டாக்டர். நாயக் பதில்கள் – 4 ஆ

தமிழில் : அபு இஸாரா

3. வெறியூட்டும் போதையை படிப்படியாக தடைசெய்தல்.

அருள்மறை குர்ஆனில்

அருள்மறை குர்ஆனில்

அருள்மறை குர்ஆனில் மேற்படி வசனங்களுக்கு மேலும் ஓர் உதாரணம் வெறியூட்டும் போதையை படிப்படியாக தடைசெய்தல் சம்பந்தமான வசனங்கள் ஆகும். கீழ்க்காணும் அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 219 வது வசனம் குடிபோதையை தடைசெய்வது பற்றி இறங்கிய முதல் வசனமாகும்.

‘(நபியே!) மது பானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்: நீர் கூறும்: ‘அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கின்றது: மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு: ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம், அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.'(அல்குர்ஆன் 2:219)

குடி போதையை தடை செய்வது பற்றி இரண்டாவதாக இறக்கப்பட்ட வசனம் அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன் நிஷாவின் 43வது வசனமாகும்:

‘நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்.'(அல்குர்ஆன் 4:43)

குடி போதையை தடை செய்வது பற்றி கடைசியாக இறக்கப்பட்ட வசனம் அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 90 வது வசனமாகும்:

‘நம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத் தக்கச் செயல்களிலுள்ளவையாகும்: ஆகவே இவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.’

அருள்மறை குர்ஆன் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்ற பின்பு, அவர்கள் உயிரோடு வாழ்ந்திருந்த காலமான இருபத்து இரண்டரை ஆண்டு காலங்களில் சிறிது சிறிதாக இறக்கியருளப்பட்டது. அவர்கள் காலத்தில் சமுதாயத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் யாவும் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டது. சமுதாயத்தில் திடீரென- எதிர்பாராத விதத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், கலகம் அல்லது குழப்பம் விளைவிக்க காரணமாக அமையலாம். எனவே சமுதாயத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் யாவும் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டது

மதுபானம் அருந்துவதை தடை செய்யும் வசனங்கள் மூன்று நிலைகளில் கொண்டு வரப்பட்டது. முதலாவது வசனம் மதுபான போதையில் பெரும் பாவமும், சில பயன்களும் உண்டு. ஆனால் பாவமானது பலனைவிட அதிகமாகும் என்று உணர்த்துகிறது. மதுபானம் அருந்துவதை தடை செய்வது பற்றி இரண்டாவதாக இறங்கிய வசனம், போதையோடு இருக்கும் நிலையில் தொழுகையை மேற்கொள்ளாதீர்கள் என்று வலியுறுத்துகிறது. தொழும் காலங்களில் – போதையில் இருத்தல் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வசனம், தொழாத நிலையில் போதையில் இருக்கலாமா – கூடாதா என்பது பற்றி குறிப்பிடாமல் விட்டு விடுகிறது. போதையில் இருக்கலாமா? இருக்கக் கூடாதா? என்பது பற்றி குர்ஆன் குறிப்பிடாமல் விட்டு விடுகிறது. தொழாத நேரங்களில் போதையில் இருக்கலாம் என்று குர்ஆன் குறிப்பிட்டு இருந்தால், அது சொன்ன முந்தைய வசனத்தோடு கண்டிப்பாக முரண்பட்டிருக்கும். ஆனால் அல்லாஹ் சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து அருள்மறை குர்ஆனை இறக்கியருளி இருக்கிறான். எனவேதான் அருள்மறை குர்ஆனில் முரண்பாடுகளே இல்லை. கடைசியாக எல்லா நேரங்களிலும் போதையை தடை செய்யும் வசனம் – அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 90 வசனத்தின் மூலம் இறக்கியருளப்பட்டது.

மேற்குறிப்பிடப்பட்ட மூன்று வசனங்களும் ஒன்றுக் கொன்று முரண்படவில்லை என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட மூன்று வசனங்களும் ஒன்றுக் கொன்று முரண்பட்டால், சமகாலத்தில் குறிப்பிட்ட மூன்று வசனங்களையும் நாம் பின்பற்ற முடியாமல் போயிருக்கும். ஒரு முஸ்லிம் அருள்மறை குர்ஆனின் அனைத்து வசனங்களையும் பின்பற்ற வேண்டும் என்றிருப்பதால் மேற்குறிப்பிட்ட வசனங்களில் கடைசியாக இறக்கியருளப்பட்ட வசனமான ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 90 வது வசனத்தை பின்பற்ற வேண்டும். அதே சமயம் அதற்கு முன்னால் இறக்கியருளப்பட்ட இரண்டு வசனங்களையும் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.

உதாரணத்திற்கு நான் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றதில்லை என்று சொல்கிறேன். பின்பு நான் கலிஃபோர்னியாவிற்கும் சென்றதில்லை என்று சொல்கிறேன். கடைசியாக நான் சொல்கிறேன் நான் அமெரிக்காவிற்கும் சென்றதில்லை என்று சொல்கிறேன். மேற்படி எனது கூற்றுக்கள் எதுவும் ஒன்றுக்கொன்று முரண்படவில்லை. மாறாக எனது ஒவ்வொரு கூற்றும் அதிகமான விபரங்களைத்தான் தருகின்றன. எனது மூன்றாவது கூற்று முந்தைய எனது இரண்டு கூற்றுக்களையும் உள்ளடக்கியுள்ளது. இவ்வாறாக நான் கடைசியாக சொன்ன, நான் அமெரிக்கா சென்றதில்லை என்ற எனது கூற்று எனது முந்தைய இரண்டு கூற்றுக்களான நான் லா லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றதில்லை என்பதையும் நான் கலிஃபோர்னியாவிற்கும் சென்றதில்லை என்பதையும் உள்ளடக்கியுள்ளது.

அதுபோலவே, எல்லா நேரங்களிலும் போதiயுடன் இருப்பது தடை செய்யப் பட்டதற்கான வசனம் இறங்கியவுடன், தொழுகை நேரத்தில் போதையுடன் இருப்பதுவும் தானாகவே தடை செய்யப் பட்டுவிட்டது. தவிர போதையுடன் இருப்பவர்களுக்கு உண்டான ‘போதையுடன் இருப்பதில் நன்மையை விட தீமையே அதிகம்’ – என்கிற செய்தியும் இன்று வரை அழியாத உண்மையாக விளங்கி வருகிறது.

4. அருள்மறை குர்ஆனில் முரண்பாடுகளே இல்லை.

மேலே சுட்டிக் காட்டப்ட்ட வசனங்களில் ‘விட்டொழிக்கும் விதி’யை நடைமுறை படுத்தவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை. ஏனெனில் மேலே சுட்டிக் காட்டப்பட்ட வசனங்கள் மூன்றையும் ஏக காலத்தில் ஒன்றாக பின்பற்றி நடக்கக் கூடிய சாத்தியக் கூறுகளே அதிகமாக உள்ளது.

அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட வேதம் என்பதால் – அதில் முரண்பாடுகளை காணமுடியாது. மேற்படி கருத்துக்கு ஆதாரமாக அருள் மறை குர்ஆனின் நான்காவது அத்தியாம் ஸுரத்துல் நிஷாவின் 82 வது வசனம் அமைந்துள்ளதை காணலாம்:

‘அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா?. (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால்’ இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.’. (அல்குர்ஆன் 4:82)

Related Post