தொழுகை – விளக்கம்! – 1

-மு.அ.அப்துல் முஸவ்விர்

தொழுகை – விளக்கம்! – 1

நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிட்டால்

நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிட்டால்

நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிட்டால் நிற்கும்போதும், உட்காரும்போதும், படுக்கும்போதும் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். மேலும், எதிரிகள் குறித்து அச்சம் நீங்கிவிட்டால் தொழுகையை முழுமையாக நிறைவேற்றுங்கள்! உண்மையாகவே குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் இறைநம்பிக்கையாளர்கள் மீது தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது.

ஸ்லாத்தை தழுவியபின் முதற்கடமை தொழுகையாகும். இது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். பருவமடைந்த, ஆண், பெண் அனைவரின் மீதும் தொழுகை கடமையாகும்.

அல்லாஹ் நமக்களித்துள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் வணக்கமே இத்தொழுகை. எனவே அதனை கடமை உணர்வுடனும் நன்மையை எதிர்பார்த்தும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் முறையாக நிறைவேற்றவேண்டும்.

இந்தக் கடமை மனிதன் மரணிக்கும் போதுதான் முடிவடைகிறது. ஊரில் இருக்கும் போதும் பயணத்தில் இருக்கும் போதும் ஆரோக்கியமாக இருக்கும் போதும் நோயாளியாக இருக்கும் போதும் கூட தொழுகையை அதன் நேரத்தில் நிறைவேற்றுவது அவசியமாகும்.

தொழுகையை நிலைநாட்டுமாறு சுமார் 80 இடங்களில் அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். நபி(ஸல்)அவர்கள் உயிர் பிரியும் கடைசி வேளையில் கூட தொழுகையை வலியுறுத்தினார்கள். முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாதவருக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு தொழுகைதான். தொழுகை மானக்கேடான, பாவமான காரியங்களை விட்டும் மனிதனைத் தடுக்கின்றது. ஒரு தொழுகை மற்றொரு தொழுகைக்கு மத்தியிலுள்ள சிறிய பாவங்களுக்கு பரிகாரமாக அமைகிறது. மறுமையில் தொழுகையைப் பற்றித்தான் முதலாவதாக விசாரிக்கப்படும். தொழுகையை பேணித் தொழுதவருக்கு அது மறுமையில் பிரகாசமாகவும் ஒளியாகவும் வரும். தொழுகையை பேணித் தொழாதவன் மறுமையில் அல்லாஹ்வின் எதிரிகளான ஃபிர்அவ்ன், ஹாமான், உபை பின் கலப் ஆகியோருடன் இருப்பான். தொழுகையை முறையாகப் பேணியவர்கள் நிச்சயமாக ஈருலகிலும் வெற்றியடைந்து விட்டார்கள். மனஅமைதியை பெற்று விட்டார்கள்.

தொழுகையின் ஒழுக்கங்கள்
தொழுகைக்கு இறையச்சம் இன்றியமையாததாகும். இறையச்சமற்ற தொழுகை குறையுடைய தொழுகையாகும். எனவே தொழுகையை மிகவும் அச்சஉணர்வுடன் நிறைவேற்றவேண்டும். நாம் அல்லாஹ்வை காணாவிட்டாலும் அவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடன் தொழவேண்டும். தொழுகை இறைவனுடன் உரையாடுவது போன்றதாகும். எனவே தொழுகையில் தொழுகையல்லாத மற்றவற்றை சிந்திப்பது, பேசுவது, ஏதேனும் சாப்பிடுவது, மேலே, வலது, இடது புறங்களிலே திரும்புவது, ஸலாத்திற்கு பதில் சொல்வது மேலும் இதுபோன்ற அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் பள்ளிவாயிலில் கூட்டாகத் தொழ வேண்டும். தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்வதும் தவறாகும். பள்ளிவாசலில் வலது காலை வைத்து நுழையவேண்டும். அங்கிருந்து இடது காலை முன்வைத்து வெளியேறவேண்டும். வெங்காயம், பூண்டு போன்றவற்றின் துர்நாற்றத்துடன் பள்ளிக்குள் வரக்கூடாது.

Related Post