கற்பென்ன.., காரிகையருக்கு மட்டுமா..?

– கே.எஸ்.ஸிராஜுத்தீன்

ற்பென்ன.., காரிகையருக்கு மட்டுமா..?

கற்பென்ன.., காரிகையருக்கு மட்டுமா..?

கற்பென்ன.., காரிகையருக்கு மட்டுமா..?

மனித வாழ்வின் மானம் காக்கும் உன்னத பண்பு கற்பொழுக்கம்..!அதில் காரிகையரை மட்டும் முன்னிறுத்தி, காளையர் விஷயத்தில் சமூகம் காட்டுவது சுணக்கம்..!ஒழுக்கப் பண்பாட்டில் தம் நிலையை எண்ணி ஆண்களும் அடைய வேண்டும் கலக்கம்..!இருபாலாரும் சீர்படுத்தி நின்றால் சமூகம் மணக்கும்..!
”தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆண்களுக்கும், பாதுகாத்துக் கொள்ளும் பெண்களுக்கும்” என்று தனது திருமறையில் கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண் – பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை அல்லாஹ் வலியுறுத்துகிறான். அதிலும் பெண்களுக்கு முன்பாக ஆண்களை குறிப்பிடுகிறான் என்பதை ஆண்கள் கவனிக்க வேண்டும்.’
”உலக அழிவு நாளை நெருங்கிவிட்ட நிலையில் இஸ்லாமிய பெண்களிடம் வெட்கமில்லை, பர்தா இல்லை, தெருக்களுக்கு வந்துவிட்டார்கள்” என்றெல்லாம் கூறி பெண்களின் நிலையை மட்டும் பேசி விட்டு ஆண்கள் தங்களது கற்பை மறந்து வாழ்வது சரியா..? நியாயமா என சிந்தித்துப் பார்க்க வேண்டும்..!
பொது இடங்களில் அமருவதை விட்டும் நபித்தோழர்களை அண்ணலார் (ஸல்) தடுத்தார்கள்.ஏன் தெரியுமா..? பார்வைகளைப் பேணுவதற்காக..!நிர்ப்பந்தமாக அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பார்வையை தாழ்த்திக்கொண்டு அமருங்கள் என கட்டளையிட்டார்கள்.
அநேகமாக பெரும்பாலான ஆண்கள் இன்று இதற்கு நேர்மாறாகத்தானே நடக்கிறோம்..! பெண்களுடைய ஒழுக்கம் பற்றி பேசக்கூடிய நம்மில் எத்தனை பேர் பெண்கள் எதிரில் வரும்பொழுது நம் பார்வையைத் தாழ்த்திக் கொள்கின்றோம்..!
இருசாராருக்கும் கற்புண்டு என்பதை ஏற்றுக்கொள்ளும்போது கற்பின் ஒழுக்கமும் இருசாராருக்கும்தான்! பெண்ணுக்கு மட்டுமல்ல என்பதை நாம் உணர வேண்டும்.அதிகாரம் படைத்த ஆண்கள் எந்த விஷயத்திலும் பெண்களிலேயே குறை காண்பார்கள். ஆனால் தங்களை வசதியாக மறந்து விடுவார்கள்.
ஆம்..!அந்நிய ஆண்கள் இருக்குமிடத்திற்கு பெண்கள் செல்வதை குறையாக காண்பவர்கள். அந்நியப் பெண்கள் இருக்கும் இடத்திற்கு இவர்கள் செல்வதை குறையாக எண்ணுவதில்லை..!
அந்நிய ஆண் பார்க்கும் விதத்தில் பெண் முகம் திறந்து செல்வதை குறை சொல்பவர்கள், அந்நியப் பெண்களை இவர்கள் பார்ப்பதை குறையாக நினைப்பதில்லை..!
அந்நிய ஆணிடத்தில் பெண் பேசுவதை குறை பார்ப்பவர்கள் அந்நிய பெண்ணிடத்தில் தாம் பேசுவதைக் குறையாக நினைப்பதில்லை..!
இப்படியாக கற்பின் ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டும் உரியது என்பதாக நினைத்து வாழும் நாம் திருக் குர்ஆனையும் நபிமொழிகளையும் திரும்பிப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.
திருக்குர்ஆனின் 33 ஆவது அத்தியாயமான ‘அல் அஹ்ஸாப்’ – ன் 35 ஆவது வசனத்தில்; இஸ்லாம், ஈமான், இறைவழிபாடு, உண்மை, பொறுமை, இறையச்சம், தான தர்மம், நோன்பு, கற்பொழுக்கம், திக்ரு செய்வது ஆகிய இந்த பத்து விஷயங்களை குறிப்பிட்டு, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சுவனம் செல்ல இந்த பத்து தன்மைகளும் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறான் எல்லாம் வல்ல ஏக இறைவன்..!
‘உலக அழிவு நாளை நெருங்கிவிட்ட நிலையில் இஸ்லாமிய பெண்களிடம் வெட்கமில்லை, பர்தா இல்லை, தெருக்களுக்கு வந்துவிட்டார்கள்’ என்றெல்லாம் கூறி பெண்களின் நிலையை மட்டும் பேசி விட்டு ஆண்களாகிய நாம் மட்டும் தங்களது கற்பை மறந்து வாழ்வது சரியல்ல. நியாயமும் அல்ல..!
‘புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது’ என பழமொழி கூறுவார்கள். அதுபோல் பெண்களிடம் எவ்வளவுதான் கலாச்சார சீர்கேடுகள் வந்தாலும் ஒரு நல்ல தரமான இறைநம்பிக்கையாளன்; தன் கற்பொழுக்கத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டான்..!
சீர்கேடுகள் நிறைந்திருக்கும் இக்காலத்தில் கற்பொழுக்கமுள்ள வாழ்க்கையை நோக்கிப் பயணிப்போம்.அதற்கு இறையருள் துணை நிற்கட்டும்..!

Related Post