முஸ்அப் பின் ஹூமைர் (ரலி)..! – 3

  -நூருத்தீன்

அந்த இளைஞர்..!

அந்த இளைஞர்..!

திக்குத் தெரியாத காட்டில் திசைமாறித் திரியும் இளைய சமூகத்தின் இனிய மாதிரியாய் இருந்தார் அந்த இளைஞர்..! செல்வக் குவியலில் புரண்டாலும்… இறைநியதிக்கு முன்பாக அதனை துச்சமென மதித்து தூக்கி எறிந்தர்..! ஏகத்துவத்தின் நிழலில் இன்பம் கண்டார்..!

பத்ரு யுத்தம் பற்றியும் அதில் முஸ்லிம்கள் அடைந்த பெருவெற்றி பற்றியும் முன்னரேயே வாசித்தோம். வரலாறு படைத்த அந்தப் போரின்போது நிகழ்ந்த சில நிகழ்வுகளை மட்டும் நாம் இங்குப் பார்த்துவிட்டு நகர்ந்து விடுவோம். ஏனெனில் அதற்கு அடுத்து நிகழ்ந்த உஹதுப் போருக்கு நாம் விரைய வேண்டியுள்ளது.

பத்ருப் போரின் இறுதியில் பல குரைஷியர்கள் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டார்கள். அதில் ஒருவன் அந்-நத்ரு இப்னுல் ஹாரித். கெட்ட விரோதி இவன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபிக்கு எதிராகவும், குர்ஆன் வசனங்கள் மீது அவதூறு சொல்லியும் மக்காவில் அவன் இழைத்துவந்த தீமைகள் ஏராளம். ‘முஹம்மது சொல்வதையெல்லாம் நீங்கள் யாரும் கேட்கவேண்டாம். இறைவேதம் என்று அவர் அறிவிப்பதெல்லாம் பண்டைய புராணக் கதைகளே. வேண்டுமானால் அதைவிடச் சிறப்பான புத்தகம் கதையெல்லாம் என்னிடம் இருக்கின்றன’ என்று எதிர்ப்பிரச்சாரம் புரிந்து திரிந்து கொண்டிருந்தவன். குர்ஆனுக்கு எதிரான அவனது துர்ச்செயல்களைக் கண்டித்து இறைவன் குர்ஆனிலேயே எட்டு இடங்களில் குறிப்பிடுகிறான்.

போர்க் கைதிகளை அழைத்துக் கொண்டு மதீனா திரும்பும் வழியில் அல்-அதீல் எனும் இடத்தில் முஸ்லிம்களின் படை தங்கியது. அங்கு அனைத்துக் கைதிகளையும் பார்வையிட்டார்கள் நபியவர்கள். அந்-நத்ரை அவர்கள் பார்க்க, அந்தப் பார்வை அந்-நத்ரின் இதயத்தினுள் அச்சமொன்றைப் பரப்பியது. அருகிலிருந்தவனிடம் கூறினான், ‘சத்தியமாகச் சொல்கிறேன். முஹம்மது என்னைப் பார்த்த பார்வையில் என் மரணம் தெரிந்தது. நிச்சயம் அவர் என்னைக் கொல்லப்போகிறார்’

‘அப்படியெல்லாம் ஏதும் நடக்காது. நீ வீணாய்ப் பயப்படுகிறாய்’

அந்-நத்ரின் மனம் சமாதானமடையவில்லை. தனக்காக ஏதேனும் பரிந்துரை கிடைக்குமா என்று சுற்றுமுற்றும் பார்த்தான். முஸ்அப் இப்னு உமைர் தென்பட்டார். அவர் அவனுக்கு உறவினர்.

‘முஸ்அப்! உன்னுடைய தலைவரிடம் எனக்காக நீ பரிந்துரைக்க வேண்டும். இதர குரைஷியர்களை அவர் நடத்தப் போவதைப்போல் என்னையும் நடாத்த வேண்டும் எனப் பரிந்துரைத்துவிடு. இல்லையென்றால் அவர் என்னைக் கொன்றுவிடுவார் என்றே எனக்குத் தோன்றுகிறது’

அவனைப் பார்த்து முஸ்அப், ‘அல்லாஹ்வின் வேதத்தைப் பழங்காலக் கட்டுக்கதைகள் என்று அவதூறு பரப்பித் திரிந்தாய். அவனுடைய தூதர் முஹம்மதை ஒரு பொய்யன் என்று அவமானப்படுத்தினாய். முஸ்லிம்களின்மீது நீ கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகளோ ஏராளம்’

