இறைநம்பிக்கையாளர்களே!

இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும். (நோன்பு நோற்பது) குறிப்பிட்ட சில நாட்களிலேயாகும். ஆனால் (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் (அந்நாட்களில் நோன்பு நோற்காமல்) மற்ற நாட்களில் கணக்கிட்டு நோற்றுக் கொள்ள வேண்டும். நோன்பு நோற்க சக்தி பெற்றிருப்பவர்கள் (நோற்காமல் விட்டுவிட்டால் அவர்கள்) மீது ஃபித்யா (பரிகாரம்) கடமையாகின்றது. அது (ஒரு நோன்புக்குரிய பரிகாரம்) ஓர் ஏழைக்கு உணவளிப்பதாகும். ஆனால் எவரேனும் விரும்பி அதிக நன்மை செய்தால், அது அவருக்கே சிறந்ததாகும். ஆனால் நீங்கள் அறிவுடையோராயிருப்பின் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மை ஈட்டித் தரும். ரமளான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். ஆனால் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றிட வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்பவில்லை. (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் நிறைவு செய்வதற்காகவும், அல்லாஹ் உங்களை நேரிய வழியில் செலுத்தியதற்காக நீங்கள் அவனுடைய மேன்மையைப் போற்றி அவனுக்கு நன்றி பாராட்டுவதற்காகவுமே (இவ்வழி உங்களுக்குக் காண்பிக்கப்படுகிறது!) மேலும் (நபியே!) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால், “நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன்; என்னை எவரேனும் அழைத்தால் அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கின்றேன் (என்பதைத் தெரிவித்து விடுங்கள்). எனவே அவர்கள் என்னுடைய அழைப்பை விரைந்து ஏற்றுக் கொள்ளட்டும். என்மீது நம்பிக்கை கொள்ளட்டும். அதனால் அவர்கள் நேர்வழி அடைந்திட முடியும்.” நோன்புக்கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டு விட்டது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் உங்களுக்கே வஞ்சனை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்து கொண்டான். எனினும், உங்கள் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றான்; மேலும் உங்கள் குற்றங்களைப் பொறுத்தருளினான். இனி (இரவில்) அவர்களுடன் நீங்கள் கூடுங்கள். அல்லாஹ் அனுமதித்துள்ள இன்பங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். இன்னும் விடியற்காலையில் வெள்ளை நூலையும், கறுப்பு நூலையும் பிரித்தறிய முடியும் வரை, நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள். பின்னர் (இவற்றையெல்லாம் தவிர்த்து) இரவு (தொடங்கும்) வரை நோன்பை நிறைவு செய்யுங்கள். ஆனால் மஸ்ஜித்களில் நீங்கள் இஃதிகாஃப் இருக்கும் நிலையில் மனைவியரோடு கூடாதீர்கள். இவை அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட வரம்புகளாகும். எனவே அவற்றை நீங்கள் மீறாதீர்கள். மக்கள் (தவறான வழிகளிலிருந்து) தங்களைக் காத்துக் கொள்ளும் பொருட்டு, தன்னுடைய கட்டளைகளை(யும் விதிகளையும்) அல்லாஹ் இவ்வாறு தெளிவாக்குகின்றான். 

Related Post