டாக்டர். நாயக் பதில்கள் – 4 அ

தமிழில் : அபு இஸாரா

கேள்வி எண்: 4

இஸ்லாமியர்கள் 'விட்டொழிக்கும் விதி' யில் நம்பிக்கையுள்ளவர்கள்.

இஸ்லாமியர்கள் ‘விட்டொழிக்கும் விதி’ யில் நம்பிக்கையுள்ளவர்கள்.

இஸ்லாமியர்கள் ‘விட்டொழிக்கும் விதி’ யில் நம்பிக்கையுள்ளவர்கள். (குர்ஆனில் முதலில் அருளப்பட்ட வசனங்களை விட்டு விட்டு, அதற்கு பின்பு அருளப்பட்ட வசனங்களில் நம்பிக்கை கொள்வது). இவ்வாறு செய்வது, இறைவன் தவறாக ஒரு வசனத்தை இறக்கிவிட்டு, பின்னர் வேறு ஒரு வசனத்தின் மூலம் செய்த தவறினை திருத்திக்கொள்வது போல் தெரியவில்லையா?.

பதில்:

வித்தியாசமான இரண்டு பொருள் கொள்ளல்:

அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 106வது வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது:

‘ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டு வருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?.’ (அல் குர்ஆன் 2 : 106)

மேற்படி வசனத்திற்கு அணிசேர்க்கும் வகையில் அருள்மறையின் பதினாறாவது அத்தியாயம் ஸுரத்துன் நஹ்லின் 101 வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது.

‘(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால் (உம்மிடம்) ‘நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்’ என்று அவர்கள் கூறுகிறார்கள். எ(ந்த நேரத்தில் எ)தை இறக்க வேண்டு;மென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன். எனினும் அவர்களில் பெரும்பாலோர் இவ்வுண்மையை அறிய மாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 16 : 101)

மேற்கண்ட இரண்டு வசனங்களிலும் ‘ஆயத்’ என்கிற அரபி வார்த்தை பயன் படுத்தப்பட்டிருக்கிறது. மேற்படி ‘ஆயத்’ என்கிற அரபி வார்த்தைக்கு ‘இறைவனின் அத்தாட்சிகள்’ என்றும் ‘இறைவசனங்கள்’ என்றும் ‘இறை வேதங்கள்’ என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

அருள்மறையின் இரண்டாம் அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 106 வது வசனத்திற்கு நாம் இரு விதங்களில் பொருள் கொள்ளலாம்.

மேற்படி வசனத்தில் குறிப்பிட்டுள்ள ‘ஆயத்’ என்கிற அரபி வார்த்தைக்கு இறைவேதங்கள் என்று பொருள் கொண்டால் அருள்மறை குர்ஆன் என்று பொருள் கொள்ள வேண்டுமேத் தவிர, அருள் மறை குர்ஆனுக்கு முன்பிருந்த வேதங்களான தவ்ராத் – இன்ஜீல் – ஜபூர் வேதங்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது, குர்ஆனுக்கு முந்தைய வேதங்களான தவ்ராத் – இன்ஜீல் – ஜபூர் போன்ற வேதங்கள் மறக்கப்பட வேண்டும் என்றும் பொருள் கொள்ளுதல் கூடாது. மாறாக அவைகளுக்குச் சமமான அல்லது அவைகளைவிடச் சிறந்த வேதமான குர்ஆனை அருளியிருக்கிறான் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

