New Muslims APP

அழகிய ஆடை…!

-S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

டை என்பது மானத்தை மறைப்பது! காலங்களுக்கு ஏற்ப பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் எம்மை காப்பது!எப்போது எமது உடலுடன் ஒட்டியிருப்பது.இத்தகைய ஆடை போன்றவள்தான் ஒவ்வொரு மனிதனின் துணையும்..!அவனுக்கு அவளும், அவளுக்கு அவனும் ஆடை  போன்றவர்கள்.

ஆடை என்பது மானத்தை மறைப்பது!

ஆடை என்பது மானத்தை மறைப்பது!

இல்லறம் நல்லறமாக அமைந்தால்தான் சமூகம் சலனமில்லாது இருக்கும். அங்கு சாந்தி, சமாதானம் நிலவும். நல்ல சந்ததிகள் உருவாகும். நாடு நலம் பெறும். ஏனெனில், பசுமையான பூமியில் தான் பயிர் பச்சகைள் விளையும். கறடு முறடான பூமி முற்புதர்களையும் களைகளையும் தான் முளைக்கச் செய்யும். எனவே, இல்லறம் குறித்த நல்ல வழிகாட்டல் தேவை. அந்த வழி காட்டல்களை இஸ்லாம் இனிதே வழங்குகின்றது.
அல்குர்ஆன் பல விடயங்களை உதாரணங்கள் மூலமாகவும், உவமானங்கள் மூலமாகவும் விளக்குவதுண்டு. அவ்வகையில் ‘ஆடை’ என்ற ஒப்புவமையை இரவு, இறையச்சம் என்பவற்றுக்கு அல்குர்ஆன் உவமிக்கின்றது. இவ்வாறே கணவன் மனைவி என்கிற உறவையும் இஸ்லாம் ஆடைக்கு ஒப்பிடுகின்றது.
‘(மனைவியர்களான) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், (கணவர்களாகிய) நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள்’. 2:187
மேற்படி வசனம் கணவனை மனைவியின் ஆடை என்றும் மனைவியைக் கணவனின் ஆடை என்றும் கூறுகின்றது. மேற்கத்தேய நாடுகளில் ஆடை மாற்றுவது போல் தமது சோடிகளை மாற்றுவதை இதற்கு நாம் விளக்கமாகக் கொள்ள முடியாது. நாம் ஆடை விடயத்தில் கடைப்பிடிக்கும் நோக்குகள் குறித்து நிதானமாகச் சிந்தித்தால் ‘ஆடை’ என்ற உவமானம் கணவன் மனைவி உறவுக்கு எவ்வளவு தூரம் ஒத்துப்போகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஆடை மானம் காக்கும், அவள் கற்பைக் காப்பாள் ஆடை அணிவதன் அடிப்படை நோக்கம் மானத்தை மறைப்பதாகும். ஆடை இல்லாதவன் அவமானப்பட நேரிடும். இல்லறத்தின் அடிப்படை நோக்கம் கற்பைக் காப்பதாகும். அது இல்லா தவன் கற்புத் தவறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.
‘இளைஞர்களே! உங்களில் வாய்ப் புள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள்! ஏனெனில், அது பார்வையைத் தாழ்த்தச் செய்யும், கற்பைக் காக்கும்’ என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத்(ரலி)
ஆதாரம்:திர்மிதி, நஸஈ, அபூதாவூத், இப்னு மாஜா
வாழ்க்கைத் துணையில்லாத நிலை ஆடையற்ற வாழ்வுக்குச் சமனாகும். எனவே, ஆடை அணியத் தயாராகுங்கள்.
ஆடைத் தெரிவு :
நாம் ஆடையைத் தெரிவு செய்யும் போது பலவிதமான அம்சங்களைக் கவனத்தில் கொள்கின்றோம். எமக்கு ஆடை அளவாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றோம். அன்றாடம் கூலித் தொழில் செய்யும் ஒருவன் ஆயிரக்கணக்குப் பெறுமதியான ஆடைகளைத் தெரிவு செய்வதில்லை. தன் வருமானத்திற்கு ஏற்றதாக ஆடையைத் தெரிவு செய்கின்றான்.