இடைமறித்தான் அந்-நத்ரு. ‘முஸ்அப்! போரின் முடிவுமட்டும் குரைஷிகளுக்கு சாதகமாய் அமைந்து நீ ஒரு போர்க்கைதியாய் அவர்களிடம் அகப்பட்டிருந்தால் உனக்காக நான் வாதாடியிருப்பேன், பரிந்துரைத்திருப்பேன், தெரியுமா? நான் உயிரோடு இருக்கும்வரை அவர்களால் உன் உயிருக்குத் தீங்கு ஏற்படாமல் காத்திருப்பேன்’

‘நான் உன்னை நம்பவில்லை அந்-நத்ரு. அது ஒருபுறமிருக்க, நான் நீயில்லை. நான் முஸ்லிம். இஸ்லாத்தை நான் ஏற்றுக்கொண்ட மாத்திரத்தில் இஸ்லாத்தின் எதிரி உன்னுடனான எனது உறவு அறுந்துவிட்டது’

நபியவர்கள் உத்தரவுப்படி அந்த இடத்திலேயே அந்-நத்ரின் தலை கொய்யப்பட்டது.

போரில் சிறைபிடிக்கப்பட்ட மற்றொருவர் முஸ்அபின் சகோதரன் அபூ அஸீஸ் இப்னு உமைர். அவரைப் பார்த்துவிட்டார் முஸ்அப். அபூ அஸீஸைக் கைதியாய் அழைத்துச் சென்றுகொண்டிருந்த அன்ஸாரித் தோழரை விரைந்து நெருங்கிய முஸ்அப், ‘கொழுகொம்பைப் பிடித்திருக்கிறீர்கள். இவருடைய தாயார் கொழுத்த செல்வம் படைத்த பெண்மணி. நன்றாகப் பத்திரமாக இவரைக் கட்டிவையுங்கள். பெரும் தொகையொன்று மீட்புத்தொகையாய் கிடைப்பது நிச்சயம்’

‘சகோதரா! என்ன இது கொடுமை’ என்று முஸ்அபை நோக்கி அலறினார் அபூ அஸீஸ். ரத்த உறவை நினைவூட்டி, ‘ஏதாவது சலுகைக்கு ஏற்பாடு செய்வாய் என்று பார்த்தால், இதென்ன ஆலோசனை’

அழகிய பதில் வந்தது முஸ்அபிடமிருந்து. ‘இறை நம்பிக்கையின் அடிப்படையில் அமையும் சகோதர பந்தம் இருக்கிறதே அது இறைமறுப்பில் மூழ்கியுள்ள இரத்த உறவைவிட எல்லாவகையிலும் உசத்தி. இதோ இவர்தாம் என் சகோதரர். நீயல்ல!’

ஆனால் அதே அபூ அஸீஸ் தெரிவித்த மற்றொரு செய்தியும் ஓர் ஆச்சரியம். சிறைபிடிக்கப்பட்டிருந்த அவருக்கு உணவு நேரத்தில் அவரது பசி தணியும் அளவிற்கு ரொட்டி அளித்து உபசரிக்கும் அன்ஸார்கள், தங்களது பசிக்கு வெறும் பேரீச்சம் பழத்தை உண்டிருக்கிறார்கள். நபியவர்களின் உத்தரவு அது. இத்தகைய உபசரிப்பு அபூ அஸீஸிற்கே சங்கடமாகி, தனக்கு அளிக்கப்படும் ரொட்டியை நபித் தோழர் ஒருவரிடம் நீட்டினால் அதிலிருந்து ஒரு சிறு துண்டைக்கூட பிட்டுக்கொள்ளாமல் அப்படியே மீண்டும் தந்துவிட்டிருக்கிறார் அவர்.

இஸ்லாமிய சகோதரத்துவத்தையும் எதிரியையும் செவ்வனே உபசரிக்கும் விதத்தையும் தெளிவாய் விளங்கி வைத்திருந்தார்கள் அவர்கள். ரலியல்லா{ஹ அன்{ஹம்.

ழழுழ

அதற்கு அடுத்த ஆண்டு உஹதுப் போர். இந்த போரைப் பற்றியும் முந்தைய அத்தியாயங்களில் பார்த்துக் கொண்டே வந்தோம்.