மேற்படி வசனத்தில் குறிப்பிட்டுள்ள ‘ஆயத்’ என்கிற அரபி வார்த்தைக்கு இறை வசனங்கள் என்று பொருள் பொருள் கொண்டால், மேற்படி வசனங்கள் அருள்மறை குர்ஆனில் உள்ள வசனங்கள் என்று பொருள் கொள்ள வேண்டுமேத் தவிர, அருள் மறை குர்ஆனுக்கு முன்னால் அருளப்பட்ட வேதங்களான தவ்ராத் – இன்ஜீல் – ஜபூர் – வேதங்களில் உள்ள வசனங்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது. மேலும் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் எதுவும் அல்லாஹ்வால் வழக்கிலிருந்து விட்டொழிக்கப்பட்டு விட்டதாக கருதக் கூடாது. மாறாக மேற்படி வசனங்களுக்கு சமமாக அல்லது மேற்படி வசனங்களை விடச் சிறந்த வசனங்களை அருளியிருப்பதாகத்தான் பொருள் கொள்ள வேண்டும். முன்னர் இறக்கப்பட்ட வசனங்களுக்கு சமமாக அல்லது அதைவிட சிறந்த வசனம் பின்னர் இறக்கியருளப்பட்டதாகத்தான் பொருள் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களிலும், முஸ்லிம் அல்லாத மாற்று மதத்தவர்களிலும் பலபேர் மேற்படி வசனங்களுக்கு பொருள் கொள்ளும் போது, ஒரு விஷயத்தைப் பற்றி புதிய வசனங்கள் இறக்கப்படும் போது அந்த விஷயம் சம்பந்தமாக முன்னால் இறக்கப்பட்ட வசனங்கள் வழக்கிலிருந்து விட்டொழிக்கப் படவேண்டும் என தவறான கருத்துக்களை கொண்டுள்ளனர். முந்தைய வசனங்கள் இன்றைய கால கட்டத்திற்குப் பொருந்தாது என்றும், பழைய வசனங்களுக்குச் சமமாக அல்லது, இன்னும் சிறப்பிற்குரிய புதிய வசனங்கள் இறக்கியருளப்பட்டதால் முந்தைய வசனங்களை வழக்கிலிருந்து விட்டு விட வேண்டும் என்கிற தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். இன்னும் முந்தைய வசனங்கள் – புதிதாக இறக்கியருளப்பட்ட வசனங்களோடு முரண்படுகின்றது என்கிற தவறான கருத்தையும் கொண்டுள்ளனர். இவ்வாறு இறக்கியருளப்பட்ட வசனங்களை சிலவற்றை உதாரணங்களோடு நாம் ஆய்வு செய்வோம்.

  1. முழு குர்ஆனைப் போன்ற ஒன்றையோ அல்லது குர்ஆனில் பத்து அத்தியாயங்களை போன்றவற்றையோ அல்லது ஒரே ஒரு அத்தியாயத்தைப் போன்றோ கொண்டு வருமாறு பணித்தல்.

இஸ்லாத்தை எதிர்த்து வந்த அரபிகளில் ஒரு சிலர் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வேதமல்ல. மாறாக அண்ணல் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்டது என்று குற்றம் சுமத்தி வந்தனர். அவ்வாறு குற்றம் சுமத்தி வந்த அரபிகளுக்கு சவால் விடும் விதமாக, அல்லாஹ் அருள்மறை குர்ஆனின் கீழக்கண்ட வசனத்தை இறக்கியருளினான்:

‘இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் சிலர் சிலருக்கு உதவி புரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வர முடியாது’ என்று (நபியே!) நீர் கூறும்.’. (அல்-குர்ஆன் அத்தியாயம் 17 ஸுரத்துல் பனீ இஸ்லாயீல் – 88வது வசனம்.)

குற்றம் சுமத்தி வந்த அரபிகளுக்கு சவால் விட்ட அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனம், கீழ்க்கண்ட வசனத்தின் மூலம் சவாலை இன்னும் எளிதாக்குகிறது.

அல்லது ‘இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்’ என்று அவர்கள் கூறுகிறார்களா?. ‘(அப்படியானால்) நீங்களும் இதைப்போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள்- நீங்கள் உண்மையாளராக இருந்தால்.! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்குச் சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்’, என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்-குர்ஆன் அத்தியாயம் 11 ஸுரத்துல் {ஹது – 13 வது வசனம்.)

குற்றம் சுமத்திய அரபிகளுக்கு, அருள்மறை குர்ஆன் கீழ்க்கண்ட வசனங்களின் மூலம் தனது சவாலை மேலும் எளிதாக்குகிறது.

இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப்போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்: அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!’ என்று. (அல்-குர்ஆன் அத்தியாயம் 10 ஸுரத்துல் யூனுஸ் – 38 வது வசனம்.)

இன்னும், ((முஹம்மது (ஸல் என்ற)) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து) க் கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.’ ‘அப்படி நீங்கள் செய்யாவிட்டால் – அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது – மனிதர்களையும், கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும், அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) நிராகரிப்பாளர்களுக்காவே அது சித்தப்படுத்தப் பட்டுள்ளது (அல்-குர்ஆன் அத்தியாயம் 02 ஸுரத்துல் பகராவின் – 23 – 24 வது வசனங்கள்.)

