தேகசுத்தியின்போது தவறுகள்..! 2

தேகசுத்தியின்போது தவறுகள்..!

தேகசுத்தியின்போது தவறுகள்..!

– மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி  

தேகசுத்தியின்போது தவறுகள்..! 2

5) மல சல கழிப்பிடங்களில் அல்லாஹ்வின் பெயர் கூறுவதும். அல்லாஹ்வின் பெயர் எழுதப்பட்டவற்றை அங்கு சுமந்து செல்வதும்!

இவை செய்வது கூடாத விடயமாகும். ஒரு முஸ்லிம் இவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.

இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழிக்கும் பொழுது ஒரு மனிதர் அவருக்கு ஸலாம் சொல்ல நபியவர்கள் அவருக்கு பதில் கூறவில்லை! (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த ஹதீஸிலிருந்து ஸலாத்துக்கு பதில் கூறுவதென்பது அல்லாஹ்வின் பெயரை கூறுவதாகும் என்பதனால் நபிகளார் (ஸல்) பதிலழிக்கவில்லை என்பதை அறியலாம்.

6) தலையை ஒரு முறையை விட அதிகமாக மஸஹ் (நீரினால் தடவுவது) செய்வது!

இது நபி (ஸல்) அவர்கள் உளூ செய்ததிற்கு மாற்றமான முறையாகும். நபி (ஸல்) அவர்களது வழிகாட்டலில் இதனை காண முடியாது. காதின் மீது தனது இரு பெருவிரலையும் வைத்து ஆள்காட்டி விரல்கள் தலை முடியியில் படுமாறு இரண்டு கைகளாலும் தலையின் முன்பகுதியிலிருந்து பின்பகுதிவரை கொண்டு சென்று அவ்வாறே ஆரம்பித்த இடம் வரை கொண்டு வருவதே தலையை மஸஹ் செய்யும் முறையாகும். இதற்கு மாற்றமாக  மூன்று முறை தலையின் முற்பதியை நீரினால் தடவுவது (மஸஹ்) செய்வது, நபி (ஸல் அவர்களின் வழிமுறைக்கு மாற்றமானதாகும்.

அலி (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் உளூ செய்த முறையை பற்றி குறிப்பிடும் பொழுது, “தலையை ஒரு தடவை மஸஹ் செய்தார்கள்( நீரினால் தடவினார்கள்” .(ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி, நஸாஈ)

7) பிடரியை மஸஹ் செய்வது!

இது சிலரிடத்தில் பரவலாக காணக்கூடிய தவறாகும். தலையை மஸஹ் செய்ததன் பின்னால் தலையின் இறுதிப் பகுதியாகிய பிடரியை நீரினால் மஸஹ் செய்கின்றனர். இதனை மார்க்க அறிஞர்கள், ‘இஸ்லாத்தில் புதிதாக நுழைவிக்கப்பட்டவை” என்கின்கின்றார்கள். இதனை பற்றி வரக்கூடிய அறிவிப்புக்கள் இட்டுக்கட்டப்பட்டவையாகும். மேலும் மிக மிகப் பலவீனமானதும் ஆகும். இவற்றில் மிகவும்  கவனமாகவும் பேனுதலாகவும் இருப்பதோடு, மார்க்க விடயத்தில் அதிகரித்து செய்வதனை விட்டும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

8) காலுறையை மஸஹ் செய்யும் பொழுது அதனது கீழ்பகுதியை மஸஹ் செய்தல்!

இஸ்லாம் தொழுகைக்கு உளூவை கடமையாக்கியிருக்கின்றது. உளூ செய்யக்கூடிய சில நேரத்தில் காலை கழுவுவதற்கு பகரமாக அதனை மஸஹ் செய்யலாம். (நீரினால் தடவ வேண்டும்). உதாரணமாக காலுறை அணிந்த நிலையில்!

இந்நேரத்தில் காலுறையின் மேற்குதியையே மஸஹ் செய்ய வேண்டும். இதற்கு மாற்றமாக மக்கள் அறியாமையினால் அல்லது பிழையாக காலின் கீழ்பகுதியை மஸஹ் செய்கின்றனர். இது முற்றிலும் தவறான காரியமாகும்.

முஃகியரா இப்னு சுஃபா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“நபி (ஸல்) அவர்கள் காலின் மேற்பகுதியை மஸஹ் செய்வதனை நான் கண்டேன்” (ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத், திமிதி)

அலி (ரழி) அவர்கள் கூறினார்கள்:

“இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவை முற்படுத்துவதாக இருந்தால் காலின் மேற்பகுதியை மஸஹ் செய்வதனை விட கீழ்பகுதியை மஸஹ் செய்வதே சரியானதாகும். நபி (ஸல்) அவர்கள் காலுறையின் மேற்பகுதியை மஸஹ் செய்வதையே நான் கண்டேன்” (ஆதாரம்: அபூதாவூத்)

இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் காலுறையின் மேற்பகுதியையே மஸஹ் செய்திருக்கின்றார்கள் என்பதனையும், பகுத்தறிவு ரீதியாக பார்க்கின்ற பொழுது அதனது கீழ்பகுதியை  செய்ய வேண்டும்! ஆனாலும் மார்க்கத்தின் வழிகாட்டல் அதனது மேற்பகுதியை மஸஹ் செய்வதனால் அந்த அடிப்படையில் செய்து மார்க்க விடயங்களை கடைபிடிக்க வேண்டும்.

Related Post