போருக்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. களத்தில் முஸ்லிம்களின் கொடியைச் சுமக்கும் பணியை முஸ்அப் இப்னு உமைரிடம் அளித்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம். அதை ஏந்திக் கொண்டு படையணியில் முன்னேறிக் கொண்டிருந்தார் முஸ்அப். போர் உக்கிரமாய் நடைபெற்று முஸ்லிம்கள் குரைஷிகளை விரட்டியடித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்து மலையுச்சியிலிருந்த சில தோழர்கள் போர் முடிவுற்றுவிட்டதாய்க் கருதி கீழே இறங்கி ஓடிவர, தப்பியோடிய குரைஷிப் படைகள் அதைப் பார்த்துவிட்டனர்.  தப்பியோடிய படையில் ஒரு பகுதியினர் மலையின் பின்புறமிருந்து மேலேறி அங்கிருந்து இறங்கி வந்து முஸ்லிம் படைகளைத் தாக்கத் துவங்க, திசைமாறியது போரின் போக்கு.

முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்பையும் களத்தில் நிகழ்ந்த கொடூரங்களையும் வஹ்ஷி பின் ஹர்பு வரலாற்றிலேயே பார்த்தோம். அந்தக் கடுமையான சூழலில் முஸ்அப் கொடியை உயர ஏந்தி, ‘அல்லா{ஹ அக்பர்! அல்லாஹ்வே மிகப் பெரியவன்’ என்று வேங்கையாய் உறுமிக் கொண்டு களத்தில் வலமும் இடமும் சுழன்று சுழன்று எதிரிகளுடன் போரிட ஆரம்பித்தார். நபியவர்களை நோக்கிச் செல்லும் எதிரிகளின் கவனத்தைத் தம் பக்கம் திருப்பி தானே ஒரு தனிப்படை போல் படு பயங்கரமாய்ச் சண்டை.

அப்பொழுது இப்னு காமிய்யா என்ற குரைஷி முஸ்அபை வேகமாய் நெருங்கி தனது வாளைச் சுழற்ற அது முஸ்அப் இப்னு உமைரின் வலது கையைத் துண்டித்தது. கரம் கழன்று தரையில் வீழ்ந்தது. ‘முஹம்மது (ஸல்) தூதரே அன்றி வேறல்லர்;  அவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் சென்றுபோயினர்’ என்ற குர்ஆனின் 3ஆம் அத்தியாயத்தின் 144வது வசனத்தை உச்சரித்துக்கொண்டே கொடியை தன் இடது கையில் ஏந்திக் கொண்டார்; போரைத் தொடர்ந்தார் முஸ்அப்.

ஆனால் அந்தக் குரைஷி அவரது இடது கையையும் துண்டாட, இரத்த சகதியில் வீழ்ந்தது அந்தக் கரமும். அதைப் பொருட்படுத்தவில்லை முஸ்அப். இரத்தம் பீறிட உடம்பில் சொச்சம் ஒட்டிக் கொண்டிருந்த கைகளைக் கொண்டு கொடியை தம் மார்புடன் அனைத்துக் கொண்டு, அதே வசனத்தை மீண்டும் உச்சரித்தார். அப்பொழுது மற்றொருவன் தன் ஈட்டியைக் கொண்டு முஸ்அபைத் தாக்க உயிர் நீத்தார் முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லா{ஹ அன்{ஹ.

போரெல்லாம் முடிந்து, அனைத்துக் களேபரங்களும் முடிந்தபின் வீழ்ந்து கிடந்த தம் தோழர்களின் உடல்களை பார்வையிட்டுக் கொண்டே வந்தார்கள் நபியவர்கள். அக்களத்தில் குரைஷிப் பெண்கள் நிகழ்த்திய கோரத் தாண்டவமும் நாம் ஏற்கெனவே படித்ததுதான். தாங்கவியலாத சோகக் காட்சி அது. இறந்த தோழர்களைக் கண்டு முஹம்மது நபி பகர்ந்தார்கள், ‘மறுமையில் நீங்களெல்லாம் வீரத் தியாகிகள் என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் சாட்சி பகர்கிறார்’

இறந்தவர்களை அக்களத்திலேயே நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. முஸ்அபின் உடலை முழுவதுமாய்ப் போர்த்தக் கூடிய அளவிற்குக்கூட அவரது உடலில் துணி இல்லை. அதுவும் கிழிந்துபோன கம்பளித் துணி. தலையை மூடினால் கால் மூடவில்லை. காலை மூடினால் தலை மூடவில்லை.

