New Muslims APP

அலை திரளும் மக்கள் பெருவெள்ளத்தில்..!

ஒரு இறையடியானாய் நான்…….

வாக்குமூலம் : கவியரசன் என்கின்ற அப்துர் ரஹ்மான்

எழுத்தாக்கம்: இளவேனில்

ஒரு புனிதப் பயணத்தின் புல்லரிக்கச் செய்யும் புது அனுபவமிது..

ஒரு புனிதப் பயணத்தின் புல்லரிக்கச் செய்யும் புது அனுபவமிது..

ரு புனிதப் பயணத்தின் புல்லரிக்கச் செய்யும் புது அனுபவமிது..அரசனில் தொடங்கி அனைவரையும் இறைமுன்னிலையில் அமரச் செய்யும் அற்புதக் கிரியையுது..நானும் இழந்தேன் என்னனைத்து உணர்வலைகளையும் அந்த ஆழிய பெருவெள்ள மக்களினூடே…எந்த வருடத்திலும் வற்றிப்போகாத மக்கள் பெருவெள்ளமது….அவர்களுக்குள்ளிருந்து எழுகின்றது அந்த ஆத்மானந்த வாசகங்கள்..

http://youtu.be/q7q_LcqbvKI

இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது… என் செவிப்பறைகளின் சவ்வுச் சுவர்களில்…!

லப்பைக்… அல்லாஹும்ம லப்பைக்….

ஆம்! ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சத்தியநெறியின்பால் என்னை அர்ப்பணித்து, மூன்றாண்டுகளுக்கு முன்னர் அந்த ஏகத்துவ நெறியின் வழிபாட்டு உயிரோவியமாய்த் திகழும் கஅபா எனும் இறைஇல்லத்துக்கு ஹஜ் கடமை நிறைவேற்ற நான் மேற்கொண்ட புனிதப் பயணம் என் வாழ்வின் இணையில்லா அற்புத அறப்பயணம்.

இஸ்லாமிய நிலைய அலுவலக வளாகத்திலிருந்தே ஆரம்பித்த இந்தப் பயணம். இது  ; சகோதரத்தவத்தை போதிக்கும் சமர்ப்பணம்!

பேருந்தில் ‘கொமஸ்தகா..?’, கோஹமத..?,பாவநார?.., நீஹவ்..?, என்று பன்மொழி நலன் விசாரிப்புக்களினூடே தொடங்கிய அந்த பயணம் இஸ்லாம் குறித்து என் முஸ்லிமல்லாத நண்பர்கள்  கொண்டிருந்த இன்ன சில ஐயங்களுக்கு விடை தர காத்திருக்கினறது என்பது அப்போது எனக்குத் தெரியாது.

ஹஜ் கிரியை ஆரம்பிக்கும் நோக்குடன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முதலில் உடலைத் தூய்மையாக்கி, அனைவரும் ஒரே இறைவனின் படைப்புக்களே.. அதில் எந்த மாற்றமும் இல்லை என்பதை பிரதிபலிக்கும் நோக்குடன் எல்லோரும் இஹ்ராம் எனும் வெள்ளுடைக்கு மாறி.. பொருளாதார பேதமின்றி ஒரே சீருடையுடன் செல்லும் பள்ளிக்குழந்தைகள் போல்.. வெள்ளுடை வேந்தர்களாக.. அகில உலக வேந்தனின் இறைஇல்லத்துக்குப் பயணப்பட்டு செல்லும் காட்சி… காணக் கண் கொடி வேண்டும். மக்கமாநகரமே வெள்ளை நகரமாகக் காட்சியளிப்பது மனதுக்கு சுகமான அனுபவம்.

ஏற்கனவே உம்ரா முடித்து கிரியைகள் குறித்த சிறிய முன்னோட்டம் இருந்தாலும், ஹஜ் கால மக்கள் பெருவெள்ளத்தினூடே.., மயிர்க்கால்கள் கூச்செரிய.. இறைக் கட்டளைக்கு செவிசாய்ப்பதை மட்டுமே எதிரொலிக்க செய்யும் முழக்கங்களுடன் இன,மொழி உள்ளிட்ட இன்னபிற வேறுபாடுகள் களையப்பட்டு இறைகடமையை நிறைவேற்றுவது ஒரு பதிய அனுபவம்.

குறிப்பிட்ட வகையினருக்கு மட்டுமே அனுமதி என்று உலகின் பெரும்பாலான மதங்கள் கொண்டிருக்கின்ற இறைவழிபாட்டு உரிமைக்கும், எல்லோருக்கும் மதிப்பளிக்கும் இந்த மார்க்கத்தின் சமத்துவ சன்மார்க்க வழிமுறைக்கும்தான் எத்துணை வித்தியாசம்?

பெரும்பாலானோர் கஅபா என்பதை ஒரு கல்லாக மட்டுமே கண்டு உருவ வழிபாட்டுடன் அதற்கு முடிச்சு போடுகின்றார்கள்.அதனை சுற்றி ஏகத்துவ முழக்கத்துடன் வலம் வருவதை, அதற்கு தரும் வழிபாட்டு உரிமையாகக் கருதுகின்றார்கள்.