இவ்வாறே எமது தகுதிக்குத் தக்கதாக ஆடையைத் தெரிவு செய்கின்றோம், மூட்டை சுமக்கும் ஒருவர் கோட் சூட்டைத் தெரிவு செய்யமாட்டார். தெரிவு செய்தாலும் அதற்கேற்ற வாழ்க்கை அவரால் வாழ முடியாது. சாதாரணமாக கோட் சூட் அணிந்த ஒருவனால் மக்கள் நிரம்பி வழியும் போது வாகனத்தில் பயணிக்க முடியாது. சொந்தமாக வாகனம் பிடித்துச் செல்ல வேண்டும். ஒரு பிச்சைக்காரன் தட்டை நீட்டினால் கூட தான் அணிந்திருக்கும் ஆடைக்கு ஏற்ப உதவி செய்ய நேரிடும்.
அடுத்து எமது நிறம், தொழில் என்பவற்றுக்கெல்லாம் தோதான ஆடையையே தெரிவு செய்கின்றோம். ஒரு ஆடைத் தெரிவுக்கே இவ்வாறான முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்றால் வாழ்க்கைத் துணை எனும் ஆடையைத் தெரிவு செய்ய இதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக அவதானம் செலுத்த வேண்டும்.
சிலர் தமது தகுதிக்கு மீறி பணக்கார பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு பின்னர் அதற்கேற்ப வாழ முடியாமல் விழி பிதுங்கி நிற்பதை நாம் அனுபவ வாயிலாக கண்டு வருகின்றோம். அந்தப் பெண் பணக்கார வாழ்வுக்குப் பழக்கப்பட்டிருப்பாள், அவளது தகுதிக்கு ஏற்ப செலவு கொடுக்க முடியாமல் இவன் திண்டாடுவான். அந்தப் பெண் பணக்கார நட்புகளை ஏற்படுத்தியிருப்பாள். எந்த பணக்கார நட்புக்களுடனும் உறவுகளுடனும் இணைந்து செல்ல முடியாமல் இவன் திண்டாடுவான். இவன் வீட்டு விஷேசங்களுக்குப் பணக்காரர்களை அழைக்க நேரிடும். அவர்கள் அவர்களது தகுதிக்கு ஏற்ப அன்பளிப்புக்கள் வழங்குவர். அதேபோன்று அவர்கள் தமது விஷேசங்களுக்கு இவனுக்கு அழைப்பு விடுப்பர். இவன் தனது தகுதிற்கு ஏற்ப அன்பளிப்பு வழங்க முடியாது என்று கௌரவப் பிரச்சினை பார்ப்பான்.மனைவியின் தகுதிக்கு ஏற்ப அன்பளிப்பு வழங்க பொருளாதாரம் இடம் கொடுக்காது. இவ்வாறான இக்கட்டுக்களுடன் வாழும் ஒருவனது இல்லறம் இனிமையானதாக இருக்காது. எனவே, மனைவி கணவன் எனும் ஆடையைத் தெரிவு செய்யும் போது மிகுந்த நிதானம் தேவை.
‘ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக மணம் முடிக்கப்படுகிறாள். அவையாவன ;
அவளது பணத்திற்காக,
அவளது குடும்ப கௌரவத்திற்காக,
அவளது அழகிற்காக,
அவளது மார்க்க விழுமியங்களுக்காக.
நீர் மார்க்க முடையவளைப் பற்றிக் கொள். உன் கரத்தை அழிவிலிருந்து பாது காத்துக்கொள்வாய்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
எனவே, அழிவிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள மார்க்கமுடைய துணையைத் தெரிவு செய்வோமாக!
ஆடையில் அழகும் அந்தஸ்தும் :
