New Muslims APP

“அன்னை” என்பவள் நீதானா!

நெடுங்காலம் குழந்தையின்றி நீள்விழி நீர்சுமந்து,

அன்னை - தாய்

அன்னை – தாய்

நெஞ்சமெலாம் கனத்திடவும் நெருடல் அணைத்திடவும்,
நிம்மதி இறந்திடவும் நினைவாற்றல் பறந்திடவும்,
நேசித்த அனைவருமே நித்தம்வசை பாடிடவும்,

நிற்கதியாய் தவிக்கவிட்டு நின் சொந்தம் விலகிடவும்,

நீ யொருத்தி தனிநின்று நெருடலுடன் வாழ்ந்திடவும்,
நெடுந்தூரம் சென்றிடவே நீசர்சிலர் விரட்டியதால்,
நின்கணவர் நிழல்தொடர்ந்தாய் நித்தமும் இறைதொழுதாய்!

யாருமே துணையில்லை என்றபோதும் ஏங்கிடாமல்,
இருக்கின்றான் இறைவனென்ற எண்ணமே உந்தனுக்க்கு,
ஏற்றம் தந்ததினால் ஏணியாய் நீ வாழ்ந்தாய்!
இஸ்லாத்தின் கடமைகளை என்றென்றும் கடைபிடித்தாய்!

. கருவை சுமந்தபடி கடுமையான பணிகள் செய்து,
கணவருக்கு உணவளித்து கணநேர ஓய்வில்லாமல்,
கருமேக சங்கடத்தில் காட்சிதரும் நிலவினைப்போல்,
கடுந்துயர் அனுபவித்து கண்ணுக்குள் அதையடக்கி,

நிம்மதியை துறந்து நெஞ்சத்தில் சுமைசுமந்து,
நெடுந்தூரம் நடந்து நீண்டதொரு மூச்சுவாங்கி,
நிலையில்லா வாழ்க்கைக்கு நீயும் கூட பொருளீட்டி,
நிறைமகனாய் என்னை நிலத்தினில் பிறக்கவைத்தாய்!

பிறந்தபின்னும் கண்விழித்து பிரியமுடன் எனைவளர்த்தாய் !
பிறைநிலவை துணைக்கழைத்து பேசிப்பேசி உணவளித்தாய் !
பேசக்கற்றுத் தந்தாய் எனைப்பிரியாமல் நீயணைத்தாய் !

பெருமையுடன் என்னை கண்ணே-மணியே என்றாய் !


தட்டுத்தடுமாறி தவழ்ந்தபோது என்னை தாங்கிப்பிடித்தாய்,
தட்டில் இறைத்த சோற்றை தவறாமல் ஒருங்கிணைத்தாய்,
ஒட்டுப்போட்ட புடவைத்தொட்டில் என் உறக்கத்தின் தாய்வீடு !
ஓடியாடும் எந்தனுக்கு உன் உந்துதலே வெற்றிக்கோடு !

பள்ளிக்கு அனுப்பி வைத்தாய் பாடமும் சொல்லித்தந்தாய்,
பசிக்கு உணவளித்தாய் பட்டினிக்கு இரையானாய்,
பாசமழை பொழிந்தாய் பகைமையை மறக்கச் செய்தாய்,
பலகதைகள் சொல்லி என்னை பக்குவப்படுத்தி வைத்தாய்!

தேர்வில் வென்ற என்னை தேடிவந்து உச்சிமோர்ந்தாய்,
தேடியும் கிடைக்காத செல்வம் என்மகனே என்றாய்,
நாடியும் கிட்டாத நல்லதொரு வேலை ஒன்றை,
நான் பார்க்க வழி செய்தாய்-நனிசிறந்த தாயானாய் !

பருவ காலத்தில் ஒரு பாவையை மணமுடித்து வைத்தாய்,
பறந்தது கவலையென்று பகற்கனவு தினம் கண்டாய்,
பணக்கார மருமகளை உன் மகள் இவளே என்றாய்,
அவள் செய்யாத வேலைக்கெல்லாம் வேலைக்காரி நீயானாய்!

மனைவியின் மயக்கத்தில் உனை மறந்து போனேன் தாயே,
மணிக்கணக்கில் பேசும் வாய்ப்பு மறைந்ததேன் தாயே,
மனைவியின் ஒப்பனையை மணிக்கணக்கில் ரசித்தேன் தாயே,
மாற்றுடை உனக்களிக்க மறந்து போனேன் தாயே !

ஓடிஓடி உழைத்த பின்னே ஓய்வெடுக்க படுத்தாய் தாயே !
உரியதொரு சிகிச்சை தர என் உள்ளம் நாடவில்லை தாயே !
ஒரு நாட்டு வைத்தியரை உனைப்பார்க்க வைத்தேன் தாயே !
ஒன்றுமில்லை காய்ச்சல் என்று உதவா மருந்து தந்தார் தாயே !

ஒளிமங்கும் உன் கண்கள் என்னை உலுக்கி எடுத்த போதும்,
ஒன்றுமே செய்யாமல் ஊனமாய் நின்றேன் தாயே !
உலக வாழ்வு போதுமென்று ஒருநாள் உறங்கிவிட்டாய் தாயே !
உன்னை நான் மண்ணிலிட்டு ஊமையானேன் தாயே !

வாழ்ந்த காலத்தில் உன் வாஞ்சையை நான் உணரவில்லை,
வாடிய உன்முகத்தில் வளர்சிரிப்பை நான் கொணரவில்லை,
வருங்காலம் நமக்கே என்ற உன்வார்த்தை புரியவில்லை,
வளர்த்துவிட்ட உந்தனுக்கு வாட்டம் தந்த மகனானேன் !

உயிர்வாழ்ந்த காலத்தில் உனதருமை எனக்கு புரியவைல்லை,
ஓடிஓடி அழுகின்றேன் ஒவ்வொரு சொட்டு கணணீரும் செந்நீராக,
உன்னை மீண்டும் காண்பதற்கு ஒருவழி உண்டென்றால்,
ஓடி நான் வந்திடுவேன் உனைத்தேடி சேவை செய்வேன் !

அருமருந்தாய் இருந்து அல்லல் எனும் நோய்தீர்த்து,
அன்பெனும் பாசத்தை நித்தம் அமுதுடன் கலந்தளித்து,
அகிலத்தில் நான் வாழ ஆக்கமும் ஊக்கமும் தந்த,
ஆற்றலே!தாயே!! “அன்னை” என்பவள் நீதானா?

ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடுக்கடுக்காய் வந்தாலும்,
ஆழிசூழ் உலகில் அன்னை புகழ் மங்கிடுமோ ?
அவள் தரும் பாசத்தை அவனியிலே யார் தருவார்?
அன்றுமுதல் இன்று வரை அன்னையவள் ஆருயிரன்றோ?

என் நிலைமை இனி யாருக்கும் வரவேண்டாமென்றால்,
எழில் நபிகள் எடுத்துரைத்த இம்மை சொர்க்கம்,
என்றுமே அன்னை காலடியில் இருக்கின்றதென்ற உண்மையினை.
இதயத்தில் ஏற்றி வைத்து இறைதொழுது வாழ்ந்திடுங்கள்!!

எம்.ரஹீம், கோவை

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...

Leave a Reply


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.