வானத்தில் வீற்றிருப்பவனே..!

 

அவன் அல்லாஹ், ஏகன், அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன்.

அவன் அல்லாஹ், ஏகன், அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன்.

தொகுப்பு: மு.அ.அப்துல் முஸவ்விர்

கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன், அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே! அவன் யாருடைய சந்ததியும் இல்லை. அவனுக்கு யாரும் சந்ததி இல்லை.மேலும் அவனுக்கு நிகரானவர் எவருமே இலர்.112:1-4

அல்லாஹ் எங்கும் இருக்கின்றானா?

 நபிமொழிகள்:

1. நபி(ஸல்) அவர்கள் இறைவனுடன் உரையாடுவதற்கு (மிஃராஜ்) விண்ணேற்றத்தின் போது வானத்திற்குச் சென்றார்கள். அப்போதுதான் ஐவேளை தொழுகை கடமையாக்கப்பட்டது. (புகாரி, முஸ்லிம்)

2. (மக்களே) என்னை நீங்கள் நம்பமாட்டீர்களா? நானோ வானத்திலிருப்பவ(னான இறைவ)னின் நம்பிக்கைக்கு உரியவனாவேன்! என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

3. பூமியில் உள்ளவர்கள் மீது நீங்கள் இரக்கம் காட்டுங்கள். வானில் இருப்பவன் (அல்லாஹ்) உங்கள் மீது இரக்கம் காட்டுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

4. நபி(ஸல்) அவர்கள் ஓர் அடிமைப் பெண்ணிடத்தில் அல்லாஹ் எங்கே இருக்கிறான்? எனக் கேட்டபோது, அந்தப் பெண் வானில் இருக்கிறான் எனக் கூறினாள். நான் யார்? எனக் கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்றாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், இந்தப் பெண்ணை விடுதலை செய்து விடுங்கள். இவள் முஃமினான பெண்தான் எனக்கூறினார்கள். (முஸ்லிம்)

இந்த நபிமொழியிலும் அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பது தெளிவாகின்றது.

5. அர்ஷ் நீரின் மீது உள்ளது. அல்லாஹ்வோ அர்ஷின் மீது உள்ளான். அவன் நீங்கள் எந்நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறிகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

நபித்தோழர்கள் மற்றும் அறிஞர்களின் கூற்றுக்கள்:

1. நபி(ஸல்) அவர்கள் மரணித்த நாளில் அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள், ‘யார் அல்லாஹ்வை வணங்குகின்றீர்களோ, அவர்கள் அறிந்து கொள்ளுங்கள், அவன் வானில் இருக்கிறான், அவன் மரணிக்கமாட்டான். (தாரமி)

2. எங்களின் இரட்சகனை நாம் எப்படி தெரிந்து கொள்வது என அப்துல்லாஹ் இப்னுல் முபாரக்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது, அதற்கவர்கள், அவன் தனது படைப்பினங்களை விட்டும் தனித்து வானில் அர்ஷின் மீது உள்ளான் எனக்கூறினார்கள்.

இதனின் பொருள்: அல்லாஹ் அர்ஷின் மீது தன் படைப்பினங்களை விட்டும் தனித்திருக்கின்றான், அவன் படைப்பினங்களில் யாரும், அவனின் உயர்வுக்கு ஒப்பாக முடியாது.

3. நான்கு இமாம்களும் அல்லாஹ் அர்{க்கு மேல் இருக்கிறான் என்ற விஷயத்தில் ஒற்ற கருத்தில் இருக்கின்றார்கள். படைப்பினங்களில் அவனுக்கு யாரும் ஒப்பாக முடியாது எனவும் கூறுகின்றார்கள்.

4. தொழுபவர்கள் ஸுஜூது செய்யும் போது (சுப்ஹான றப்பியல் அஃலா) ‘உயர்வான எனது இறைவன் தூய்மையானவன்’ என கூறுவதும், பிரார்த்தனை செய்பவர்களும் பிரார்த்தனை செய்யும் போது அவர்களின் இரு கரங்களையும் வானத்தின் பக்கம் உயர்த்துவதும் அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பதை காட்டுகின்றது.

5. தெளிவான சிந்தனையும் அல்லாஹ் வானில் இருக்கிறான் என்பதையே உறுதிப்படுத்துகின்றது. அல்லாஹ் எங்குமிருக்கின்றான் என்பது உண்மையானால், நபி(ஸல்) அவர்கள் அது பற்றி கூறியிருப்பார்கள். தமது தோழர்களுக்கும் அறிவித்திருப்பார்கள். அல்லாஹ் எல்லா இடங்களிலும் இருக்கின்றான் என்றால், உலகத்தில் அசுத்தமான இடங்களும் உண்டு, அந்த இடங்களிலும் அல்லாஹ் இருக்கின்றானா? என்ற கேள்வியும் எழும்! அல்லாஹ் அப்படிப்பட்ட தன்மைகளை விட்டும் தூரமானவன்.

அல்லாஹ் நம்மோடு எல்லா இடங்களிலும் இருக்கின்றான் என்ற கூற்று, அல்லாஹ் ஒன்றுக்கும் மேற்பட்டவன் என்பதை குறிக்கும். ஏன் என்றால் இடங்கள் எண்ணற்றவை, வித்தியாசமானவை. அல்லாஹ் ஒருவன்தான் எனும்போது, அவன் பலராக ஆகுவதற்கு சாத்தியமேயில்லை. எனவே அவன் எல்லா இடத்திலும் உள்ளான் என்றால் அவன் ஒருவன் என்ற கூற்று பொய்யாகிவிடும். ஆகவே, அல்லாஹ் வானில்தான் அர்{க்கு மேல் இருக்கிறான். அதே நேரத்தில் எங்கும் வியாபித்திருக்கும் அவனது ஞானத்தின் மூலம் நாம் எங்கிருந்தாலும் நமது சப்தத்தை செவிமடுத்துக் கொண்டும் நம்மைப் பார்த்துக் கொண்டும் இருக்கின்றான் என்பதே சரியான முடிவாகும்.

மேலே கூறப்பட்ட குர்ஆனுடைய வசனங்கள், நபிமொழிகள், நபித்தோழர்கள் மற்றும் அறிஞர்களின் கூற்றின் மூலம் அல்லாஹ் ஏழு வானங்களுக்கும் மேல் அர்ஷின் மீது தான் இருக்கின்றான் என்பது தெளிவான ஒன்றாகும். இதற்குப் பிறகு அல்லாஹ் எங்கும் நிறைந்திருக்கின்றான் என்ற கொள்கையிலிருந்து முற்றாக தவிர்ந்து கொள்ளுங்கள். தவறான கொள்கைகளிலிருந்து நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!

நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்

Related Post