ஹஜ்: ஒரு வரலாற்று செய்தி..!

– அபுல் அஃலா மௌதூதி

நாம் இப்ராஹீமுக்கு (கஅபா எனும்) இந்த ஆலயத்தின் இடத்தை பின்வரும் கட்டளையுடன் நிர்ணயம் செய்து கொடுத்த சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள்: ‘எப்பொருளையும் என்னோடு இணையாக்காதீர்; மேலும் தவாஃப் சுற்றி வருவோர்க்காகவும் நின்றும் குனிந்தும் தரையில் சிரம் வைத்தும் வணங்குவோர்க்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!’ ஹஜ் செய்திட மக்களுக்குப் பொது அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் வெகு தூரமான இடங்களில் இருந்தெல்லாம் நடந்தும் ஒட்டகங்களில் பயணம் செய்தும் உம்மிடம் வரட்டும்; அவர்களுக்காக அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நன்மைகளை அவர்கள் காணட்டும் மேலும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய கால்நடைகளை சில குறிப்பிட்ட நாட்களில் அவனது பெயர் கூறி(அறுத்தி)ட வேண்டும்; அவற்றிலிருந்து அவர்களும் உண்ண வேண்டும்; வறியவர்களுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் அளிக்க வேண்டும்;  பிறகு தங்களுடைய அழுக்குகளை நீக்க வேண்டும்; இன்னும் தங்களுடைய நேர்ச்சைகளை நிறைவேற்ற வேண்டும்! மேலும், தொன்மையான ஆலயத்தைச் சுற்றி வரவேண்டும்! இதுதான் (கஅபா ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதன் நோக்கமாகும்!) மேலும், எவரேனும் அல்லாஹ்வினால் ‘புனித மானவை’ என்று நிர்ணயிக்கப்பட்டவைக்கு கண்ணியம் அளித்தால், அது அவருடைய அதிபதியிடத்தில் அவருக்கே பலனளிக்கத் தக்கதாகும். மேலும், உங்களுக்கு (கூடாதெனச்) சொல்லப்பட்டவற்றைத் தவிர, இதர கால்நடைகள் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. எனவே, விக்கிரஹங்கள் எனும் அசுத்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். பொய்யான பேச்சுகளிலிருந்து விலகியிருங்கள். அல்லாஹ்வுக்கு ஒருமனப்பட்ட அடிமைகளாகத் திகழுங்கள். அவனோடு எதனையும் இணை வைக்காதீர்கள்! யாரேனும் அல்லாஹ்வுக்கு இணை வைப்பாராயின் அவர் வானத்திலிருந்து விழுந்து விட்டவரைப் போன்று ஆகிவிடுகின்றார். இனி அவரைப் பறவைகள் இறாஞ்சிக் கொண்டு செல்லும் அல்லது காற்று அவரைத் தூக்கிச் சென்று ஏதேனும் அதலபாதாளத்தில் எறிந்துவிடும்; அங்கு அவர் சின்னாபின்னமாகி விடுவார்.உண்மை நிலவரம் இதுதான். (இதனைப் புரிந்து கொள்ளுங்கள்) மேலும், யாரேனும் அல்லாஹ் ஏற்படுத்திய புனிதச் சின்னங்களுக்கு கண்ணியம் அளிப்பாராயின் திண்ணமாக, அது இதயங்களில் உள்ள இறையச்சத்தால் விளைவதாகும். (பலிப் பிராணிகளாகிய) அவற்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் பயன் பெற உங்களுக்கு அனுமதியுண்டு. பின்னர், அவற்றி(னைப் பலியிடுவத)ற்கான இடம் தொன்மையான ஆலயத்தின் அருகிலாகும்!

ஜ் என்பது இஸ்லாத்தில் ஒரு முக்கியக் கடமை..! வேற்று மதங்களில் காணப்படும் புனித யாத்திரைகள் போன்றதல்ல இது! இதன் தாத்தபர்ய அம்சங்கள் உணர்வுகளால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.,!ஒரு புனிதப் பயணத்தின் புல்லரிக்கச் செய்யும் புது அனுபவமிது..அரசனில் தொடங்கி அனைவரையும் இறைமுன்னிலையில் அமரச் செய்யும் அற்புதக் கிரியையுது..