மானத்தை மறைப்பதுதான் ஆடையின் அடிப்படை அம்சம்! எனினும் ஆடையைத் தெரிவு செய்யும் போது வெறுமனே அவ்ரத்தை மறைப்பதை மட்டும் நாம் கவனிப்பதில்லை. அந்த ஆடை எமக்கு அழகைத் தரவேண்டும் என்று விரும்புகின்றோம். அதன் மூலம் எமது உடல் சூடு, குளிரில் இருந்து பாதுகாப்புப் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆடையின் மூலம் அந்தஸ்தை, மகிழ்ச்சியை என பல அம்சங்களையும் நாம் எதிர் பார்க்கின்றோம்.
இல்லற ஆடையாகிய வாழ்க்கைத் துணைக்கும் இந்த அம்சங்கள் பொருந்தும். வெறுமனே பாலியல் உணர்வுகளுக்கு வடிகால் அமைப்பது மட்டும் இல்லறத்தின் நோக்கமல்ல. அங்கே மகிழ்ச்சி நிலவ வேண்டும், கணவன் எனும் ஆடை மூலம் மனைவியும், மனைவி எனும் ஆடை மூலம் கணவனும் சமூகத்தில் பாதுகாப்பையும், அலங்காரத்தையும், அந்தஸ்த்தையும் அடைய வேண்டும். இவர் என் கணவர் என்று சொல்வதன் மூலம் ஒரு பெண்ணுக்கு பாதுபாப்பும், அந்தஸ்த்தும் மகிழ்ச்சியும் ஏற்பட வேண்டும். இவன்தான் உன் கணவனா(?) என்ற ரீதியில் அவள் அவமானத்தையோ, அசிங்கத்தையோ, இவனின்மனைவி என்றால் எப்படிவேண்டுமானாலும் வளைத்துப் போடலாம் என்ற பாதுகாப்பற்ற சூழ்நிலையையோ ஒருபெண் சம்பாதிக்கக் கூடாது.
அவ்வாறே, இவளா உன் மனைவி(?) வேறு ஆள் கிடைக்க வில்லையா? என்ற தோரணையில் ஒரு கணவன் நோக்கப்படும் விதத்தில் மனைவியின் செயல்பாடு அமைந்து விடக்கூடாது.
இவ்வாறே, ஆடை அழகையும், அந்தஸ்தையும் அபயமற்ற நிலைமையையும் தர வேண்டும்.
ஆடையின் தன்மையறிந்து பணி செய்வோம்!
நாம் வெள்ளை நிற ஆடை அணிந்து வயலில் வேலை செய்ய மாட்டோம். மென்மையான ஆடையணிந்து கடின பணிகளில் ஈடுபடமாட்டோம். விளையாட்டுக்கு, வீட்டு வேலைக்கு, ஆலயத்திற்கு, தொழில் செய்வதற்கு என பணிகளுக்கு ஏற்ப ஆடை அணிகின்றோம். ஆடையின் தன்மையறிந்தே செயல்படுகின்றோம். இவ்வாறே இல்லறம் இனிமையாக அமைய வாழ்க்கைத்துணை எனும் ஆடை பற்றிய அறிவும் அதற்கேற்ற செயற்பாடும் அவசியமாகும்.
இல்லற வாழ்வில் இணைந்த இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும். மற்றவரின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து, விட்டுக் கொடுத்து அல்லது விட்டுப்பிடித்து செயல்பட அறிந்து கொள்ள வேண்டும்.
சில கணவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு, தேநீர் இல்லாவிட்டால் கோபம் வரும். சிலருக்கு ஆடைகள் ஒழுங்காக கழுவப்படாவிட்டால் பிடிக்காது. சில பெண்களுக்குகணவன், தன் குடும்பத்தவர் பற்றிய குறைகளைப் பேசினால் பிடிக்காது. இவ்வாறான பல பிடிக்காத விடயங்கள் இருக்கும். இவற்றைப் புரிந்து, தவிர்ந்து கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். ஒருவர் நெருப்பானால் மற்றவர் பஞ்சாகாமல் நீராக இருக்கத் தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு ஆடையை அறிந்து செயல்படும் பக்குவம் இன்பமான இல்லறத்திற்கு இன்றிய மையாததாகும்.

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...

Leave a Reply


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.