ஆனால் என்னைப் பொறுத்த வரை, அந்த இலட்சக்கணக்கான மக்களில் ஒரவர்கூட ஏகத்துவ புகழைத் தவிர… கஅபா-வை குறிப்பாகப் புகழ்வதையோ அல்லது அத்தகைய அம்சத்தை வெளிப்படுத்தும் சொற்களையோ செவிமடுக்கவில்லை. ஆர்வ மிகுதியால் அதிகபட்சமாக அதனை தொடுவதற்காக முண்டியடிப்பதையே காண முடிந்தது. அப்போதும்கூட, அந்நாட்டு அரசாங்க காவலர்கள் அதனைத் தடுத்துக் கொண்டே இருக்கச் செய்கின்றார்கள்.

ஆப்ரிக்கா,ஐரோப்பா,அமெரிக்கா,அசியா உள்ளிட்ட உலகின் அனைத்துக் கண்டங்களிலிருந்தும் பல்வெறு இன,நிற,மொழி கொண்ட மக்கள் உதடுகள் உச்சரித்தது ஒரே முழக்கம்தான் ஏகஇறை முழக்கம்.

ஹஜ் கிரியைகள் பல இருப்பினும், இரு குன்றுகளினூடே ஹாஜிகள் மேற்கொள்ளும் சிறு தொடர் ஓட்டம் என்னால் மறக்க முடியாதது. ஆம்! எம் மூதாதை அன்னை இவ்விடத்தில் தன் மைந்தனுக்காக நீர் தேடி அலைந்த ஒரு யதார்த்த நிகழ்வை.. அந்தத் தாயின் உணர்வுப்பூர்வமான தவிப்பை..இந்த மாபெரும் இஸ்லாமியக் கடமையோடு முடிச்சு போட்டு.., ஹஜ்ஜின்போது மட்டுமல்லாது…ஒவ்வொரு நாளும் இந்த தொடர் ஓட்டத்தை.. அதுவும் அந்தத் தாய் ஓடியது போல கறிப்பிட்ட இடத்தில் மெதவாகவும்.. உடல் குலுங்கியும்…முஸ்லிம்கள் அரங்கேற்றச் செய்து… அந்த கண்ணியமிக்க தாயின் இறை தியாகத்துக்கு அங்கீகாரமும் மரியாதையும் தந்த இறைவனின் மகாத்மிய ஏற்பாட்டை என்னென்பது..? இதிலிருந்தெ தெரிகின்றது இந்த வணக்க வழிபாடு தியாகங்களின் உணர்தல் அம்சம் என்று!இறைவா..! புகழனைத்தும் உனக்கே!

அந்த ஓட்டத்தின்போத நம் உள்ளத்தில்… உடலில்… ஏற்படும் உணர்வுப் பிரவாகங்களை வடித்திட வார்த்தையுமண்டோ..? ஓட இயலாதவர்கள்..சக்கர நாற்காலிகளிலும்.. உடையவர்களால் ஏந்தப்பட்டும் ஓடி இக்கிரியை சிரமேற்கொண்ட செய்கின்றார்கள்.’ஸஈ’ என்று பெயர் சொல்லபட்ட இந்த ஒழங்குமுறை முடிவுற்று வெளியே வந்தபோது.. திரும்பிப் பார்த்தேன். சில்லென்ற குளிர்சாதன வசதியுடன்.. மிருதவான.. வளுவளு தரையில்.. வசதியுடன் ஓடிய நாம்…!

இதே இரண்டாயிரம் அண்டுகளுக்கு முன்னர்…???? சற்று கற்பனை செய்த பாருங்கள்!கரடு முரடான பாலைவனப் பாதை.., ‘சுளீ’ரென்று அடிக்கும் கதிரவனின் செங்கீற்றுக் கதிர் வெள்ளம், கண்னுக்கெட்டிய தூரம் வரை மனித நடமாட்டமே தென்படாத பாலைப் பெருவெளி.., தாகத்தால் தவிக்கும் பச்சிளம் பாலகனின் பரிதவிக்கும் சன்னக்குரல்.., ஒரு சொட்டு தண்ணீர் தன் பாலகனின் தாகம் தீர்க்கக் கிடைக்காதா? என பதைபதைத்து கண்களை அலைபாயவிட்டு ஓபக் கொண்டிரக்கும் தாய் நெஞ்சம்..!அந்த உயிர்கள் எத்துணை கஷ்டப்பட்டிருக்கும்! ஆம்! அதற்குப் பரிசாகத் தந்தான்.. என்றும் வற்றாத ‘ஸம்ஸம்’ எனும் ஊற்றை! ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தவிட்டன… இன்னும் அசராமல்.. தண்ணீரை தாரi வார்த்துத் தாகம் தணித்துக் கொண்டிருக்கின்றத.. இந்த வற்றாத ஊற்று!

இவ்வாறே, மதீனா பறப்பாடு, முஸ்தலிஃபாவில் தங்கும் நிகழ்வு,மதீனாவில் வழிபாடுகள் என்று அனைத்தும் திட்டமிட்டு சரியாக.. அந்தந்த நேரத்தில்.. அனைவராலும் கச்சிதமாக நிறைவேற்றப்படுவது… உலகில் எந்தவொரு நிகழ்விலும் காணாத அம்சம்!

மீண்டும் அந்த இறைபயணத்திற்காய் ….நான்…

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...

Leave a Reply


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.