இப்ராஹீம்(அலை) அவர்களின் மகனார் இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப்பிறகு அவர்களின் வழித்தோன்றல்கள் மார்க்கத்தில் எவ்வளவு காலம் நிலைத்து நின்றார்கள் என இறைவன்தான் அறிவான்! எப்படியோ சில நூற்றாண்டுகளில் இந்த மக்கள் வழிகேட்டில் புகுந்துவிட்டனர். ஒரே இறவனை வணங்குவதற்கும் அழைப்பதற்கும் அமைக்கப்பட்ட இறை ஆலயத்தில் நூற்றுக்கணக்கில் சிலைகள் வைக்கப்பட்டுவிட்டன.
இதில் விசித்திரம் என்னெவென்றால் சிலை வணக்கத்தை ஒழிப்பதற்காகவே தம் வாழ்நாளெல்லாம் உழைத்த இப்ராஹீம் நபி இஸ்மாயீல் நபி ஆகியோருக்கும் சிலைகள் தயாரிக்கப்பட்டு விட்டன. நேர்வழியில் நின்ற இப்ராஹீம் நபியின் சந்ததியினர் ‘லாத்’ ‘மனாத்’ ‘ஹூபல்’ ‘நஸ்ர்’ ‘யாகூது’ ‘உஸ்ஸா’ ‘அஸாப்’ ‘நாயிலா’ இப்படி பல பெயர்களில் சிலைகளை வடித்து வணங்கினார்கள். செவ்வாய், புதன், வெள்ளி, சனி இப்படி இன்னும் எந்த எந்தத் கோளங்களை அவர்கள் வணங்கினார்கள் என்றும் தெரியவில்லை. பேய், பிசாசு, வானவர்கள் இறந்து போன தங்களுடைய பெரியார்கள் ஆகியோரையும் அவர்கள் வணங்கினார்கள். அறியாமை இந்த அளவுக்கு முற்றிப் போயிருந்தது.
அவர்கள் வீட்டை விட்டு புறப்பட்டு விட்டால் பயணத்தில் வணங்குவதற்கு தெய்வச் சிலை இல்லாவிட்டால் கல் ஒன்று கிடைத்தாலும் வணங்க ஆரம்பித்து விடுவார்கள். கல்லும் கிடைக்கவில்லை என்றால் மண்ணைத் தண்ணீரில் குழைத்து உருவம் அமைத்து ஆட்டு பாலைத் தெளித்து வணங்குவார்கள்.
ஹஜ்ஜின் தவறான வடிவங்கள்:
அந்த அஞ்சான காலத்தில் ஹஜ்ஜின் கதி எப்படி இருந்தது என்பத எண்ணிப்பாருங்கள்; ஒவ்வொரு ஆண்டும் அங்கே ஒரு திருவிழா நடைபெற்றது. பல குலத்தவர்கள் தம் இனத்தாரோடு இங்கே வந்து தனித்தனியே முகாம் போடுவார்கள். அவரவர்கள் தங்களைச் சேர்ந்த கவிஞர்கள் அல்லது துதி பாடர்கள் தம்மிடமும் தம் குலத்தாரிடம் உள்ள பெருமைகளை பாடி பெருமையடித்துக் கொள்வதில் மற்றவர்களை முந்துவார்கள். இறுதியில் அவர்கள் ஒருவரையொருவர் இழித்துரைக்கும் அளவுக்கு நிலைமை முற்றிவிடும்.
அப்புறம் எவர் தர்மப்பிரபு எவர் கொடைவள்ளல் என்கிற போட்டி நடக்கும்! குலத்தலைவரும் தமது பெருமையை பறைசாற்ற சமையலில் பெரிய பெரிய அண்டாக்களையும் குண்டாக்களையும் வரிசை வரிசையாக அடுப்புகளில் ஏற்றுவார்கள். ஒருவரையொருவர் மிகைப்பதற்காக ஒட்டகத்திற்கு மேல் ஒட்டகத்தை அறுத்துக்கொண்டே போவார்கள். இந்த வீண் செலவுக்காண நோக்கம் இதுதான். இந்தத் தடவை நடந்த திரு விழாவில் இத்தனை பேருக்கு உணவளித்தார் என்று பிரசாரம் ஆகவேண்டும். இந்தக் கூட்டத்தில் மதுபானம், விபச்சாரம், இசை படுமோசமான செயல்கள் அனைத்தும் தாராளமாக நடந்து கொண்டிருந்தன.
நிர்வாணமாக வலம் வருதல்:
காபாவை சுற்றி வலம் வருதலும் நடந்துகொண்டுதான் இpருந்தது. ஆனால் எப்படி நிர்வாணமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள்? எங்கள் அன்னையர் எங்களை எந்த நிலையில் பெற்றெடுத்தார்களோ அந்த நிலையில்தான் நாங்கள் இறைவன் முன் செல்வோம் என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.
இறைவன் பெயரால் பலியும் தியாகச் செயல்களும் கூடச் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் எப்படியென்றால் பலியிடப்பட்டவற்றின் இரத்ததை கஃபாவின் சுவர்களிலெல்லாம் தடவுவார்கள். மாமிசத்தை வாசலில் பரப்புவார்கள்; இந்த இரத்தமும் மாமிசமும் இறைவனுக்கு தேவை என்ற எண்ணத்தில்!
இப்ராஹீம் நபியவர்கள் ஹஜ்ஜின் நான்கு மாதங்களை தடுக்கப்பட்டவை என்றும், இந்த மாதங்களில் எந்த விதமான சண்டையும் வம்பும் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியிருந்தார்கள். இந்த மக்கள் ஏதோ அந்த மாதங்களின் கண்ணியத்தை சிறிதளவு மனத்தில் வைத்திருந்தார்கள். ஆனால் மனம் சண்டையிட விரும்பினால் துணிச்சலான சந்தர்ப்பவாதத்தை வைத்துக்கொண்டு ஓர் ஆண்டில் தடை செய்யப்பட்ட மாதத்தை அனுமதிக்கப்பட்டதாக்கிக் கொண்டு அடுத்த ஆண்டில் அதற்கு ஈடு செய்து கொள்வார்கள். அத்துடன் தமது மார்க்கத்தில் நல்லெண்ணம் கொண்டிருந்த அவர்களில் ஒரு சிலரும் தமது அறியாமையின் காரணத்தினால் நூதனமான புதிய முறைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.
