அன்னை கதீஜா..!

 

எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ அவர்கள்தாம் திண்ணமாக, படைப்பினங்களில் மிகவும் மேன்மை வாய்ந்தவர்கள்.

எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ அவர்கள்தாம் திண்ணமாக, படைப்பினங்களில் மிகவும் மேன்மை வாய்ந்தவர்கள்.

– எம். வை. மஸிய்யா 

வர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ அவர்கள்தாம் திண்ணமாக, படைப்பினங்களில் மிகவும் மேன்மை வாய்ந்தவர்கள். அவர்களின் கூலி அவர்களுடைய அதிபதியிடம் நிலையாகத் தங்கும் சுவனங்களாகும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தியுற்றான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தியுற்றார்கள். இவை அனைத்தும் தம் இறைவனை அஞ்சக்கூடிய மனிதருக்குரியவையாகும்.

பிறப்பு

அன்னை கதீஜா (ரலி) அவர்கள் கி.பி. 556 ஆம் ஆண்டு மக்காவில் பிறந்தார். இவரது தந்தை குவைலித் பின் அஸத்; தாயார் பாத்திமா பின்த் ஸாஇதா; இவருக்கு இரு சகோதரிகள்; அவர்கள் ஹாலா பின்த் குவைலித், ருகையா பின்த் குவைலித் ஆகியோராவர்.

கதீஜா (ரலி) அவர்கள் அன்றைய மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவராகத் திகழ்ந்தார்கள். இவர் அறபிகளால் மதிக்கப்படும் உயர் குலத்தைச் சேர்ந்தவர். பெண்களிடம் அவசியம் இருக்க வேண்டிய ஒழுக்கத்தை நிறைவாகவே பேணி வாழ்ந்து வந்ததால் ‘தாஹிரா’ – பரிசுத்தமானவள் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டு வந்தார்கள்.

அந்தக் கால கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் பல கூட்டத்தினரோடும் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வந்தனர். அவற்றில் நபி (ஸல்) அவர்களின் நேர்மையான நடைமுறைகள், நீதியான கொடுக்கல் வாங்கல்கள் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன. அப்போது நபி(ஸல்) அவர்களை அம்மக்கள் ‘அல்-அமீன்’ – நம்பிக்கையாளர் என்றழைத்தனர்.

நபியவர்களின் நேர்மை, நாணயம் அறிந்து தமது வியாபாரச் சரக்குகளை விற்கும் பொறுப்பைக் கவனித்துக் கொள்ளுமாறு நபியவர்களை அழைத்து, வணிகத்திற்காக அனுப்பி வைத்தார்கள் கதீஜா (ரலி) அவர்கள். அதற்கிணங்க நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களின் வியாபாரப் பொருட்களை விற்றுக் கொடுத்தார்கள்.

கதீஜா (ரலி) அவர்களது வயது நாற்பதை எட்டி இருந்தாலும் அவர்களின் செல்வச் செழிப்பின் காரணமாகப் பெரும் பெரும் செல்வச் சீமான்களைத் திருமணம் முடித்திருக்க முடியும். ஆனால், தனக்குக் கீழ்ப் பணியாளராக வேலை செய்த நபி (ஸல்) அவர்களைத் திருமணம் முடித்து இவ்வுலகிற்கு அழியாத முன்மாதிரியை வழங்கினார்கள்.

ஒரு பெண் தனது வருங்காலக் கணவனை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு கதீஜா (ரலி) அவர்கள் ஒரு சிறந்த முன்மாதிரி. ஒரு மனிதன் எவ்வளவு கெட்டவனாக இருப்பினும் அவனிடம் பணமிருந்தால் அவனுக்குப் பெண் கொடுக்கப் பெருங் கூட்டம் தயாராகிவிடும். அவனைக் கணவனாக அடைய எத்தனையோ பெண்கள் ஆசைப்பட்டுவிடுவார்கள். பணத்திற்காக எதையும் தாங்குவேனென்று பணக்காரனையே மணவாளனாகக் கொள்ள நினைப்பதுண்டு.

இந்நிலைக்கு முற்றிலும் மாறுபட்டு கதீஜா (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். பொன்னையும் பொருளையும் ஒதுக்கி வைத்துவிட்டு நீதி, நேர்மை நிறைந்த, உண்மையுரைக்கின்ற, உயர் பண்புகளுக்குச் சொந்தக்காரன் ஆகிய நபிகள் நாயகத்தை மணமுடித்தார்கள். இதனால், கதீஜா (ரலி)அவர்களின் வாழ்க்கை மகிழ்வோடு கழிந்தது.

கதீஜா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மூலமாக காஸிம், அப்துல்லாஹ் (தாஹிர், தையிப்), ஸைனப், உம்மு குல்ஸூம், பாத்திமா, ருகையா ஆகிய குழந்தைகள் பிறந்தார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்களுக்குப் பிறந்த நான்கு பெண் குழந்தைகள் மற்றும் காஸிம் என்ற ஆண் குழந்தை ஆகியோர் விடயத்தில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு இல்லை. எனினும், அப்துல்லாஹ், தாஹிர், தையிப் ஆகியோர் தொடர்பில் வரலாற்று அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. மூன்று பேரும் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் என்று சிலர் குறிப்பிடுவர். அப்துல்லாஹ் என்ற குழந்தையே தாஹிர், தையிப் என்றவாறும் அழைக்கப்பட்டாரென்று சிலர் கூறுகின்றனர். காஸிம் என்ற ஆண் குழந்தையைத் தவிர கதீஜா (ரலி) அவர்களுக்கு வேறு ஆண் குழந்தைகள் பிறக்கவில்லை என்று மற்றும் சில வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடரும் இறைநாடின்…!

Related Post