செல்வச் செழிப்பிலும் சுக போகத்திலும் மிதந்து கொண்டிருந்த ஓர் இளைஞர், தாய், தகப்பன், சொத்து, சுகம் என அனைத்தையும் உதறி எறிந்துவிட்டு ஏக இறைவனைத் துதித்து வாழப் புகலிடம் ஒன்று கிடைத்தால் போதும் என்று கடல் கடந்து ஓடிய முஹாஜிர், யத்ரிப் மணலில் இஸ்லாமிய விதையைத் தூவி வீடுதோறும் இஸ்லாமிய விருட்சம் வளர்ந்தோங்க வைத்து மதீனத்து வரலாற்றிற்கு வித்திட்டவர், இறைவனும் அவனது தூதரும் மட்டுமே போதுமென்று நெய்யுண்டு, பட்டுடுத்தி, ஜவ்வாது பூசித் திளைத்த அங்கங்களையெல்லாம் துண்டு துண்டாய் இழந்து விட்டு, துண்டு துணியுடன் மடிந்து கிடந்தார் முஸ்அப் இப்னு உமைர் – ரலியல்லா{ஹ அன்{ஹ.

இறுதியில் நபியவர்கள் கூறினார்கள், ‘அவரது தலையைத் துணியால் மூடிவிட்டு கால்களை இலைகள் கொண்டு மூடிவிடுங்கள்’

முஸ்அப் இப்னு உமைரின் வீர மரணத்தை நினைத்து மறுமையில் தமக்கு எந்தப் பங்கும் கிடைக்காமல் போய்விடுமோ என்று பயத்தில் நடுங்கி அழுவார் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி). ஒருமுறை அவர் நோன்பு திறக்க அவருடைய பணியாள் உணவு எடுத்து வந்தார். அதைக் கண்டு திடீரென்று பொங்கி அழுதார் இப்னு அவ்ஃப். ‘முஸ்அப் இப்னு உமைர் இஸ்லாத்தை ஏற்றபின் இவ்வுலகில் எவ்வித சொகுசையோ, நல்ல உணவையோ சுவைக்காமல் அனைத்தையும் மறுமைக்கு சேமித்து எடுத்துச் சென்றுவிட்டார். நமக்கு எல்லாம் இவ்வுலகிலேயே கிடைக்கிறதே மறுமையில் நம் பங்கு கிடைக்காமற் போய்விடுமோ’ என்ற அச்சத்தில் விளைந்த அழுகை அது. கிளர்ந்தெழுந்த துக்கத்தில் அன்று அவர் அந்த உணவைக்கூட உண்ணவில்லை.

இப்படி பயந்து அழுதது யார்? சொர்க்கவாசி என்று திருநபி (ஸல்) அவர்களால் நன்மாராயம் வழங்கப்பெற்ற பத்துபேருள் ஒருவர். நம் கண்களெல்லாம் எந்த நம்பி்க்கையில் ஈரம் உலர்ந்து கிடக்கின்றன?

ஒருமுறை கப்பாப் பின் அல்-அரத் (ரலி) சொன்னார். ‘நாங்கள் இ

இளைய சமூகத்தின் இனிய மாதிரியாய் இருந்தார் அந்த இளைஞர்..!

இளைய சமூகத்தின் இனிய மாதிரியாய் இருந்தார் அந்த இளைஞர்..!

றைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலனளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. அதன் (உலகப்) பலன்களில் எதையுமே அனுபவிக்காமல் சென்றுவிட்டவர்களும் எங்களிடையே உண்டு. முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அத்தகையவர்களில் ஒருவர். அவர் உ{ஹதுப் போரின்போது கொல்லப்பட்டார். அவரைக் கஃபனிடுவதற்கு (அவரின்) கோடிட்ட வண்ணத் துணி ஒன்றைத் தவிர வேறெதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தத் துணியினால் நாங்கள் அவரது தலையை மூடியபோது அவரின் கால்கள் இரண்டும் வெளியே தெரிந்தன.  அவரது கால்கள் இரண்டையும் நாங்கள் மூடியபோது அவரது தலை வெளியே தெரியலாயிற்று. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் துணியால் அவரது தலையை மூடி விடும்படியும் அவரது கால்கள் இரண்டின் மீதும் ‘இத்கிர்’ புல்லைச் சிறிது போட்டு (மறைத்து) விடும்படியும் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்ததற்கான இவ்வுலகப்) பலன் கனிந்து அதைப் பறித்து (சுவைத்து)க் கொண்டிருப்பவர்களும் எங்களில் உள்ளனர்’

‘ஹிஜ்ரத் மேற்கொண்டதற்கான பலனை இவ்வுலகிலேயே அனுபவிக்க ஆரம்பித்துவிட்டோமே அதனால் மறுமையில் பங்கேதும் கிடைக்காமல் போய்விடுமோ? முஸ்அப் போன்றவர்களெல்லாம் அனைத்து பலன்களையும் மறுமைக்கு என்று எடுத்துச் சென்றுவிட்டார்களே’ என்று பயமும் ஆதங்கமும் கொண்ட விசனம் அது.

