடா நீங்களும் உங்க கொள்கையும்’ என்று குரைஷிகளிடம் கூறிவிட்டு மதீனா சென்றுவிட்டார். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் தஞ்சமடைந்து விட்டார். பிறகு கைபர் யுத்தத்திலும் அதன் பிறகு நடைபெற்ற போர்களிலும் கலந்து கொண்ட வீரர் ஸயீத்.

இறுதியில் நல்ல முடிவு இறையச்சமுள்ளவர்களுக்கே இருக்கிறது.

இறுதியில் நல்ல முடிவு இறையச்சமுள்ளவர்களுக்கே இருக்கிறது.

அபூபக்ரு மற்றும் உமர் இருவரும் ஸயீத் இப்னு ஆமிரின் (ரலியல்லா{ஹ அன்{ஹம்) நேர்மையையும் இறைவிசுவாசத்தையும் நன்கு அறிந்திருந்தவர்கள். அவரது ஆலோசனைகளையும் அந்த இரு கலீஃபாக்கள் கேட்டறிந்து செயல்படுவர்கள். உமர் கலீஃபா பொறுப்பேற்றுக் கொண்டிருந்த ஆரம்ப நேரத்தில் ஒருமுறை ஸயீத் அவரிடம் ஆலோசனை பகர்ந்தார்.

‘நான் உம்மிடம் மனப்பூர்வமாய்ச் சொல்கிறேன். மக்களிடம் நீங்கள் நடந்து கொள்வதன் பொருட்டு அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்ளுங்கள். ஆனால் அவனிடம் உமக்குள்ள உறவு குறித்து மக்களை அஞ்ச வேண்டாம். சொன்னதையே செய்யுங்கள். ஏனெனில் வாக்குறுதியில் சிறந்தது, அதை நிறைவேற்றுவதே. முஸ்லிம்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பவர்களைக் கருத்தில் கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எதை விரும்புவீர்களோ வெறுப்பீர்களோ அதையே அவர்களுக்கும் விரும்புங்கள்; நிராகரியுங்கள். சத்தியத்தை அடைய எத்தகைய இடையூறையும் சமாளியுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளை நிலைநாட்டுவதில் மற்றவர்கள் கூறும் குற்றச்சாட்டைப் புறந்தள்ளுங்கள்’. இதுவே அதன் சாராம்சம்.

இந்த நேர்மையெல்லாம்தான் ஹிம்ஸிற்கான அமீருக்குத் தகுதியான ஆள் தேர்ந்தெடுக்க உமர் யோசித்துக் கொண்டிருந்தபோது ஸயீத் இப்னு ஆமிரின் பெயர் கவனத்திற்கு வந்து உடனே டிக் செய்யப்பட்டது.

Related Post