இறைவனை சந்தியுங்கள் தூய்மையுடன்..! (ஒளூ செய்யும் முறை)

 (ஒளூ செய்யும் முறை)

அல்லாஹ் கூறுகிறான்: –

இறைநம்பிக்கை கொண்டவர்களே! தொழுகைக்காகச் செல்லும்போது உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்களுடைய கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்; இன்னும் உங்களுடைய தலைகளை (நீரால்) தடவிக் கொள்ளுங்கள்! மேலும், உங்கள் கால்களை இரு கணுக்கால்கள் வரை கழுவிக் கொள்ளுங்கள்! மேலும், நீங்கள் ஜுனுபாளியாக* இருந்தால் (குளித்துத்) துப்புரவாகி விடுங்கள். ஆனால், நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் எவரேனும் மலஜலம் கழித்துவிட்டு வந்திருந்தால், அல்லது பெண்களைத் தீண்டியிருந்தால் தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்துங்கள்! அதில் உங்கள் கைகளைப் பதித்து முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! உங்கள் வாழ்க்கையில் எந்தச் சிரமத்தையும் உண்டு பண்ண அல்லாஹ் விரும்பவில்லை. ஆயினும் உங்களைத் தூய்மை செய்யவும் உங்கள் மீது தனது அருட்பேற்றை நிறைவு செய்யவுமே அவன் விரும்புகின்றான். இதனால் நீங்கள் நன்றி செலுத்தக்கூடியவர்களாய்த் திகழக்கூடும்.(அல்-குர்ஆன் 5:6)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்)

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்)

‘எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களில் எவரது தொழுகையையும் நீங்கள் ஒலூச் செய்தால் தவிர, அசுத்தத்துடன் ஏற்றுக் கொள்ள மாட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவுத்

நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம்: –

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: –

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)

எனவே நாம் தொழுகைக்கான உளூ செய்யும் போது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு செய்தார்களோ அவ்வாறே நாமும் செய்ய வேண்டும்.

உளூ செய்யும் முறை:  

http://youtu.be/7DMotAOXtIE

உளூவிற்கான நிய்யத் செய்தல்: – உளூ செய்வதாக மனதில் எண்ணிக் கொண்டு (வாயால் மொழிவது அல்ல).

பிஸ்மில்லாஹ்கூறுதல்: – மனதால் நிய்யத் செய்த பிறகு ‘பிஸ’மில்லாஹ்’ கூறி உளூ செய்யத் துவங்க வேண்டும்.

இரு மணிக்கட்டுகளை கழுவுதல்: – இரு கைகளையும் மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவிக் கொள்ளவேண்டும்.

வாய் கொப்பளித்தல்: – மூன்று முறை வாய் கொப்பளிக்க வேண்டும்.

நாசிக்கு (மூக்கிற்கு) நீர் செலுத்தி சுத்தம் செய்தல்: – மூக்கிற்குள் வலது கையால் தண்ணீர் செலுத்தி இடது கையால் மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும்.

முகம் கழுவுதல்: – ஒரு காதிலிருந்து மறு காதுவரையும், நெற்றியின் ஆரம்பப் பகுதியிலிருந்து கீழ் தாடை வரையும் முகத்தை மூன்று முறை கழுவவேண்டும்.

இரு கைகளை முழங்கை வரை கழுவுதல்: – இரண்டு கைகளையும் விரல் நுனிகளிலிருந்து முழங்கை உட்பட மூன்று முறை கழுவவேண்டும். முதலில் வலது கையையும் பிறகு இடது கையையும் கழுவவேண்டும்.

மஸஹ் செய்தல்: – இரண்டு கைகளையும் தண்ணீரில் நனைத்து தலையின் முற்பகுதியிலிருந்து பிற்பகுதி வரை கொண்டு சென்று மீண்டும் அதனை முற்பகுதிக்கு கொண்டு வரவேண்டும்.  பிறகு ஆட்காட்டி விரலை காதின் உட்பகுதியையும், பெருவிரலால் காதின் வெளிப்பகுதியையும் தடவ வேண்டும்.

தலையில் மஸஹ் ஒரு முறை தான் செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைகளையும் தலையின் முன்பாகத்தில் வைத்து பிடரி வரை தடவி மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கைகளைக் கொண்டு வந்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி),  ஆதாரம் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவுது, இப்னுமாஜா, அஹ்மது

நம்மில் சிலர் பிடரியில் மஸஹ் செய்கின்றனர். இதற்கு நபிவழியில் எவ்வித ஆதாரமும் இல்லை.

இரு கால்களையும் கழுவுதல்: – இரண்டு கால்களையும் விரல் நுனிகளிலிருந்து கணுக்கால் வரையில் முதலில் வலது காலையும் பிறகு இடது காலையும் மூன்று முறை கழுவவேண்டும்.
ஒரு மனிதரின் காலில் நகம் அளவுக்கு தண்ணீர் படாததைக்கண்ட நபியவர்கள் திரும்பிச் சென்று உம் உளுவை அழகாகச்செய் என்றார்கள். அறிவிப்பவர்:அனஸ் (ரலி) ஆதாரம் : நஸயீ, அபூதாவூது.

குதிகால்களை நன்றாகக் கழுவாதவர்களுக்கு நரகம்தான் என்றும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா, ஆதாரம் : புகாரி.

காலுறை அணிந்தவர் உளூ செய்யும் முறை: –

ஒருவர் உளு செய்து விட்டு காலுறை (ஸாக்ஸ்) அணிந்து, பிறகு உளு முறிந்து விட்டால் திரும்ப உளு செய்யும் போது அவர்; காலுறையை கழற்ற வேண்டிய அவசியமில்லை. காலை கழுவ
வேண்டிய நேரத்தில் காலுறையின் மேல்பகுதியில் மட்டும் மஸஹ் செய்தால் போதும். கடமையான குளிப்பிற்கு கட்டாயம் கழற்றவேண்டும்.

காலுறையில் மஸஹ் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவைகள்: –

காலுறை அணியும் போது உளூவுடன் இருந்திருக்க வேண்டும். அதன் பிறகு உளூ முறிந்தால் தான் காலுறையைக் கழற்றாமலேயே அதன் மீது மஸஹ் செய்து கொள்ளலாம்.

காலுறையின் மேல் பகுதியில் தான் மஸஹ் செய்ய வேண்டும். சிலர் செய்வது போல் கீழ் பகுதியில் அல்ல.

மஸஹ் செய்வதற்கான காலக் கெடு: –

ஊரில் இருப்பவர்களுக்கு ஒரு நாள் (ஐந்து நேரத் தொழுகைகள்). பிரயாணத்தில் இருப்பவர்களுக்கு மூன்று நாட்கள் ஆகும். [Al-Majmoo’ (1/487), Al-Musannaf (1/209/807)]

இந்த காலக்கட்டத்திற்கு மேற்படும் போது காலுறையை கழற்றிவிட்டு முறைப்படி உளுச் செய்ய வேண்டும்.

Related Post