நூதனமான தடைகள்:
சிலர் வழிச்செலவுக்கு எவ்வித ஏற்பாடும் இல்லாமல் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு மற்றவர்களிடம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக் n காண்டே போய்க்கொண்டிருந்தார்கள். இது புண்ணியமான செயல் என்றும் நினைத்தார்கள். தாங்கள் இறைவன் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் எனவே உலகப் பொருள்களை நாங்கள் ஏன் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பொதுவாக ஹஜ் பயணத்தில் வணிகம் செய்வதும் சம்பாதிப்பதற்காக உழைப்பதும் தடுக்கப்பட்டவை என்று கருதிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலோர் உண்ணுவதையும், குடிப்பதையும் துறந்திருந்தார்கள். இதையும் இறை வழிபாடு என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
சிலர் ஹஜ்ஜுக்கு புறப்பட்டால் உரையாடலை நிறுத்திக் கொள்வார்கள். இதற்கு ‘ஹஜ்ஜெமுஸ்மித்’ மௌன ஹஜ் என்று பெயர். இப்படிப்பட்ட தவறான நடைமுறைகள் கணக்கின்றி இருந்தன.
இந்த நிலைமை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் இருந்தன. பின்னர் இப்ராஹீம் நபியின் வழித்தோன்றலில் இருந்து முழுமையான மனிதர் ஒருவர் தோன்றினார். அவர்களின் திருப்பெயர் முஹம்மது பின் அப்துல்லாஹ். எவ்வாறு இப்ராஹீம் நபி அவர்கள் பண்டிதர்களும் குருக்களும் கொண்ட குலத்தில் பிறந்தார்களோ அவ்வாறே முஹம்மத்(ஸல்) அவர்களும் பல நூற்றாண்டுகளாக கஃபாவுக்கு குருக்களாயிருக்கும் குடும்பத்தில் பிறந்தார்கள்.
இப்ராஹீம் நபியவர்கள் பொய்யான தவறான தெய்வ மூடக்கொள்கைகளை அழிக்க பெரும்பாடு பட்டதைப் போல் முஹம்மது(ஸல்) அவர்களும் தாங்கள் கொண்டு வந்த கலப்படமற்ற மார்க்கத்தை 21 ஆண்டு காலத்தில் இறைப்பணியை எல்லாம் செய்து முடித்தபோது அவர்கள் இறைக்கட்டளைப்படி முன்போலவே காபாவை முழு உலகத்துக்கும் இறைவனுக்கு வழிபட்டோருக்குரிய கேந்திரமாக எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஹஜ் செய்ய வாருங்கள் என முன்போலவே அறிவித்தார்கள்.
அந்த ஆலயத்திற்குச் சென்று வர மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களோ அவர்கள் ஹஜ் செய்வதானது அல்லாஹ்வுக்கு ஆற்றவேண்டிய கடமையாகும். ஆனால் யாரேனும் இக்கட்டளையைச் செயல்படுத்த மறுத்தால் (அவர் தெரிந்து கொள்ளட்டும்) உலகத்தார் அனைவரை விட்டும், நிச்சயம் அல்லாஹ் தேவையற்றவனாய் இருக்கின்றான். (3:97)
சிலை வணக்கம் ஒழிந்தது:
கஃபாவிலுள்ள சிலைகள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டன. இறைவனைத் தவிர மற்றவருக்கு செய்த வழிபாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இணைவைக்கும் பழக்கங்கள் அடியோடு அழிக்கப்பட்டன. இறைவன் பெயரால் திருவிழாக்களும், வேடிக்கைகளும் தடை செய்யப்பட்டன.
அவன் எவ்வாறு (தன்னை நினைவு கூறவேண்டுமென்று) உங்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றானோ அவ்வாறு அவனை நினைவு கூறுங்கள்! இதற்கு முன்னரோ நீங்கள் வழி தவறியவர்களாய் இருந்தீர்கள். (2:198)
அபத்தமான செயல்:
ஹஜ்ஜின்போது இச்சைகளைத் தூண்டக்கூடிய சொல் செயல் மற்றும் தீவினை சண்டை சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது! (2:197)
பின்னர் நீங்கள் உங்களுடைய ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றி விட்டீர்களானால், நீங்கள் (முன்னர்) உங்கள் மூதாதையரை நினைவு கூர்ந்தது போல- ஏன், அதனைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். (2:200)
விளம்பரத்திற்காக தடை:

