பொருளாதார சமநிலைக்கு ஜகாத்..!

 

பொருளாதார சமநிலைக்கு ஜகாத்

பொருளாதார சமநிலைக்கு ஜகாத்

-நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி

ஜகாத்: இஸ்லாத்தின் அதிமுக்கிய பொருளாதாரக் கடமை. அது ஏழைகளுக்கு தீர்வு தரக் கூடியது.செல்வந்தர்க்கு அவர்தம் பொருள்களைத் தூய்மைப்படுத்துகின்றது.சமூகத்தில் பொருளாதார சமநிலைக்கு வழிவகுக்ககின்றது.வறுமை ஒழிப்புக்கு வழிகோலுகின்றது.

அடிப்படைத் தூண் ஜகாத்

இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைத் தூண்களில் ஜகாத் ஒரு பலமான தூணாகும். 14 நூற்றாண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த ஜகாத் விஷயத்தில் எந்தக் காலத்திலும் எடுத்து வைக்கப்படாத சில காரசாரமான விவாதங்கள் சமீபகாலமாக தமிழ் இஸ்லாமிய சகோதரர்களிடையே நிலவி வருகிறது. குறிப்பாக
1) ஜகாத் வழங்கிய ஒரு பொருளுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?
2) கடமையான ஜகாத்தை எப்போது வழங்க வேண்டும்? அதற்கான கால வரம்பு என்ன?
3) ‘ஜகாத்’ செல்வத்தை தூய்மைப் படுத்துகிறதா? மனிதனைத் தூய்மைப் படுத்துகிறதா?
4) தொடர்ந்து ஜகாத் வழங்குவது ஒருவனை பிச்சைக்காரனாக ஆக்கிவிடுமா?

இது போன்ற சில விஷயங்களில் நம் சகோதரர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். காரணம் புதிய கோணத்தில் மாறுபட்ட கருத்து தமிழகத்தில் மட்டும் ஒரு சிலரால் சமீப காலமாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

எனவே, ஜகாத்தின் சட்டங்களை உரிய சான்றுகளின் மூலம் தெளிவு படுத்த வேண்டிய அவசரமான அவசியம் ஏற்பட்டுள்ளது. இங்கு தரப்படும் தகவல், குர்ஆன் மற்றும் நபிமொழி ஆகியவற்றிலிருந்து பெறப்படும் ஆதாரத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். யாரின் சொந்தக் கருத்துக்கும் அறவே இடமளிக்க வில்லை. உண்மையை புரிந்து அதனை செயல்படுத்துபவர்களாகவும் தவறை இனம் கண்டு தவிர்ந்து நடப்பவர்களாகவும் நம்மை அல்லாஹ் ஆக்க வேண்டும்!

ஜகாத் என்றால் என்ன?

‘ஜகாத்’ என்ற வார்த்தைக்கு ‘வளர்ச்சி அடைதல்’, தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு.

‘ஜகாத்’ என்றால் அகராதியில் வளர்ச்சியடைதல் என்பதாகும்.

பயிர் வளர்ச்சியடைந்ததைக் குறிக்க ‘ஜகா அஜ்ஜரஉ’ (பயிர் வளர்ச்சி அடைந்தது) என்று கூறப்படும்.
செல்வத்தில் ஏற்படும் வளர்ச்சியைக் குறிக்கவும் ‘ஜகா’ எனும் வார்த்தை கையாளப்படுகிறது.
‘தூய்மைப் படுத்துதல்’ என்ற அர்த்தமும் அதற்கு உண்டு.

செல்வத்திலிருந்து குறிப்பிட்ட வகையினருக்கு வழங்கப்பட வேண்டிய குறிப்பிட்டளவு தொகையினை ‘ஜகாத்’ என்று இஸ்லாம் பெயரிட்டிருப்பது இவ்விரு அர்த்தத்தின்படி மிகவும் பொருத்தமாக அமைகிறது. ஏனெனில், ‘ஜகாத்’ வழங்குவது பொருளாதாரம் வளர்ச்சியடைய காரணமாக அமைகிறது. நன்மைகள் வளர காரணமாகிறது..

‘தர்மம் செய்வதால் செல்வம் குறைந்து விடாது’ (முஸ்லிம், திர்மிதி, அஹ்மத்) என்ற நபி மொழியும், ‘அல்லாஹ் தர்மங்களை வளர்க்கிறான்’ என்று குர்ஆனில் வந்துள்ள செய்தியும் முறையே ஜகாத் வழங்குவதால் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படுகிறது, நன்மைகள் பன்மடங்காக கிடைக்கிறது என்பதை தெளிவு படுத்துகின்றன.
மேலும், ஜகாத் வழங்கும் மனிதன் கஞ்சத்தனம், பேராசை போன்ற இழிந்த துற்குணங்களின் கசடுகளிலிருந்து தூய்மைப்படுத்தப் படுகிறான். ஜகாத் வழங்குவதால் பல பாவங்களிலிருந்தும் அவன் பரிசுத்தமாக்கப்படுகிறான்.
(ஃபத்{ஹல் பாரி: 3ஃ332)

‘ஜகாத்’ என்ற வார்த்தைக்கு மேலே குறிப்பிட்ட இரு அர்த்தங்களும் உண்டு என்பதை லிசானுல் அரப், காமுஸுல் முஹீத், அந்நிஹாயா போன்ற எல்லா அகராதி நூற்களிலும், ஜகாத்தைப் பற்றி விவரிக்கும் ஹதீஸ் மற்றும் மார்க்கச் சட்ட விளக்க நூற்களிலும் கூறப்பட்டிருப்பதை காணலாம்.

இவ்வாறு பல அர்த்தங்கள் உள்ள ஒரு வார்த்தைக்கு ‘தூய்மைப்படுத்துதல்’ என்ற அர்த்தம் மட்டுமே இருப்பது போன்ற ஒரு பொய் தோற்றத்தை ஏற்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனவே,
‘ஜகாத்’ என்ற வார்த்தைக்கு ‘வளர்ச்சியடைதல்’, ‘தூய்மைப் படுத்துதல்’ போன்ற பல்வேறு அர்த்தங்கள் இருப்பதை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

 

Related Post