இவ்வாறு அல்லாஹ் ஸுப்ஹான{ஹவத்தாலா தனது சவாலை சிறிது சிறிதாக எளிதாக்குகிறான். அருள்மறை குர்ஆன் முதலில் அருள்மறை பற்றி குற்றம் சுமத்திய அரபிகளுக்கு – குர்ஆனைப் போன்று வேறொரு வேதத்தை கொண்டு வருமாறு பணிக்கிறது. பின்பு குர்ஆனில் உள்ளது போன்று பத்து அத்தியாயங்களை கொண்டு வருமாறு பணிக்கிறது. கடைசியாக குர்ஆனில் உள்ளது போன்று ஒரே ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள் என்று பணிக்கிறது. இவ்வாறு கொண்டு வருவதற்கு கட்டளையிட்டதன் மூலம் – அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 23 மற்றும் 24 வது வசனங்கள் அதற்கு முன்புள்ள முன்று வசனங்களான 17:88, 11:13, 10:38 ஆகிய வசனங்களோடு முரண்படவி;ல்லை. இரண்டு கருத்துக்கள் அல்லது செயல்கள் ஒன்றுக்கொன்று மாறுபடும் நிலைக்கு – (அதாவது இரண்டு செயல்கள் அல்லது கருத்துகள் ஒரே நேரத்தில் செயல்பட முடியாத நிலைக்கு) – முரண்பாடு என்று பொருள்.

அருள்மறை குர்ஆனின் பதினேழாவது அத்தியாயத்தின் 88 வது வசனம் மாற்றப்பட்டு விட்டாலும், அந்த வசனம் அருள்மறை குர்ஆனில் அல்லாஹ்வின் வார்த்தையாக – அது சொல்லும் பொருளுக்கு விளக்கமாக -இன்றும் நிலைபெற்றுள்ளது. அந்த வசனத்தின் மூலம் அருள்மறை குர்ஆன் விடுத்த சவால் இன்றைக்கும் நிலைபெற்று நிற்கிறது. அதபோலவே அதற்கு பின்னால் உள்ள வசனங்களான 11:13 மற்றும் 10:38 போன்ற வசனங்களும் அருள்மறை குர்ஆனில் அல்லாஹ்வின் வார்த்தைகளாக, அவைகள் சொல்லும் பொருளுக்கு விளக்கமாக நிலைபெற்று நிற்கின்றன. எந்த வசனத்தின் பொருளும் எந்த வசனத்தின் பொருளோடும் முரண்படாமல் – அவைகள் சொல்லக் கூடிய பொருளுக்கு உரிய நிலையில் நிலைபெற்று நிற்கின்றன. கடைசியில் சொல்லப்பட்ட வசனத்தின் மூலம் விடப்பட்ட சவாலானது, முந்தைய வசனங்களின் மூலம் விடப்பட்ட சவாலைவிட எளிதானது. இவ்வாறு கடைசி வசனத்தின் மூலம் விடப்பட்ட எளிதான சவாலே இன்னும் நிறைவேற்றப்படாத போது, முந்தைய மூன்று வசனங்களின் மூலம் விடப்பட்ட சவாலை நிறைவேற்றுவது என்கிற செயலுக்கு இடமில்லை.

உதாரணத்திற்கு – படிப்பில் மந்தமாக உள்ள ஒரு மாணவனைப் பார்த்து – அவன் பத்தாவது வகுப்பில் தேறுவதற்கு தகுதியானவர் இல்லை என்று சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே மாணவரைப் பார்த்து அவர் ஐந்தாவது வகுப்பில் தேறுவதற்கு தகுதியானவர் இல்லை என்று சொல்கிறேன். பின்பு அதே மாணவரைப் பார்த்து அவர் முதலாம் வகுப்பில் கூடத் தேறுவதற்கு தகுதியானவர் இல்லை என்று சொல்கிறேன். இறுதியில் அவர் பாலர் பள்ளியில் கூடத் தேறுவதற்கு தகுரியானவர் இல்லை என்று சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மாணவன் பள்ளியில் சேர வேண்டுமெனில் முதலில் பாலர் பள்ளியில் தேற வேண்டும். நான் கடைசியாக என்ன சொன்னேன் எனில் – மேற்படி மந்தமான மாணவன் பாலர் பள்ளியில் கூடத் தேறுவதற்று தகுதியானவன் இல்லை என்று சொன்னேன். நான் மேலே சொன்ன நான்கு வாக்குகளில் எதுவும் – ஒன்றுக் கொன்று முரண்படவில்லை என்பதை நன்றாகக் கவனிக்க வேண்டும். ஆனால் இறுதியாக நான் சொன்ன மேற்படி மந்தமான மாணவன் பாலர் பள்ளியில் கூடத் தேறுவதற்று தகுதியானவன் இல்லை என்கிற வாக்கு மாத்திரம் மேற்படி மாணவனின் அறிவுத் திறனை அறிந்து கொள்ள போதுமானதாகும். பாலர் பள்ளியில் கூடத் தேறுவதற்கு தகுதியில்லாத மாணவன் – முதலாம் வகுப்பிலும், ஐந்தாம் வகுப்பிலும், பத்தாம் வகுப்பிலும் தேர்வு பெற தகுதியுள்ளவன் என்கிற கருத்துக்கே இடமில்லாமல் போய்விடுகிறது.

Related Post