பெயருக்காகவும், விளம்பரத்துக்காகவும் செய்யப்பட்டு வந்த ஆடம்பரமான தான தர்ம போட்டிகள் அனைத்திற்கும் முடிவு கட்டப்பட்டது. இந்த இடத்தில் இப்ராஹீன் நபியவர்கள் காலத்திலிருந்த அதே செயல்முறை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டது. இறைவனின் திருப்பெயர் கொண்டு பிராணிகளை அறுங்கள், வசதியுள்ளவர்களின் தியாகத்தால் ஹஜ்ஜுக்கு வருகிற ஏழைகளுக்கும் உண்ணும் வாய்ப்பு கிடைக்கட்டும்.

உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் விரயம் செய்யாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை. (7:31)
குர்பானியின் இரத்தத்தை பூசத் தடை:
குர்பானியின் இரத்தத்தை கஃபாவின் சுவர்களில் தடவுவதும், இறைச்சியை கொண்டு வந்து பரப்புவதும் நிறுத்தப்பட்டது.
அவற்றின் இறைச்சியும் இரத்தமும் அல்லாஹ்விடம் போய்ச் சேருவதில்லை. ஆயினும், உங்களின் இறையச்சமே அவனிடம் போய்ச் சேருகின்றது. (22:37)
நிர்வாணமாக வலம் வரத்தடை:

(நபியே! அவர்களிடம்) நீர் கேட்பீராக: அல்லாஹ் தன் அடிமைகளுக்காகத் தோற்றுவித்துள்ள (ஆடை) அலங்காரத்தை தடை செய்தது யார்? (7:32)
நீர் கூறும்: அல்லாஹ் மானக்கேடானவற்றைச் செய்யும்படி எப்போதும் கட்டளை இடுவதில்லை. (7:28)
புனித மாதங்களை மாற்றத் தடை:
ஏதேனும் ஓர் ஆண்டில் (போர் தடுக்கப்பட்ட) ஒரு மாதத்தை (போருக்காக) அவர்கள் அனுமதிக்கப்பட்டதாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் மறு ஆண்டில் அதே மாதத்தில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். எனெனில் அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்டுள்ள மாதங்களின் எண்ணிக்கையைப் பூர்த்தியாக்க வேண்டும் என்பதற்காக! (9:37)
வழிச்செலவுக்கு வசதியில்லாமல் ஹஜ்ஜுக்கு செல்வது தடுக்கப்பட்டது:
மேலும் நீங்க (ஹஜ்ஜுக்காக) வழித்துணைச் சாதனங்களைக் கொண்டு செல்லுங்கள்! உண்மை யாதெனில், வழித்துணைச் சாதனங்களில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்தான். (2:197)

Related Post