இறுதியில் நபியவர்களும் தோழர்களும் மதீனா திரும்ப, பெண்களெல்லாம் தத்தம் தகப்பன், சகோதரன், கணவன் என்று விசாரிக்கத் தொடங்கினார். முஸ்அப் இப்னு உமைரின் மனைவி ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரலி). இவர் நபியவர்களின் மனைவி ஸைனப் பின்த் ஜஹ்ஷின் சகோதரி. மட்டுமல்லாது ஹம்ஸா இப்னு முத்தலிப் இவர்களுக்குத் தாய் மாமன். ஹம்னாவும் உஹதுப் போரில் கலந்த கொண்டு முஸ்லிம் போர் வீரர்களுக்கு நீர் அளிப்பது, காயங்களுக்கு மருந்திடுவது என்று பரபரப்பாய்ச் சேவை புரிந்து கொண்டிருந்தார்.

ஹம்னா நபியவர்களை நெருங்க, ‘ஓ ஹம்னா! உன் சகோதரன் அப்துல்லாஹ்வுக்காக வெகுமதி தேடிக் கொள்வாயாக’ என்றார்கள் அவர்கள். உஹதுப் போரில் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்{ம் வீர மரணமடைந்திருந்தார்.

அதைக் கேட்ட அவர், ‘நாமனைவரும் அல்லாஹ்விற்கே உரியவர்களாய் இருக்கிறோம். அவனிடமே மீள்கிறோம். அல்லாஹ்வின் கருணை அவர் மீது பொழிவதாக. அவன் அவரை மன்னிப்பானாக’ என்றார்.

‘உன்னுடைய தாய்மாமன் ஹம்ஸாவின் மீது வெகுமதி தேடிக் கொள்வாயாக ஹம்னா’ என்றார்கள் அடுத்து.

முதலில் விழுந்தது இடியென்றால் இது பேரிடி. அந்தத் துக்கத்தையும் நிதானமாய் விழுங்கிக் கொண்ட ஹம்னா அதே பதிலுரைத்தார்.

தொடர்ந்தார்கள், ‘ஓ ஹம்னா, உன் கணவன் முஸ்அப் இப்னு உமைரின் மீது வெகுமதி தேடிக் கொள்வாயாக’

இது, இந்த இழப்பு, இதில் உடைந்துவிட்டார் ஹம்னா பின்த் ஜஹ்ஷ் ரலியல்லா{ஹ அன்ஹா. அழுகை கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து வெடித்தது. ‘பெண்ணுக்குத் தன் கணவன் மீது இருக்கும் பிணைப்பு, கணவனுக்கு மனைவியிடம் உள்ளதைவிட அதிகமாகும்’ என்றார்கள் முஹம்மது நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம்.

வேங்கை போன்ற தாய்மாமன், உடன் பிறந்த சகோதரன், ஆருயிர்க் கணவன் என்று ஒரே நாளில் அனைவரையும் பறிகொடுப்பது என்பது கொஞ்சநஞ்ச சோகமா என்ன? அழுதார் ஹம்னா.

பின்னாளில் இவரைத் தல்ஹா பின் உபைதுல்லாஹ் ரலியல்லா{ஹ அன்{ஹ மறுமணம் புரிந்து கொண்டார்கள்.

உல்லாச இளைஞர்கள் ஊர்தோறும் தெருதோறும் நிறைந்திருக்கிறார்கள்தான். சரியான வெளிச்சம் அவ்வுள்ளங்களில் புக வேண்டும். அவ்வளவே! திசைமாறித் திரிந்து கொண்டிருக்கும் அவர்கள் அறிய வேண்டியது சரியான முகவரி மட்டுமே. பல்லாயிரம் கரங்கள் தியாகங்களுக்குத் தயாராகும் – முஸ்அப் இப்னு உமைரைப் போல்.

ரலியல்லா{ஹ அன்{ஹ!

Related Post